சில தினங்களுக்கு முன் வலையொளியில் அஸ்ஸாமிய பாடகி தீப்லினா தேகா பாடிய அஸ்ஸாமிய பாடலொன்றைக் கேட்டேன்.
மொழி தெரியாவிட்டாலும் அப்பாடல் என்னை ஈர்த்தது. அதைப் பாடியவரின் முகபாவங்களும் உடல்மொழியும் அப்பாடலை என்னால் உணரவைத்தது.
நான் எனது வரிகளில் கவிதையொன்றை வடித்தேன். அதற்கு “வந்தது யார்?” என்ற தலைப்பையும் தந்தேன்.இதோ அந்த கவிதை.
வந்தது யார்?
தொடர்வண்டி நிற்க
சீருடையில் இராணுவ வீரனாக கீழே நான்
இறங்க
இறங்கிய என்னைநோக்கி ஓடோடி வந்தாள்
என்னை மணக்க இருந்தவள் மயங்கி நின்றாள்
ஆறுமாதத்துக்குள் வரவேனென்றேன்
மணமுடிக்க வந்துவிட்டேன்
மங்கையின் ஒருகாதை நான் பார்க்க
அங்கே காதணி இல்லை
அவசரமாய் வந்ததால் மறந்தேனென்று
கண்களால் சொன்னவளை நான் பார்க்க
நாணத்தால் என்மார்பில் சாய்ந்தாள்
சாய்ந்தவளை அழைத்து நான் வெளியேற
காத்திருந்த இராணுவ வாகனமேறினேன்
கடைவீதி இறங்கி காதணி வாங்கினேன்
அவளிடம் கொடுக்க அகம் மகிழ்ந்தாள்
முத்தமிட முயன்று இதழை நாடியபோது
உதட்டை கையால் மறைத்து தடுத்தாள்
நான் பொய்க்கோபம் காட்ட வாடினாள்
வாடியமுகத்தோடு என்னை தொடர்ந்தாள்
தலையைக்கோதி மடியில் கிடத்தினாள்
என் கைகோர்த்து கோபம் குறைத்தாள்
கோபம்தணிய வாகனத்தில் பயணித்தோம்
வீதியின் குறுக்கே நின்ற கூட்டம் தடுக்க
இறங்கிச் சென்று பாரத்துவர முயன்றேன்
போகவேண்டாமெனச் சொல்லி தடுத்தாள்
ஒரேநொடி என்று அவளை விட்டகன்றேன்
கூட்டத்தை விலக்கிப்பார்த்து அதிர்ந்தேன்
விபத்தில் இறந்து பிணமாகக் கிடக்கிறாள்
தோளில்சாய்ந்து என்னொடு பயணித்தவள்
குருதிவெள்ளத்தில் கோரமாய் கிடக்கிறாள்
வாகனத்தை திரும்பிப்பார்த்து வியந்தேன்
என்னொடு வந்தவளோ அங்கே இல்லை
என்னோடு வந்தது யார்?
இங்கே இறந்து கிடப்பது யார்?
என் மார்பில் சாய்ந்திருந்தவள் யார்?
இப்போது இங்கு மடிந்து கிடப்பது யார்?
யாருடன் பேசி இன்புற்றுருந்தேன்?
யார்மடியில் தலை சாய்த்திருந்தேன்?
யாரை கைகளில் தூக்கியபடி இப்போது
நடக்கிறேன்?
விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனமும்
அவள் காதில் வடிந்த கொண்டிருந்த குருதியும்
பதிலை கண்ணீராய் என் கண்களில் தந்தன!
-சங்கர சுப்பிரமணியன்.
நன்றி:
தோலிசா அஸ்ஸாமிய பாடலைப்பாடிய பாடகி தீப்லினா தேகா.