இயற்கை இறைவனை துதிப்போம்!… ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
இறைவன் இருக்கிறானா என்றவரிடம்
இல்லை என்று சொல்லவில்லை நான்
ஆம் இருக்கிறார் என்றேன் உண்மையை
விடாது என்னை அவரும் எங்கே என்றார்
மாந்தர் வாழ்வின் ஆதாரமாய் இருக்கும்
மழைதனைப் பெய்து நீரினை கொடுக்க
மலைமுகடுகளில் கார்மேகமய் நின்றே
காட்சியளிப்பதுதான் அவர் என்றேன்
இறைவனைப் பேரொளி என்கின்றனரே
அதுவும் உண்மைதான் என்று சொன்னேன்
அவ்வொளியால் நமக்கென்ன பயனென்று
ஆர்வத்துடனே அவரும் எனைக்கேட்டார்
இறைவன் ஆதவனாய் வானில் இருப்பதும்
பயிர்வளர உதவி துணையாய் நிற்பதும்
உணவைக் கொடுத்து இம்மண்ணில் வாழ
உதவியாய் நிற்பது பயனன்று யாதோ
மேலுருக்கும் இறைவனெல்லாம் நாம்வாழ
கீழிறங்கி வந்து நம் வாழ்வை வளப்படுத்த
கீழே அமைதிகாக்கும் இறைவனை துதித்து
மேலே போகவேண்டுகிறார் அமைதிகாண
கண்ணில் தெரியும் இறைவினை விட்டு
கருவறை இருப்பவனை துதிப்பதுபோல்
மண்ணுலகில் வாழும் மாமனிதர் எல்லாம்
இயற்கை இறைவனை துதித்து வாழ்வோம்!
-சங்கர சுப்பிரமணியன்.