கவிதைகள்

ஆண்டவனுக்கு ஐந்தொழில் இல்லையா?…. ( கவிதை ) …. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.

எங்கும் கொரோனா என்பதே பேச்சு

எல்லா உலகமும் பதற்றமாய் ஆச்சு

சுங்கக் கடவைகள் சுறுசுறுப்பாச்சு

சோதனை கணத்திலே உயிரே போச்சு

 

சொந்தக் காரர் எதிரே வந்தாலும்

சுகம் விசாரிக்கவும் பயப்படும் சோகம்

எந்தக் காலமும் வந்ததே இல்லை

இதுவோ உலகின் அழிவுக்கு எல்லை?

கையை குலுக்கினோம் கட்டிப் பிடித்தோம் 

காதருகே ரகசியம் பேசி மகிழ்ந்தோம்

சைகை காட்டித் தழுவிக் களித்தோம்

தள்ளிநின் றிப்போ பேசவும் தயக்கம்

 

போருக்கு நடுவிலும் ஊருக்குள் இருந்தோம்

புலத்தினைத் பிரிந்தும் உறவினைத் தொடர்ந்தோம்

பாருக்குள் பற்பல நாடுகள் புகுந்தோம்

பங்கருக் குள்ளேயும் பலரோடு ஒளித்தோம்

 

சுற்றங்கள் ஒன்றாய் இருப்பது வளப்பம்

சோகத்தில், சுகத்தில் கூடுதல், வழக்கம்

பெற்றோரும் பிள்ளையை அணைக்கவே தயங்கும்

பேரிடர் வேறுண்டா இப்போது வரைக்கும்?

 

ஆயிரமா யிரமாய் நடக்கின்ற மரணம்

அடுத்தடுத்து உறவுகளை இழக்கின்ற துயரம்

நோயிலே மூப்பிலே போயிடில் சகஜம்

நுண்ணுயிர் தொற்றின்னால் சிறுக்குதே உலகம்

 

நாடுகள் எலாம்பிணக் காடுகள் ஆயின

நண்பரின் உடலங்கள் பாராமல் போயின

வீடுகள் சிறைகளாய் கூடுகள் ஆயின

வேற்றவர் போலவே குடும்பங்கள் மாறின

 

அதர்மம் உலகில் தலைவிரித் தாடினால்             

ஆண்டவன் எடுப்பான் அவதாரம் என்கிறார்

அதனால் தானிப்படி நடக்குதாம் என்கிறார்

அவன்தொழில் அழிப்பதா? ஐந்தொழில் அல்லவா?

 

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.