கவிதைகள்

அனைவருக்கும் ஆனந்தம் அருகில்வந்து அமர்ந்துவிடும்!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

எண்ணியவை நிறைவேற

எல்லோரும் விரும்புகிறோம்

மண்ணிலே பலகாலம்

வாழுதற்கும் விரும்புகிறோம்

புண்ணியத்தைத் தேடுதற்குப்

பொழுதினைநாம் தேர்ந்தெடுக்க

எண்ணுவதை  எம்மனது

இடங்கொடுக்க மறுக்கிறதே !

 

குறைசொல்லி குறைசொல்லி

குணமெல்லாம் இழக்கின்றோம்

மறைவாக வாழ்வதிலே

மனத்தினையும் செலுத்துகிறோம்

நிறைவான செயல்பற்றி

நினைத்துவிட மறுத்துவிட்டு

கறைபடிந்த காரியங்கள்

கரிசனையாய் செய்கின்றோம் !

 

பழமரங்கள் சுவைகொடுக்கும்             

பயன்பற்றி நினைப்பதில்லை

பழமுண்டு மகிழ்வாரை

பார்த்துஅவை முறுவலிக்கும்

மரமென்று விமர்சிப்போம்

மரமழிக்க முயன்றிடுவோம்

மரத்துநிற்கும் எம்மனத்தை

மாற்றுதற்கு மறுத்திடுவோம் !

 

கோவிலுக்குச் சென்றாலும்

குழறுபடி பலசெய்வோம்

சாமிவந்து தடுத்தாலும்

சமாளிக்க நாம்முயல்வோம்

தூய்மைபற்றிச் சொன்னாலும்

தூக்கியே எறிந்திடுவோம்

பேய்மனதை வைத்தபடி

பித்தேறி நிற்கின்றோம் !

 

ஆண்டவன் படைப்பினிலே               

அனைத்துமே நல்லனதான்

ஆக்கமாய் யோசித்தால்

அகிலமே மகிழ்ச்சியுறும்

அடிமனதில் படிந்துநிற்கும்

அழுக்கதனை போக்கிவிடின்

அனைவருக்கும் ஆனந்தம்

அருகில்வந்து அமர்ந்துவிடும் !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.