ஈழத்தமிழரின் தொன்மையான நூல் சரசோதி மாலை!
ஈழத்தமிழர் வரலாற்றில் பதிவிலுள்ள தொன்மையான நூல் 12 ஆம் நூற்றாண்டில் அதுவும் பொலநறுவையில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் அது தொடர்பான போதுமான ஆராய்ச்சிகள் இதுவரை தமிழர் தரப்பால் செய்யப்படவில்லை.
இதனை தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்காக எடுத்து ஆய்வு செய்யவேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு , புலமைப்பரிசில்களை வழங்கி புலம்பெயர் தமிழர் சமூகம் ஆதரவு கொடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் வலியவர்களின் காலத்திற்கேற்ற பதிவுகளே வரலாறாகி – அதற்குள் நாமும் மூழ்கி – மனித குல வரலாற்றின் வளர்ச்சியை அறிவியல் ரீதியாக அணுகாத கருத்துக்களே விதைக்கப்பட்டு, குழம்பிய குட்டையிலே நீச்சல் அடித்துக்கொண்டிருப்போம்.
கீழே இது தொடர்பான பதிவு ஒன்று.
—————————
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் இந்துத் தமிழரின் இருப்பையும், பெருமையையும் அத்துடன் தமிழ் மொழி பெற்றிருந்த உரிமையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் சான்றாதாரமாக ‘சரசோதி மாலை’ என்ற நூல் அமைந்துள்ளது.
தம்பதெனியாவைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் கி.பி. 1236 முதல் கி.பி. 1271 வரை முப்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். அதேபோல் கி.பி. 1291 முதல் 1371 வரையிலான இருபத்தாறு ஆண்டுகள் குருணாகலையைத் தலைநகராகக் கொண்டு நான்காம் பராக்கிரமபாகு ஆட்சி செய்துள்ளான்.
இவர்கள் தம்பதெனியவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் அவனது அரச சபையில் தேனுவரைப் பெருமாள் என்ற பெயர் கொண்ட போசராச பண்டிதரால் ‘சரசோதி மாலை’ என்ற தமிழ் மொழியிலான, வெண்பா வடிவிலான சோதிடநூல் இயற்றப்பட்டு, அரச சபையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழியிலான இந்நூல் குறித்த அரசனின் ஆட்சிக் காலத்தின் ஏழாவது ஆண்டில் அதாவது கி.பி 1278 இல் அரச சபையில் அரசன் முன்னிலையில் வெளியிடப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாகும். குறித்த சரசோதி மாலை என்ற நூல் தம்பதெனிய அரசன் இரண்டாம் பராக்கிரமவின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றப்பட்டு அரச சபையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்புகளிலுள்ளது.
இந்நூல் பன்னிரெண்டு (12) படலங்களைக் கொண்டுள்ளது. சோடச கருமப் படலம் முதலாவது படலமாக அமைகின்றது. தொடர்ந்து ஏர்மங்கலப் படலம், அரசியற் படலம், யாத்திரைப் படலம் மனை செயற் படலம், தெய்வவிரதப் படலம், குணா குணப் படலம், சுபா சுபாப் படலம், நாழிகைப் படலம், சாதகப் படலம் நட்சத்திர திசைப்படலம் என்று அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நூல் முழுமையான சோதிட நூலாகும். மனித வாழ்வுக்குத் தேவையான சோதிடவழி காட்டியாகவும் இதனைக் கொள்ளலாம். விவசாயத் தொழிலில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டலாக ஏர்மங்கலப் படலம் உள்ளது போல் அரசாட்சி செய்பவர்களுக்கான வழிகாட்டியாக அரசியற் படலம் உள்ளது.
இவ்வாறு மனித வாழ்வின் முக்கிய வழிகாட்டல்களை உள்ளடக்கிய பெறுமதி வாய்ந்த தமிழ் மொழியிலான இந்த ‘சரசோதி மாலை’ யானது நூலில் அடங்கியுள்ள பெறுமானங்களக்கும் அப்பால் குறித்த பிரதேசத்தில் அந்நாட்களில் இந்துககளின் தமிழர்களின் பண்டைய இருப்பையும், வளத்தையும், சிறப்பையும், பெருமையும் வெளிப்படுத்துவதுடன் இந்துசமயம் மற்றும் அதன் கோட்பாடுகள், நம்பிக்கை ஆகியவற்றின் மீது அரசனும், மக்களும் கொண்டிருந்த ஆர்வத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. அத்துடன் அரச சபையிலே தமிழ் மொழி பெற்றிருந்த மாட்சியையும் வெளிப்படுத்துகின்றது.
