முச்சந்தி

பலஸ்தீன மக்களுக்கு எதிரான இன அழிப்பை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்

வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கங்கள் மீது குற்றம் சுமத்திக்கொண்டு, பழைய கதைகளையே பேசிக்கொண்டிருக்காது, தமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை உருவாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

சபையில் எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினர் ஒருவர், இந்த அரசாங்கமும் நாட்டின் முஸ்லிம்களும் பலஸ்தீன மக்களுடன் உறுதியாக இருப்பதாக கூறினார். இவ்விடத்தில் நான் ஒருவிடயத்தை சுட்டிக்காட்டுகின்றேன். அதாவது தமிழ் மக்களும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவழிப்புக்கு எதிராக அவர்களுடன் ஒன்றாக இருக்கின்றோம் என்பதனை கூறுகின்றோம். இதனை கூறுவதால் நாங்கள் யுதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கு எதிராகவும் இனப்படுகொலை நடந்துள்ளது. அவர்களுக்கும் நியாயம், நீதி மற்றும் பாதுகாப்பு அவசியமாகும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் யூதர்கள் என்ற பெயரில் இன்று இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனவழிப்பை எதிர்க்க வேண்டிய கடமை நீதி நியாயத்தை விரும்பும் எந்தவொரு இனத்திற்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.

இதேவேளை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டுள்ளோம். தற்போது அரசாங்கத்தில் உள்ள என்.பி.பியின் பிரதான கட்சியாக ஜே.வி.பி உள்ளது. ஊழில் எதிர்ப்பு நடவடிக்கையில் பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜே.வி.பி அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டும். எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அம்பாந்தோட்டை செயற்றிட்டமே ஆகும். இதனை முன்னெடுப்பதாக இடை நிறுத்துவதா? என்று அரசாங்கம் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த செயற்றிட்டத்தின் நிலையியல் தன்மை தொடர்பில் ஆராய வேண்டும். இவ்வாறான செயற்றிட்டங்கள் கடன்களால் நிரம்பியே இருந்தது. இவ்வாறான திட்டங்கள் பொருளாதார விடயங்களில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்று ஆராய வேண்டும். இது ஊழல் மிக்கதாக இருக்கின்றது. 2022ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது எந்தளவுக்கு அந்த செயற்றிட்டங்கள் நாட்டின் பொருளதாரத்தை பாதித்தது என்பதனை புரிந்துகொள்ள முடியுமாக இருந்தது. இதனால் சில விடயங்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதுடன், இவ்வாறான செயற்றிட்டங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உருவாக்க வேண்டும்.

இந்நிலையில் நீங்களும் பொறுப்புக் கூறுபவர்களாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தரப்பினால் சில உடன்படிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. நாட்டின் நலனை கருத்திற்கொண்டு அவற்றை வெளியிட முடியுமா என்று ஆராயலாம். அதேபோன்று செயற்றிட்டங்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கங்களை குற்றஞ்சுமத்திக்கொண்டிருக்காது, பழைய கதைகளை பேசிக்கொண்டிருக்காது, அரசாங்கம் தமது செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button