கட்டுரைகள்

எது உண்மை? எது நடிப்பு?….. சங்கர சுப்பிரமணியன்.

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் தொழிலாளர்களின் நிலை பற்றி நாம் அனைவரும் ஓரளவுக்கு அறிவோம். எல்லோராலும் குடும்பமாகச் சென்று அங்கு வாழ்ந்திட முடியாது. இந்த நாடுகளுக்கு செல்லும் பெரும்பாலோனோர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தான் அங்கு செல்கிறார்கள். ஆதலால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாகவே செல்கிறார்கள். அப்படி செல்பவர்கள் அதிகபட்சமாக இளைஞர்களே. இவர்கள் தங்கள் குடும்பத்துக்காக பெற்றோரை, உடன்பிறப்புக்களை, உறவினர்களை பிரிந்து சென்றுள்ளார்கள். அதிலும் சிலர் திருமணமாகி சில நாட்களிலும் இளம் மனவி கருவுற்றிருக்கும் போதும் பிரிந்து வந்துள்ளார்கள். மனைவி முதற்குழந்தையை ஈன்றெடுக்கும்போது அருகில் இல்லாமலும் அந்த குழந்தையே நேரில் பார்க்கமுடியாமலும் வேதனைகளை சகித்து வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் சிலர் பெற்ற தாய்தந்தையரை நோயுற்றிருக்கும்போது அருகில்
இருந்து பார்த்து பணிசெய்யும் வாயப்புக்களை இழந்து பணத்திற்காக தமது சுகங்களை எல்லாம் தியாகம் செய்கின்றனர்.

இன்னும் கொடுமையாக பெற்றோரின் இறுதிச்சடங்குகளில் வந்து போகமுடியாமல் வந்துபோக ஆகும் செலவை பணமாக அனுப்பி வைக்கும் சூழ்நிலைக் கைதியாக இருந்து வருகிறார்கள். இப்படியாக அவர்கள் துன்பம் ஒருபுறமிருக்க அவர்கள் சென்ற இடத்திலாவது சுகமாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் நம்பிவந்தது ஒன்று நடந்தது ஒன்று. இடைத்தரகர்களால் அடைந்த ஏமாற்றம். சொன்னவேலை ஒன்று இங்கு செய்யும் வேலை வேறு. கொடுப்பதாக சொன்ன சம்பளத்துக்கும் கிடைக்கும் சம்பளத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை. அதிகமான வெப்முள்ள நாட்டில் ஏதோ ஒன்றை உண்டு எப்படியோ ஒரு இடத்தில் உறங்கி வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பணத்தை குடும்மத்துக்கு அனுப்பும் தியாகத்தின்முன் எதுவுமே உயர்ந்ததாகப் படவில்லை. இப்படி துயரப்பட்டு பணம் சம்பாதித்து அனுப்புவதின் நோக்கம்தான் என்ன?

தன் உடன்பிறந்த தம்பியின் படிப்பு, தங்கயின் திருமணம், வீட்டுக்கடன், பிள்ளைகளின் படிப்பு, உறவினர்களுக்கு மத்தியில் தலைநிமிர்ந்து வாழ்தல் போன்ற பல நியாயமான காரணங்களுக்காகத்தான் இவர்கள் தங்கள் வாழவேண்டிய வாழ்நாட்களையே பணயம்வைத்து பணம் சம்பாதிக்கின்றனர். இப்படிப் பட்டவர்கள் சில ஆண்டுகள் கழித்து திரும்ப தாய்நாடு வரும்போது அவர்களைக்காண விமான நிலையத்தில் காத்திருக்கும் உறவுகளைப் பார்த்ததும் அவர்கள் அழவும் அதைப்பார்த்து உறவுகள் அழவும் கட்டித்தழுவுவதுமாய் அதைப்பார்க்ககும் கல்மனம் படைத்த எவருக்கும் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடும்.

இதற்கு மாறாக வெறும் நூறு நாட்கள்தான் குடும்பத்தையும் உறவுகளையும் பிரிந்து வாழவேண்டும். அதுவும் அடர்ந்த காடோ வறண்ட பாலைவனமோ இல்லை. தங்கும் இடமோ சகல நவீன வசதிகளுடன் உடையது. வேளா வேளைக்கு நல்ல சாப்பாடு. படுத்துறங்க வசதியான படுக்கை.
இப்படி எண்ணற்ற வசதிகளுடன் வாழ்க்கை. அத்தோடு மட்டுமில்லாமல் கரும்பு திண்ணக் கூலியாக தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் நல்ல சம்பளம். உடல் வருந்தும்படி எந்த வேலையும் இல்லை. வீண் வம்பும் வெட்டிக்கதை பேசுவதும் பொழுதுபோக்குவதும்
மட்டும்தான் வேலை. இத்தோடு மட்டமின்றி கோடானு கோடி மக்கள் பார்க்கும்படி நல்ல விளம்பரத்துடன் புகழும் கிடைக்கிறது. மேலும் இந்த வாழ்ககை சிரமம் என்று எண்ணுமளவிற்கு எல்லோருமே நூறுநாட்கள் வரை அங்கே இருக்கப் போவதில்லை. கடைசிவரைக்கும் இருக்கும் ஒருசிலருக்கும் அதற்குத்தகுந்ந பலனும் கிடைக்கிறது. இந்தச் சூழலில் அந்த நூறுநாட்களில் ஒருநாள் குடும்பத்தில் இருந்து ஒருசிலர் வந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவதைப் பார்த்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னிருந்து கண்ணீர் விடுபவர்கள் விமான நிலையத்தில் கண்ணீர் விடுபவர்களையும் மிஞ்சி விடுகிறார்கள்.

எதவுமே விளம்பரத்துடனும் ஒப்பனையுடனும் செய்யும்போது அதன் வீச்சு விசாலமடைகிறது. அதுவே உண்மையாகவும் பாசத்துடனும் அரங்கேறினாலும்
விமான நிலையத்தில் அந்த உறவுகளுக்குள்ளே ஒடுங்கி விடுகிறது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button