வீடுபேற்றினால் கிடைத்த விடை!… சங்கர சுப்பிரமணியன்


உண்மைக்கதை என்று உண்மையில் சில கதைகள் வருவதுண்டு. அப்படிப் பார்த்தால் இதுவும் ஓர் உண்மைக் கதைதான். அந்தரங்கம் கருதி ஊர் பெயர் போன்றவை மாற்றப்பட்டுள்ளன. சின்னாளப்பட்டி சிவநேசன் கனவில் வந்ததை முடிவெட்ட வந்தபோது சிகைதிருத்த வந்த சிங்காரவேலுவிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.
முடிவெட்டவந்தவன் தன் நண்பனும் முடிவெட்ட வந்ததை அறிந்து மகிழ்ந்தான். மகிழ்ச்சிக்கு காரணம் தன் மனதில் இருந்து அரித்துக் கொண்டிருந்த கனவை யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற எண்ணமே காரணம். யாரிடம் சொல்லவேண்டும் என்று எண்ணிப் பார்க்கும்போது தீவிரவாதிகளிடம் சொன்னால் நமக்கு கடவுள் நம்பிக்கையற்றவன் என்ற முத்திரை குத்திவிடுவார்கள்.
முத்திரை குத்துவதோடு விடாமல் அதற்கென ஒரு கொள்கைபரப்புச் செயலாளரையும் போட்டு நமக்காக விளம்பரமும் செய்யத் தொடங்கிவிடுவார்கள். ஏதோ அவர்களால் இயன்ற கைமாறு. ஆதலால் தகுந்த ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தான். கனவு வந்தால் கனவுதானே என்றுவிட வேண்டியதுதானே. சிலருக்கு கனவோ நனவோ நமக்குத் தெரிந்ததை நாலுபேருக்கு சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தலைவெடித்து விடும்.
இவர்களுக்கு எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஆல்இந்தியா ரேடியோ என்று பெயர். நாம் ஒன்றை பரப்பவேண்டும் என்றால் இவர்கள் காதில் போட்டுவைத்தால் போதும். நாம் வேறு எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம். விளம்பரம் செய்தால்கூட பரப்ப முடியாத அளவுக்கு செய்தியை பரப்பிவிடுவார்கள். ஆதலால் கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் சிங்காரவேலுவைக் கண்டவனுக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் என்று யாரும் சிபாரிசு செய்யாமலே என் இலையில் பாயாசம் ஊற்றப்பட்ட கதையாய் இருந்தது.

