தமிழினம்!…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
ஆகஸ்ட் மாதம் பதினான்காம் நாள் சனிக்கிழமையன்று (14-08-2021)
மாலை ஆறுமணியளவில் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஜூம் செயலி ஊடாக மாபெரும் கவியரங்கை
நடத்தியது. அக்கவியரங்கில் நான் வடித்து பாடிய கவிதைகளை கீழே தந்துள்ளேன்.
இக்கவிதைகளுக்கு கருப்பொருளாக நான் கையாண்டது பாரதிதாசன் பாடலான “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” என்ற பாடலும் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே” என்ற மகாகவி பாரதியார் பாடலும் ஆகும்.
நன்றியாக கவிதைகளின் முடிவில் அவர்களது பாடல் வரிகளை இணைத்து முடித்துள்ளேன்.
கன்னித் தமிழில் என் எண்ணமதை குழைத்து வண்ணக்கலவையால்
தூரிகை கொண்டு எழதிய நேற்று
இன்று நாளை என்ற ஓவியத்தின் தலைப்பு தமிழினம்.
இந்த தமிழினம் என்ற தலைப்பில் இரண்டு கவிதைகளில் முதல் கவிதை இதோ!
சூதும்வாதும் சூழ்பகையும் நம்மை
சூழ்ந்துநின்ற போதும் – நேற்று
சூழ்ந்துநின்ற போதும் – இன்று
மதியின் வலிமையால் வாழ்வை நாளை
வென்றிட மாட்டோமா – அன்பே
வென்றிட மாட்டோமா?
வாழும்நாளிலே நேற்றைபோலவே
தமிழினம் சிறக்க – இன்றும்
வீறுடன் நடக்க – நாளை
எனது தமிழ் இனத்தை நானும்
இவ்வழி காண்பேனா? – அன்பே
இவ்வழி காண்பேனா?
இலக்கியம் மிகுந்த தமிழினம் நேற்று
சங்கம் வளர்த்ததே – இன்றும்
சங்கம் அமைக்குதே – நாளை
பொங்கும் நற்றமிழ் பொழியும் வழியிலே
புகழை சேர்த்திடாதோ – அன்பே
புகழை சேர்த்திடாதோ?
தங்கு தடையின்றி தமிழிர் வாழ்விலே
துயரற்ற நேற்று – பற்பல
துயர் சூழ்ந்த இன்று – நாளை
தமிழினம் வாழும் முறைக்கொரு வழியை
இன்றே சொல்லாதோ? – அன்பே
இன்றே சொல்லாதோ?
சூதுவாதும் சூழ் பகையும் நேற்று
சூழ்ந்து நின்ற போதும் – இன்று
சூழ்ந்து நின்ற போதும் – நாளை
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா – எமக்(கு)
இன்பம் சேர்க்கமாட்டாயா? நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே
அல்லல் நீக்கமாட்டாயா?
சூதுவாதும் சூழ்பகையும் நம்மை
சூழ்ந்து நின்றபோதும்!
இதோ இரண்டாவது கவிதை!
இன்று ஒருநாள்தான் என்அன்பே
உன்னுடன் நான் இருப்பேன்
நேற்று என் இனமடைந்த துயரம்
நாளையும் தொடர விடேன்
இன்று நினைக்கையிலே என்அன்பே
உள்ளம் மகிழுதடி
நேற்று நடந்ததைப்போல் நாளை
இன்பம் தொடருமடி
இன்று நம்வாழ்வினிலே பொங்கிடும்
நலன்பல சேருமடி
நேற்று தோள் உயர்த்தியதால் நாளைநம்
பெருமை கூடுமடி
வள்ளுவன் கம்பனென்று நேற்றைய
வளம் நம்மில் இருக்குதடி
இன்று நம்மினமுணர நாளையும்
தீந்தமிழ் இனிக்குமடி
நேற்று தமிழினமும் உயர்ந்ததை
இன்று நம்மினமறியும்
நாளையும் உயர்ந்துநிற்க
நல்வழி நன்றாய் தெரியுதடி
வீழ்ந்தது நேற்றென்று சொல்
மண்ணில் வீரமறவர்களாய்
வீழ்ந்திடினும் இன்று வீரத்
தழும்பு தெரியுதடி
தழும்பு இருக்கும்வரை மனதில்
தாகம் இருக்குமடி
தழும்பு மறைகையிலே உடலும்
தணலில் எரியுமடி
இன்று ஒருநாள்தான் என்னன்பே
உன்னுடன் நானிருப்பேன்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரியவந்தாய்
இன்று ஒருநாள்தான் என்னன்பே
உன்னுடன் நானிருப்பேன்!
நன்றி, வணக்கம்.
-சங்கர சுப்பிரமணியன்.