கவிதைகள்

அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம்!…. ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 தந்தையர் தின கவி மாலை……

=================================

பெற்றெடுப்பாள் அம்மா பேணிடுவார் அப்பா

உற்றதுணை அப்பா உழைப்புமே அப்பா 

நற்றவற்றால் நமக்கு வாய்த்தவரே அப்பா

நானிலத்தில் என்றும் நமக்குத் தெய்வமவரே 

 

பக்குவமாய் இருக்க பாடம் அவராவார் 

தக்கவொரு குருவாய் தானவரும் இருப்பார்

எக்கணமும் எம்மை நினைப்பிலவர் வைப்பார் 

இப்புவியில் எமக்குத் தக்கதுணை அவரே 

 

தோழேற்றி எம்மை தூக்கிச் செல்வாரப்பா 

சுமை தாங்கியாக வாழ்ந்திடுவார் அப்பா 

ஆழமுடை அன்பை அகநிறைப்பார் அப்பா 

அகிலமதில் வணங்கும் அன்புத் தெய்வமவரே

 

கற்றவர்கள் முன்னே நிற்கவைக்க நினைப்பார்

கற்பவற்றை முறையாய் கற்கவழி சமைப்பார் 

மற்றவர்கள் மதிக்க வாழுவென உரைப்பார் 

மாநிலத்தில் நாளும் வணங்குந் தெய்வமரே 

 

நீதிநெறி வழுவா வாழ்கவென மொழிவார்

நேர்மையினை நெஞ்சில் நிறைக்கவென உரைப்பார் 

பாதையிலே நிமிர்ந்து நடக்கவெனப் புகல்வார்

பகலவனாய் என்றும் ஒளிர்ந்திடுவார் அப்பா 

 

வீண்வாதம் வில்லங்கம் வெங்கோபம் விரும்பார்

வெந்தணலாய் வார்த்தைகளை வீசுவதை வெறுப்பார் 

மாண்பகலா வழியினையே வரமெனவே நினைப்பார் 

மாநிலத்தில் விடிவிளக்காய் வாழ்பவரே அப்பா 

 

பஞ்சமா பாதகங்கள் பக்கமவர் பார்க்கார் 

பகுத்துண்டு ஓம்புவதை மனமிருத்த நினைப்பார் 

கஞ்சநிலை நஞ்செனவே கனன்றெழுந்து உரைப்பார்

கண்காணும் தெய்வமாய் காணுகிறார் அப்பா

 

மருத்துவராய் வந்தாலும் வழக்குரைஞர் ஆனாலும் 

கணக்காளார் ஆனாலும் கலைநிபுணர் ஆனாலும் 

நினைத்தவுடன் செயலாற்றும் நீண்டசெல்வர் ஆனாலும்

தலைக்கனத்தை வாழ்வினிலே தகர்த்தெறிதல் பண்பென்பார் 

 

ஆன்மீகம் அவருரைப்பார் அறிவியலும் அவருரைப்பார்

அருந்துணையாய் அவரிருப்பார் அவரணைப்பில் நாமிருப்போம் 

ஆண்டவனின் உருவாக ஆனவரே அப்பாதான்

அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …… அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.