Featureநிகழ்வுகள்

தமிழீழ மாவீரர் நாள் – கார்த்திகை 27, தேசிய நினைவேந்தல் குறித்து தமிழீழ மக்களுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு விடுக்கும் அழைப்பு!

வீட்டு வாசல் படி இறங்கி முற்றத்துக்கு வாருங்கள். தத்தமது வீட்டு முற்றங்கள் தோறும் எரியட்டும் பொதுச்சுடர்! 
தமிழ் மக்கள் இன்று ஒரு அரசு அற்ற தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்கள் தங்களுக்கென்று 2009க்கு முன்னர் இருந்ததைப் போன்ற தமிழீழ சுகாதார சேவைகள் கட்டமைப்பையோ, தமிழீழ மருத்துவத்துறை கட்டமைப்பையோ, நீதி நிர்வாகம், சட்ட ஒழுங்குகள் கட்டமைப்பையோ கொண்டிராத கையறுநிலையில், எமது மக்களை கொடிய நோய் தொற்றுப் பரவலிலிருந்து பாதுகாக்க வேண்டிய தார்மீகக் கடமையை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உணர்ந்து கொள்கிறது.
உலகளாவிய ஒரு கொள்ளை நோய்த் தொற்றுக் காலத்தில் எமது மக்களை பொதுவெளியில் பெருந்திரளாக ஒன்று கூடி தமிழீழ தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தலைக் கடைப்பிடிக்குமாறு கேட்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
வழமை போன்று இம்முறையும் வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரத்தியேகமாக திருக்கோவில் அமைக்கப்பட்டு கருவூலத்தில் மாவீரர் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்நாள் எழுச்சி நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படும். சமநேரத்தில், தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்காமல் வாசல் படி இறங்கி முற்றத்துக்கு வாருங்கள். முற்றத்தில் வாழைத்தண்டுகளில் பொதுச்சுடருக்கான ஏற்பாடுகளை செய்து தமிழ்த் தேசிய இனத்தின் மாவீர ஆத்மாக்களை நினைந்துருகி மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு விளக்கேற்றுங்கள். கைப்பேசிகளில் மாவீரர் உறுதியுரைப் பாடலை ஒலிக்க விடுங்கள். முடிந்தால், ஒவ்வொரு கிராமங்களிலும் அக்கம் பக்கம் என்று வசிக்கும் மாவீரர் – போராளிக் குடும்பங்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் உங்கள் சூழலுக்கேற்ப ஒரு வீட்டு முற்றத்தையோ அல்லது ஊரின் ஒரு பொது இடத்தையோ தேர்வு செய்து அங்கு சிறு குழுமமாக ஒன்றுகூடி மாவீரர்களை நினைவேந்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அதேவேளை தமிழர் தாயகத்தில் உள்ள துயிலுமில்லங்களில் நடைபெறும் நினைவேந்தல்களில் துயிலுமில்லங்களுக்கு அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்தந்த துயிலுமில்லங்களுக்குரிய ஏற்பாட்டாளர்களின் அறிவுரைகள், ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடித்து நினைவேந்தல்களில் கலந்துகொள்ளவும்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
தலைவர் கோ.ராஜ்குமார் (0094 77 854 7440)
செயலாளர் தி.நவராஜ்,
ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.