கவிதைகள்
உறவின் இழப்பில் உழலும் நண்பருக்கு!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
உற்ற உறவுகள் உதிரும் போதெலாம்
அற்ற குளத்தில் அருநீர்ப் பறவைபோல்
பெற்றோரினும் பேரெழும் பாசமாய்
பற்றிய உறவெலாம் பதைத்திட மாளுதே
வான்செல்லும் வந்தமைந்த உறவினை
நான் நின்றனுப்பிடலும் வீணென்றாகிட
வானூர்தி சென்றும் வழியனுப்பாமலே
யான் படுதுயரென யாரிடம் சொல்வீரோ
இயற்கையாய் வந்த காலனை பழிப்பதா
செயற்கையாய் நிற்கும் நோயை கடிவதா
வயிற்றுப் பிழைப்பிற்காய் வந்திங்கிருக்க
பயிற்றுவித்தவன் பாடென்று நாம் ஓய்வதா
சிலந்தி வலையில் சிக்குண்ட பூச்சியாய்
நலந்தனை நாமும் இழந்திங்கே இருக்க
பலவென சொந்தங்கள் பறிபோகும்போது
நிலமதில் வாழ்வின் பொருளேது நண்பா!
-சங்கர சுப்பிரமணியன்.