நலிவுற்ற என் இனமே?…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
பாசம் எங்கிருக்கிறது எனக்கேட்டது
என்னிடம் ஒருகுரல்
தான் தின்றதோ இல்லையோ தெரியாது
தன்வாயில் இரையைக் கவ்வியவாறு
தொலைதூரமிருந்து பறந்து வந்து
கூட்டில் வாய்பிளந்து காத்திருக்கும்
குஞ்சுகளுக்கு ஊட்டுவதில்
நான் பாசமதைக் கண்டேன் என்றேன்
அது இயற்கை படைப்பில்
பறவையிடமும் பாலூட்டியிடமும்
மாற்றமுடியா ஒன்றென்றறிவாய்
மாற்றம் நிகழும் மானிடப்படைப்பில்
மட்டிலா பாசம் பகரென்றது அக்குரல்
அவன் உண்டானோ இல்லையோ
சுடுமணல் சூழ்ந்த பாலைநிலத்தில்
வாழவேண்டிய இளமை வாழ்வில்
உணர்வுகள்ஒழித்து உதிரமும் சுண்ட
வாழ்வினைத் தொலைத்து வயதும் முதிர
பெற்றோர் என்றும் பெண்டாட்டி
பிள்ளைகள் என்றும்
தமக்கை தங்கை அண்ணா தம்பி
அகன்ற சொந்தங்கள் அல்லலின்றிருக்க
அவன் படும் துயரங்களுக்கிணை
இவ்வகன்ற உலகில் பாசமும் உண்டோ
என்றே இயம்பி எதிர்பார்த்திருந்த வேளை
அமைதி மட்டுமே அங்கு நிலவ
பிழையென மறுத்த அமைதியா
என எண்ணியபோது விம்மல் தொடர
விலக்கவும் முடியா அழுகுரல் கேட்டேன்
எங்கோ மறைந்த அதன் பதில்தான் அழுகையோ?
நானேன் அழுகிறேன் நலிவுற்ற என் இனமே?
-சங்கர சுப்பிரமணியன்.