அமெரிக்க துப்பாக்கி கலாச்சார எதிர்வினை… வெள்ளை மாளிகையில் டிரம்ப் மீது சூடு… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் மிகப்பெரும் வல்லரசு நாட்டின் உளவுத்துறையின் பலவீனத்தை காட்டியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்க துப்பாக்கி கலாச்சார எதிர்வினை தான் என்பதை மறுக்க முடியாது)
உலகிற்கு நீதியை போதிக்கும் அமெரிக்காவில் அரசியல் படுகொலைகளும், கொலை முயற்சிகளும் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து டொனால்ட் டிரம்ப் வரை, அமெரிக்க ஜனாதிபதிகளின் மீதான படுகொலை முயற்சிகள் மற்றும் சதிகள் ஏராளமாக நடந்துள்ளன.
கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயற்சித்ததாக கலிபோர்னியாவைச் சேர்ந்த நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வை வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளது.

31 வயதான கோல் ஆலன் தாமஸ் திங்கட்கிழமை அன்று வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானபோது இரு ஆயுத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் விருந்தின்போது பாதுகாப்பு சோதனையைக் கடந்த அவர், ஒரு தானியங்கி துப்பாக்கி மற்றும் கைமுறையில் இயக்கக்கூடிய துப்பாக்கி மற்றும் மூன்று கத்திகளை வைத்திருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அந்த தாக்குதலின்போது ஒரு ரகசிய சேவை அதிகாரி சுடப்பட்டாலும் தீவிரமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் வாழ்நாள் சிறைவாசம் எதிர்கொள்ள நேரிடலாம்.
அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கவும் வைத்திருக்கவும் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் அங்குத் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் அங்கு மோசமான சம்பவங்களும் கூட அதிகமாகவே நடந்து வருகிறது. கடந்த 2024ல் கூட டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்திருந்தது.
இதற்கிடையே மீண்டும் அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தில் துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற முக்கியத் தலைவர்கள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கொலை முயற்சியில் தப்பிய ட்ரம்ப் :
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு 2024இலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் பென்சில்வேனியாவில் பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
அந்த துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் டிரம்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. திறந்த மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட போது இலக்கு தவறி அவரது காது பகுதியில் தாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரம்ப் கீழே குனிந்து தன்னை பாதுகாத்து கொண்டார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம்:

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துப்பாக்கி கலாசாரம் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
வெகுஜன துப்பாக்கிச்சூடு (Mass Sooting) என்பதற்கு அமெரிக்கா ஒரு வரையறையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், துப்பாக்கி வன்முறைக் காப்பகம் ஒரு வெகுஜன துப்பாக்கிச்சூட்டை நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த – கொல்லப்பட்ட சம்பவமாக வரையறுக்கிறது.
அமெரிக்காவில் நூறு குடியிருப்பாளர்களுக்கு 121 துப்பாக்கிகள் உள்ளன. துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வீடுகளிலும், பொது இடங்களிலும் நடக்கும் துப்பாக்கிச் சூடுகளை உள்ளடக்கியிருக்கிறது. இது கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் கொலைகளைவிட கணிசமாக பெரிய விகிதமாகும்.
சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட முன்னணி தனியார் ஆராய்ச்சி நிறுவனம், உலகெங்கிலுமுள்ள தனியார் கைகளில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததில், 390 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடுகிறது. அத்துடன் கடந்த பல வருடங்களாகத் துப்பாக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் துப்பாக்கி வரலாறு:
அமெரிக்காவுக்கும் துப்பாக்கிக்குமான தொடர்பு என்பது, அதன் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது. 1775-ல் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பிறகு அந்நாட்டில் காவல் நிலையங்களே இல்லாத நிலை இருந்தது. அன்றைய காலகட்டங்களில் உணவுக்காக வேட்டையாடுதல் தொடங்கி நாட்டை பாதுகாப்பது வரை குடிமக்களின் ஒரு அங்கமாகவே துப்பாக்கி இருந்தது.

அதைத் தொடர்ந்து, 1791-ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் குடிமக்களுக்கு ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மாகாணங்களைக் கட்டுப்படுத்த 1861-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
ஜனவரி 30, 1835 இல், ஆண்ட்ரூ ஜாக்சன் ஒரு படுகொலை முயற்சியை அனுபவித்த முதல் ஜனாதிபதி ஆவார். அப்போது ரிச்சர்ட் லாரன்ஸ் இரண்டு முறை அவரை சுட முயன்றார். லாரன்ஸால் குறி தவறாக சுடப்பட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
வரலாற்றில் அமெரிக்காவின் நான்கு பதவியில் இருந்த ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 1865 இல் ஆபிரகாம் லிங்கனை ஜான் வில்க்ஸ் பூத் என்பவர் சுட்டுக் கொன்றார். அதன் பின் இன்னோர் அதிபர் ஜேம்ஸ் ஏ. கார்ஃபீல்ட் 1881இல் சார்லஸ் ஜே. கிடோவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க வரலாற்றில் படுகொலை:
1901இல் வில்லியம் மெக்கின்லி எனும் ஜனாதிபதியை லியோன் சோல்கோஸ்ஸால் என்பவர் சுட்டுக் கொன்றார். பலத்த சர்ச்சை உருவாக்கிய ஜான் எஃப். கென்னடி கொலை 1963இல் லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்பவரால் நடாத்தப்பட்டது.
இற்றைவரை மூன்று ஜனாதிபதிகள் படுகொலை முயற்சியில் காயமடைந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் 1912, ஜான் ஷ்ராங்க் என்பவரால் காயமடைந்தார். பனிப்போர் காலத்தில் பிரபல்யமான ரொனால்ட் ரீகன் 1981, ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்பவரால் சுடப்பட்டு காயமடைந்தார்.

அந்தக் காலம் தொட்டே அமெரிக்கர்களுக்கு வரலாற்றுப் பெருமையாகவும், குடும்ப கவுரவமாகவும் துப்பாக்கி இருந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் வெள்ளையின மக்களில் 48% பேர் துப்பாக்கி வைத்திருக்கின்றனர். தற்காப்புக்காக என்றே அமெரிக்கர்கள் பிரதானமாக துப்பாக்கியைப் பயன்படுத்தி வந்தனர். இனவெறி தலைதூக்கிய பிறகு துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்துவிட்டன.
கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். 2020 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு காரணமாக மட்டும் 45,222 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளிலேயே துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் தனி நபரின் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். ஒவ்வொரு 100 குடும்பங்களிலும் 121 துப்பாக்கிகள் இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()