கவிதைகள்

வடிவழகா வேலவனே வழிசமைப்பாய் எங்களுக்கு!…. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

காவடிகள் ஆடிவரும் கந்தனது சன்னதியில்
கரங்குவித்து அடியவர்கள் கந்தன்முகம் காணநிற்பார்
ஆறுமுகன் விதிவர ஆதவனும் வரவேற்பான்
அரோகரா எனுமொலியோ ஆகாயம் தொட்டுவிடும்

ஆதவனின் ஒளியணைக்க ஆறுமுகன் அருள்சுரந்து

அசைந்துவரும் தாமரையாய் அரன்மகனும் வந்திடுவார்
தேரடியில் திரண்டிடுவர் தெரிசனத்தைக் காண்பதற்கு
ஆறுமுகன் தேரேற அழகுடனே வந்திடுவார்
 
ஊரெல்லாம் நல்லூரான் உவந்துவரும் தேர்காண
வெண்மணலில் விதைத்துவிட்ட  நன்மணியாய் நிறைந்திருப்பார்
தேர்வடத்தைத் தொட்டுவிட்டால் செய்தவினை அகலுமென
தொட்டுவிட  அடியார்கள் கிட்டக்கிட்டச் சென்றிடுவார்
 
தேரடியில் மலையாக தேங்காய்கள் குவிந்திருக்க
கூடிநிற்கும் அடியார்கள் குறையகற்ற உடைத்திடுவார்
சிதறிவிடும் தேங்காய்போல சிக்கலெலாம் ஆகவென
சிந்தையிலே அடியார்கள் செறிவாக நிறைத்திடுவார்
 
வீதிவரா பலவடியார் வீடிருந்து பார்ப்பதற்கு
நாடிருக்கும் தொலைக்காட்சி நற்றுணையாய் ஆகிவிடும்
வானொலிகள் வருணனனை மனமிருத்த வந்துநிற்கும்
வடிவேலன் தேரசைந்து வண்ணமுற வீதிவரும்
 
வந்தகாட்சி மனமதிலே பதிந்துபோய் இருக்கிறது
இன்றுகாட்சி மாறுபட்டு வேறாகி நிற்கிறது
கந்தனது பெரியதேர் அசையாமல் இருக்கிறது
எந்தவித தளப்பமின்றி உள்ளேதேர் பவனிவரும் 
காலமதைக் கருத்திருத்தி கந்தன்தேர்  ஏறிடுவார்
கந்தனது அடியார்கள் கருத்திருத்தி உளம்நிறைவார்
விடுதலையை வேலவனார் விரைந்தெமக்கு தருகவென
அடிபரவி நிற்பதுவே அடியவர்க்குக் கதியாச்சு. 
தீராத வினையகற்ற செந்திருவாய் அமைந்தவனே
பேரிருளாய் ஆகிநிற்கும் பெருநோயை அழித்துவிடு
ஊர்முழுக்க ஓடிவந்து தேரிழுக்கும் காலமதை
உன்னருளால் ஆக்கிவிடு உமைபாலா சண்முகனே 
 
திருப்புகழைப் பாடி தெருவீதி வரவேண்டும்
திருக்கூட்டம் தேரதனை சிறப்பாகச் சூழவேண்டும்
வடந்தொட்டு தேரிழுத்து வரவேண்டும் வீதியிலே
வடிவழகா வேலவனே  வழிசமைப்பாய் எங்களுக்கு

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் — அவுஸ்திரேலியா .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.