முச்சந்தி

நீதியமைச்சருக்கு ‘ஜம்பர்’ அணிவிப்போம்;  குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும்

நீதிமன்றத்தை அவமதித்துள்ள நீதியமைச்சருக்கு என்றோவொரு நாள் ‘ஜம்பர்’ (கைதி உடை)அணிவிப்போம் என்று எச்சரித்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க, குரங்கு கணக்கெடுப்புக்கு 100 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ள குரங்கு அமைச்சர் குரங்குகளுக்கு ஒரு மாம்பழம் கூட வழங்கவில்லை. குரங்குகளின் எண்ணிக்கையும் வெளிவரவில்லை. ஆகவே குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும்.அத்துடன் போலி கலாநிதி பட்டம் சமர்ப்பித்த முன்னாள் சபாநாயகருக்கு ஜம்பர் அணிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்துக்கு வருடாந்தம் சமர்ப்பித்துள்ளேன். ஊழலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பலர் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.நீதியமைச்சர் பொது இடங்களில் கருத்து தெரிவிக்கும் போது நீதிமன்றத்துக்கு மதிப்பளித்து பேச வேண்டும்

நீதியமைச்சர் முதலில் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். பிறிதொரு உறுப்பினர் ஆசனத்தில் அமர்ந்த்துக் கொண்டு உரையாற்ற முடியாது. முதலில் முறைகளை கற்றுக் கொள்ளுங்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோரை சிறைக்கு அனுப்பியதாக நீதியமைச்சர் கூறியுள்ளார் . மஹிந்தானந்த அளுத்கமகே விவகாரத்தில் மூன்று நீதியரசர்கள் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பினை நீதியமைச்சர் சவாலுக்குட்படுத்தியுள்ளார். நீதியரசர்களின் ஆடைகளை நீதியமைச்சர் களைந்துள்ளார் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 9 நிமிடமாக நான் குறிப்பிட்ட விடயத்தை ஊடகம் ஒன்று ஒரு நிமிட காணொளியாக திரிபுபடுத்தியுள்ளது. நான் நீதிமன்றத்தை ஒருபோதும் அவமதிக்கவில்லை. அவ்வாறு அவமதித்திருந்தால் முறைப்பாடளிக்க முடியும். ஆகவே எச்சந்தர்ப்பத்திலும் நான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. எனவே பொய்கூற வேண்டாம் என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சாமர சம்பத், இந்த நீதியமைச்சர் போலியான பத்திரங்களை சமர்ப்பித்து கலாநிதி பட்டத்தை தனது பெயருக்கு முன்னாள் வைத்துக் கொண்டார். உண்மை வெளிவந்ததன் பின்னர் பட்டத்தை நீக்கிக் கொண்டார். தற்போது நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்.இவருக்கு நிச்சயம் என்றோ ஒருநாள் ஜம்பர் (கைதி உடை) அணிவிப்பேன்.

எஸ்.பி.திசாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்து சிறை சென்றார்கள்.அதேபோல் என்றொருநாள் நீதியமைச்சர் நீதிமன்ற அவமதிப்புக்கு சிறைச் செல்வார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என்றோ ஒரு நாள் நாங்கள் உங்களுக்கு ஜம்பர் (கைதி உடை) அணிவிப்போம்.

மஹிந்தானந்த கரம்போட் விநியோகித்ததால் சிறை சென்றுள்ளார். ஆனால் இந்த அரசாங்கத்தில் குரங்கு அமைச்சர் குரங்கு கணக்கெடுப்புக்கு 100 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளார். ஆனால் குரங்குகளுக்கு ஒரு மாம்பழம் கூட வழங்கப்படவில்லை. குரங்குகளின் எண்ணிக்கையும் வெளிவரவில்லை. ஆகவே குரங்கு அமைச்சரை 40 ஆண்டுகள் சிறைக்கு அனுப்ப வேண்டும். நீதியமைச்சர் மற்றும் போலி கலாநிதி பட்டம் சமர்ப்பித்த முன்னாள் சபாநாயகருக்கும் ஜம்பர் அணிவிக்க முடியும்.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு எதிராகவே அமைகிறது. ‘பிரய்பரி சரணம் கச்சாமி’ என்று துதி பாடும் நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை பிடித்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. இலஞ்ச ஆணைக்குழுவும் அரசாங்கத்துக்கு ஏற்றாட் போல் செயற்படுகிறது. எத்தனை நாட்களுக்கு இவ்வாறு செயற்பட முடியும் என்று பார்ப்போம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் எவருக்கும் நடக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரபுக்கள் பாதுகாப்பாளர்களுக்கு முன்பாக ஜனாதிபதி நடந்து செல்கிறார். இவ்வாறான ஜனாதிபதியின் உதவியாளர்கள் மாநகர சபையில் தடுக்கி விழுகிறார்கள். கடுவலை மாநகர சபை கூடிய தினத்திலேயே வீழ்ந்துள்ளது. ஜனாதிபதியின் பெயரை இவர்கள் தான் இல்லாதொழிக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து தோல்வியடைந்துள்ளது. நான் இங்கு உரையாற்றிய விடயங்களை கொண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஏதாவதொரு புதிய வழக்கினை எனக்கு எதிராக தாக்கல் செய்யும். அடுத்த மாதம் என்னை மீண்டும் சிறைக்கு அனுப்புவார்கள். பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்களை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button