சாணக்கியனை கிழக்கு முதலமைச்சராக்கலாம்!; முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நிசாம் காரியப்பர்

தமிழ் நாட்டு மக்கள் இளைய தளபதி விஜயை முதலமைச்சராக தெரிவு செய்துள்ளார்கள் .அதேபோன்று ஒரு இளைய தளபதியாக இன மத பேதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில் சாணக்கியன் எம்.பி.இருக்கின்றார்.அவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தற்போது மரணித்துள்ளார். மரணித்த அதிகாரியிடம் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரகசிய சாட்சியங்கள் இருப்பதால், அதனை மறைக்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்த மாேசடியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதால், அவர் வெட்கப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் மரண விசாரணை அறிக்கையில், அதிக இரத்தம் வெளியேறியதனால் மரணம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படவில்லை.
. மின்னஞ்சல் முகவரி ஒன்றை வாசித்து புரிந்துகொள்ள தெரியாத அதிகாரிகளை நிதி அமைச்சுக்கு நியமித்த, ஜனாதிபதி இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து இடம்பெற்ற தவறுக்காக மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
அதேவேளை, இந்திய தமிழ் நாட்டு மகக்கள் இளைய தளபதி விஜயை முதலமைச்சராக தெரிவு செய்துள்ளார்கள் . அவரின் வெற்றிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேநேரம் எமக்கும் ஒரு இளைய தளபதியாக இன மத பேதங்களுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இருக்கிறார். அவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.
![]()