தம்பதெனியவில் ஆட்சிசெய்த சிங்கள அரசனென்று வரலாற்றாசிரியர்களால் கூறப்படும் இம்மன்னன் எதனால் குறித்த சோதிடநூலைத் தமிழில் இயற்றுமாறு வேண்டுகோள் விடுத்தான் என்பது சிந்தனைக்குரியது, ஆய்வுக்குரியது.
அக்காலத்தில் அப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் வளத்துடன் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி மக்களின் பயன்பாட்டுக்குரிய அறிவுமொழியாக இருந்துள்ளது. தமிழர் பண்பாடு, கலாசாரம், இந்து சமயம் என்பன சிறப்புடன் விளங்கின. அத்துடன் நாடாண்ட அரசனும், அரச சபையிலிருந்த மந்திரி பிரதானிகளும் தமிழ்ப் புலமை கொண்டவர்களாக இருந்தனர் என்பதற்குச் சரசோதி மாலையின் தோற்றமும், அரங்கேற்றமும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத தக்க சான்றுகளாகும்.
இந்நூல் தூய தமிழில் பொருட் செறிவுடைய செய்யுட்களால் இயற்றப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டு அன்றாட பயன்பாட்டுக்கான வழிமுறைகளைக் கைக்கொள்ளக்கூடிய வழிகாட்டியாகக் கொள்ளப்படும் அதேவேளை தமிழ் மொழியில் ஆக்கப்பட்ட சரசோதி மாலை தமிழர்களால் கண்டுகொள்ளப்படாத வொன்றாகவேயுள்ளது. இது கவலை தரும் நிலையாகும்.
சரசோதி மாலையென்றொரு நூல் தம்பதெனிய ஆட்சிக் காலத்தில் ஆக்கப்பட்டது என்ற குறிப்பை மட்டுமே தமிழர்கள் அறிந்துள்ளனரேயன்றி அதன் வரலாற்றை பெறுமதியை அறியும் ஆர்வம் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தமிழறிஞர் நிலையும் அதுவாகவேயுள்ளது.
அனைவருக்கும் தேவையான சோதிட விடயங்கள் யாவும் பொதிந்துள்ள இந்நூல் இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின், இந்துக்களின் இருப்பைக் கட்டியம் கூறும் வரலாற்று ஆதாரமாகவும் விளங்குகின்றது. விருத்தங்களாலான கவிதை நூலாக பொருள் பொதித்ததாக, ஓசை நயத்துடன் கூடிய சொற் செறிவுடையதாக இருப்பது இதன் சிறப்பை மேம்படுத்துகின்றது.
விநாயக வணக்கம், திருமால் வணக்கம் என்பவற்றுடன் இயற்றப்பட்டுள்ள இந்நூல் தமிழ் மொழியை அலங்கரிக்கும் சுடர்வீசும் மாலையாகவும் விளங்குகின்றதென்றால் மிகையல்ல. இலங்கைத் தமிழரின் வரலாற்றின் முக்கிய சான்றாக இருப்பின் வெளிப்பாடாக சரசோதி மாலை உள்ளமையை உணர்ந்து குறித்த பெறுமதி மிக்க நூலைப் பாதுகாக்கவும், ஆய்வு செய்யவும் வேண்டிய பொறுப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட தமிழ் மொழித்துறையை கொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்ப்பதாகவும், தமிழர் வரலாற்றை உறுதிப்படுத்துவதாகவும் அமையும். மறைந்து, புதைந்து கிடக்கும் தமிழருக்குரிய பெறுமதி மிக்க பொக்கிசமான சரசோதி மாலையை இனியும் தூரவிலக்கி வைக்காது உலகத் தமிழரின் ஆய்வுக்குரிய நூலாக ஆக்கும் தேவை நம்மவரால் உணரப்பட வேண்டும்.
த. மனோகரன்
கல்விச் செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம்
Keethan Ilaythampy