“புலம்பெயர் வாழ்வு”….. ( கவிதை ) …… கலாநிதி மு. ஸ்ரீ கௌரி சங்கர்.
நேற்று இன்று நாளை: புலம்பெயர் வாழ்வு:
கலாநிதி மு. ஸ்ரீ கௌரி சங்கர்
( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய கவிதா மண்டலத்தில் வாசிக்கப்பட்ட கவிதை )
என்னை ஈன்ற அன்னையையும் என்னை வாழவைக்கும் தமிழ் அன்னையையும் வணங்கி
நடுமீனாம் பாடுமீன் அய்யாவின் அனுமதியுடன் கவியுரைக்க வருகிறான் இவண் ஸ்ரீ கவுரிசங்கர்.
எனையேன் முதலில் அழைத்தாய் சபை முதல்வா?
இவன் முடிப்பான் முற்றுப்புள்ளிக்கு முதல் என்று நினைத்தாயோ?
பாடுமீன் சுறாமீனாக மாறுமுன் நேரத்துடன் நேர்த்தியாக ஆறுநிமிடத்தில் அமைய விரும்புகிறேன்….
கவிமழை பொழிய கார்மேகமாக சூழ்ந்திருக்கும் கவிப்புயல்களே! கருத்துச் சூறாவளிகளே !
காத்திரமான வணக்கங்கள் பலப்பல
நேற்று இன்று நாளை;
தடையரத்தாக்குது எம் வாழ்வை.
நேற்றைய நிகழ்வு இன்றயை நிஜம் இது நாளைய பயம்
இதுவே நிதர்சனம்;
சற்றே சிந்தித்தேன்; சரிந்து படுத்து யோசித்தேன்
மலைமகளை வருடிச்செல்லும் மேகம்,
அவளை குளிப்பாட்டும் அருவி,
காலை நனைக்கும் கடல் அலைகள்,
கவிதை பாடும் காற்று, அதில் ஊஞ்சல் ஆடும் மரங்கள்,
அடித்தசெல்லில், அரசின் உருட்டலில்,
அய்யகோ!! அடிபட்டுபோனதே இவை!!
இலங்கையும் வேண்டாம்; ஈழமும் இனி வேண்டாம் ;
என்றளவில் பெயர்ந்தேன் புலம்
கட்டிடங்கள் விண்ணை முட்ட, காசுபணம் காலடியில் கிட்ட
வாகனங்கள் வரிசையில் பறக்க, வராத மொழியும் வாயில் வந்திறங்க:
காரிகைகளின் காத்திரமான அணிவகுப்பு, கடகடவென வயிற்றைப்பிசைய,
இதுதாண்டா இன்பலோகம். இறுக்கிப்பிடி அம்பி என்றது மனம்.
காலங்கள் கடகடவென கடுகதியில் ஓடிட
காட்சிகள் படபடவென சடுதியில் மாறிட
கண்டேன் சீதையையென
கரம்பிடித்தேன் என்னவளை சடசடவென.
புலம்பெயர் வாழ்வின் பெருமைகூற,
ஒவ்வொருஇரவும் ஓராயிரம் கதைகூற,
இன்பவாழ்வின் அத்தியாயங்களை இனிதே ஆராய்ந்தோம்.
அப்பா அம்மா ஆனதை எண்ணி,
கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்தோம், கோபுரத்தில் கொண்டாடினோம்.
புலம்பெயர் வாழ்வும் ஒரு வாழ்வா; குடும்பத்தில் நித்தமும் சண்டையாம் ?
கோக்குமாக்கு கோபாலின் உளறல் அது.
புலம்பெயாறமுடியாதவனின் புலம்பல் இது.
எம்மை பார் எமது காரைப்பார்
என் வீட்டைப்பார் வீட்டின் வனப்பைப்பார்.
இதுதெரியாமல் இளிச்சவாயன் உளறுகிறான், அதுமட்டுமா!
வாழத்தெரியாதவனின் வயித்தெரிச்சல் என்றேன் நான்.
ஹா ஹா ஹா ஹா………..
நமுட்டுச்சிரிப்புடன் நகர்ந்தது காலம்,
நிற்க நேரமில்லை என்றாலும்,
நிஜங்களின் நிதர்சனம் உணாத்தியது உண்மையை.
கடனட்டையே கடவுளாக, வாழ்வோட்டமே அதுவென மூழ்க
வீட்டுக்கடன் வீரியம் கொண்டெழ, கார்கடன் காலைவார
வாரஒன்றுகூடல் வருட நிகழ்வாக,
வேலைத்தளத்தில் உத்வேகம் குறைய,
வேண்டாத ஏச்செல்லாம் இலவசமாய் வாங்க,
பிள்ளைகளின் படிப்பு, புடிபடாத டியூஷனாக,
வாயில்நுழையாத பெயரெல்லாம் வியாதியாய் வந்துநிற்க,
வாய்பேசா ஜீவனே ! பாராய் இந்நிலையை!!
