2 மாதங்களில் ரஷ்யாவில் 70,000 படையினர் பலி!
உக்ரேன் யுத்தத்தில் கடந்த 2 மாதங்களில் மாத்திரம் ரஷ்யாவின் 70,000 படையினர் உயிரிழந்துள்ளனர் என அல்லது காயமடைந்துள்ளனர் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கடந்த வார இறுதியில் வெளியிட்ட, இராணுவப் புலனாய்வுத் தகவல் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் கார்கிவ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யா ஆரம்பித்த புதிய போர்முனையில் ரஷ்ய படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் ரஷ்ய படையினரின் நாளாந்த இழப்புகள் (உயிரிழப்பு மற்றும் காயம்) 1,262 ஆக இருந்தது எனவும் ஜூன் மாதம் இது 1,163 ஆக இருந்தது எனவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரவித்துள்ளது.
2 மாதங்களில் மாத்திரம் 70,000 ரஷ்ய படையினர் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ இருக்கலாம் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களில் ரஷ்ய படையினர் பல பிரதேசங்களைக் கைப்பற்றினர்.
கார்கிவ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக கடந்த மே மாதம் புதிய போர்முனையை ரஷ்யா திறந்தது. இப்போர் நடவடிக்கையில் உக்ரேனிய படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டன. அதேவேளை, ரஷ்ய படையினருக்கும் அது இழப்புகளை ஏற்படத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய படையினரின் அணுகுமுறை போர் முனையில் அழுத்தங்களை அதிகரித்தாலும், வினைத்திறனான உக்ரேனிய தற்காப்பு நடவடிக்கையும், ரஷ்ய படையினரின் பயிற்சியின்மையும் தந்திரோபாய வெற்றிகளை ரஷ்யாவினால் விஸ்தரித்துக்கொள்ள முடியவில்லை என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய படையினர், சிறிய அளவிலான தாக்குதல் அணிகளை பயன்படுத்திவருவதால் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச சமாதானத்துக்கான கார்ஜினி நிதியத்தின் மைக்கல் கொவ்மன் இது தொடர்பாக கூறுகையில், “இந்த தந்திரோபாயமானது சிறிய ஆதாயங்களை அளிக்கக்கூடியது. எனினும், செயற்பாட்டு ரீதியிலான முன்னேற்றங்களை அடைவதற்கு இது அதிகம் பொருத்தமானதல்ல.
பாரிய தாக்குதல்கள் ரஷ்ய படையினருக்கு செலவு மிகுந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் அவ்திவ்காவில் நடந்தைப் போன்ற தளபாட இழப்புக்களை அப்படையினால் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.