நம்மைவிட நீ எவ்வளவோ மேல்.
மூக்கில்லாச் சூர்ப்பனகை மூக்குத்தி கேட்டாளாம்,
முக்கிமுக்கி பார்த்தாலும் மூக்குச்சாத்திரம் தொட்டாலும்,
முட்டுச்சந்தில் முட்டும் கலை தான் எம் நிலை.
பந்தியில் பலமான விருந்து, தொந்தியில் தடவுடா மருந்து.
இதுவா புலம்பெயர் வாழ்வு??
சோக்கான பயணம் uturn போட்டு சொதப்பியதேன் ?
இதனால் ஓன்று நிஜம்; அது கற்பூரமமில்லாச் சத்தியம்.
குடும்பத்தில் குழப்பம், கும்மியடிக்கிறது நித்தம்.
இதுபோதும் சாமி என்றபோது வந்தது வைரஸ் வீழ்ந்தது வையகம்.
கொல்லைப்புறத்தால் வந்தது கொரோனா.
எல்லைகள் மாறியது எம்வீட்டில், தொல்லைகள் ஏறியது எம்நாட்டில்.
மிளகுரசமும் முகக்கவசமும் கட்டாயம், வந்தால்
மஞ்சள் தண்ணியால் மந்திரிப்பது நிச்சயம்.
அஸ்ட்ராஸினேகாவோ ஆளைமயக்கும் ஹன்சிகாவோ;
பைசரோ பாட்டிவீட்டு கபசுரநீரோ;
மோடோனாவோ மடோனாவோ;
ஏத்து ஏதோஒன்றை! என்றநிலை வரமா சாபமா?
ஏட்டுப்படிப்பு படித்தோர் எடுத்துரைப்பீர் எம்மவர்க்கு.
பள்ளியில் படிப்பில்லை, பக்கத்துவீட்டோடு உறவில்லை
வேலை இல்லை, வெட்டிப்பேச்சும் இல்லை
வேப்பிலையோடு சாமியாடுகிறான் சாமான்யன்.
கிட்டவந்து செய்த கட்டிப்பிடி வைத்தியம்,
எட்ட நின்று சொல்லுது பைத்தியம் என்று.
புலம்பெயர்வாழ்வை புளுகி வைத்தவர்கள்,
இன்று அஞ்ஞாதவாசத்தில் அழுகிப்போகிறார்கள்.
முகக்கவசம் இல்லையா? மூச்சை அடக்கு.
தேவை இல்லையா? தெருவில் இறங்காதே.
கண்ணுக்குத்தெரியாத கிருமியுடன்
கபடி ஆடும் நிலைதான் இன்று.
நன்று நன்று; நகைப்புடன் நகர்கிறது காலம்.
எங்கள் இன்றைய நிகழ்வுகள்; எமது நாளைய பயங்கள்.
முகமில்லா மனிதர்களுடன் மந்திரித்துவிட்ட உறவு,
அண்மித்த உறவுகள் அந்நியமாகும் துறவு.
இன்டர்நெட்டில் இடியப்பம் சுடும் நிலை;
வெபேக்ஸில் வேர்க்கடலை வறுவல்;
சூமில் வரும் சோறு கறி; சூடில்லைஎன்ற்றால் தூர ஏறி.
வீட்டிலில்லை அன்னியோன்யம்,
விருந்தினர் என்றால் ஐயோ சூனியம்.
சொந்த வீட்டில் ஹோட்டல் வாழ்க்கை,
எந்த விசயமும் வேண்டுது அறிக்கை.
புலம்பெயர் வாழ்வு; போதுமடா சாமி.
கைக்காசோ கரைகிறது, கவலையோ நிறைகிறது.
மனைவி மக்களுடன் மகிழ்வான வாழ்வு மங்குகிறது.
கலகலவென சிரித்துப்பேசினான் அன்று,
கப்சிப் என்று வாயை பொத்துகிறான் இன்று.
கண்ணுக்குத்தெரியாத ஊடகத்தில் கரைந்து போவான் நாளை.
மீண்டுமொருமுறை வேண்டாம் இந்த சோதனை.
ஆண்டபரம்பரை ஆளவேண்டும், என்று வீரவசனம் பேசும் வீணர்களே!
உறவுகளின் புனிதத்தை உணருங்கள்!
ஊரின் பெருமையை உணர்த்துங்கள்!
உருப்படியாக மதியை உருட்டுங்கள்!
வாய்ச்சவுடாலை விட்டொழியுங்கள்!
அதனால்,
வரட்டும் உருப்பட்ட உலகம்,
விதைத்த விழுமியங்கள் வீரியம் செறிக்கட்டும்.
வாய்ப்புக்கு நன்றி;
வாழ்க வளமுடன்; வளர்க தமிழுடன்.