காரணம் சிங்காரவேலு சிவநேசனைப் போலவே மிதவாதி. கடவுள் இல்லை என்று சொல்லமாட்டான். நமக்கு மேல் ஒரு ஆற்றல் உண்டு, அந்த ஆற்றல்தான் கடவுள் என்பான். மறைந்த நம் நெருங்கிய சொந்தங்களை எண்ணி வணங்குவதைப்போல் நம் பரம்பரையில் வாழ்ந்து மடிந்து மறைந்தவர்களை குலதெய்வமாக வணங்குவதைப் போன்றதுதான் கடவுள் வழிபாடு என்பான்.
இதே போன்று நம் இனத்தில் எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த இனத்தலைவர்களான் சேயோன், மாயோன், வருணன் போன்றோரை மதித்து வழிபடுபவன். மற்றபடி அவரவர்கள் செய்த வினையைப் பொருத்தே வினைப்பயன் அமையும் என்று நினைப்பவன். செய்த வினைகளுக்குத் தக்கவாறு வாழ்நாளிலே பலனை அனுபவிப்பார்கள் என்ற கொள்கையை உடையவன்.
கடவுளை மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டோ அல்லது அவர்களை மகிழ்விப்பதாலோ அல்லது பரிகாரங்கள் போன்றவற்றை செய்தவதாலோ செய்த தவறுக்குண்டான தீவினை வருவதை தடுக்க இயலாது. அதே சமயம் நன்மை செய்தாலும் கடவுளை குளிர்வித்தால் மட்டுமே நற்பயனும் கிட்டும் என்பதையும் ஏற்காதவன்.
எப்படி தீயதை செய்துவிட்டு கடவளை வேண்டினாலும் தீவினை வந்து சேருமோ அதேபோல் நல்லதை செய்தால் கடவுளை வேண்டாவிடினும் நன்மை வந்நே சேரும் என்பதே வினைப்பயன் என்று நம்புபவன். இவற்றை எல்லாம் நம்பாமல் தன் விருப்பம்போல் நடப்பவர்களைப் பற்றியும் இவன் பெரிதாக ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை.ஆதலால் தான் கண்ட கனவைப்பற்றி சொன்னான்.
“சிங்காரவேலு சில தினங்களுக்கு முன் கனவுகண்டேன். அதை யாரிடம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் சொல்லலாம் எனத் தோன்றுகிறது”
“சொல் சிவா, அதையும் கேட்கலாம்”
“ஒரே ஊரைச்சேர்ந்த ஒருவரை ஒருவர் நன்கறிந்த மூவர் சொர்க்கம் சென்றனர். அதில் ஒருவருக்கு சொர்க்கத்தில் சந்தித்ததை நம்ப முடியவில்லை”
“ஏன்? எதனால் அப்படி?”
“மூவரது பின்னணியும் வேறுபாடனவை. ஒருவர் மூன்று நேரம் கடவுளை தொழுபவர், இன்னொருவர் இறைச்சி அறுப்பவர் மற்றவர் அநியாய வட்டிக்கு கடன் கொடுப்பவர்” என்று பதிலளித்தான் சிவநேசன்.
இதையறிந்த சிங்காரவேலன் பின்னணி எப்படியோ இருக்கட்டும். அவர்கள்தான் சொர்க்கம் சென்று விட்டார்களே. பின் எதனால் நம்பமுடியவில்லை. யாரால் நம்ப முடியவில்லை என்று கேட்டான். மூன்று வேளையும் கடவுளைத் தொழுபவருக்குத்தான் இறைச்சி அறுப்பவனும் அநியாய வட்ட கொடுப்பவனும் சொர்க்கம் வந்து விட்டார்களே என்பதுதான் என்று பதில் சொன்னான்.
அதன்பின் என்ன நடந்தது? அதன்பின் கடவுளை தொழுபவர் சித்திரகுப்தரிடம் சென்று விளக்கம் கேட்டார். சித்திரகுப்தர் அடையாள எண்ணைக்கேட்டார். அடையாள எண்ணா? அதை நான் என்னவோ சிறப்புத் தகுதியென்றல்லவா எண்ணினேன். இங்கே சிறைக்கைதிக்கு கொடுக்கப்படும் எண்போல் அல்லவா உள்ளது என்றபடியே அடையாள என்னைக் கொடுத்தார்.
எண்ணைப் பெற்ற சித்திரகுப்தர் கோப்பை பார்த்தபின்,
“ ஐயா நீங்ங்கள் தினமும் மூன்றுமுறை இறைவனை தொழுதுள்ளீர்கள். எப்போதும் அவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருந்திருக்கிறீர்கள். இருப்பினும் ஒரு ஈ எறும்பக்குக்கூட நன்மை செய்ததில்லை” என்றார்.
“இருக்கட்டும். ஆனால் இறைச்சி அறுப்பவருக்கும் அநியாய வட்டிவாங்கி மக்களை துன்புறுத்தியவருக்கும்கூட சொர்கக்கத்தில் இடம் கிடைத்துள்ளதே? அது எப்படி?” என்று கேட்டார்.
இந்த கேள்வியைக் கேட்வரிடம் சித்திரகுப்தர் பதில் சொன்னார். உங்களைப்போன்றே அவ்விருவரும் என்னிடம் வந்தனர். ஆனால் அவர்களின் கேள்வி வேறுவிதமாக இருந்தது. உங்களைப் போன்று அவர்கள் கேள்வியில் இல்லை. மாறாக எங்களுக்கு எப்படி சொர்க்கம் கிடைத்தது என்ற வியப்புத்தான் அவர்களின் கேள்வியில் இருந்தது.

அவர்களின் கோப்பையும் பார்த்தேன். அதில் இறைச்சி அறுப்பவர் தினமும் ஆடுகளைக் கொல்லும்போது பிழைப்புக்காக உயிர்களைக் கொல்லும் நிலையில் இருக்கின்றேனே என்று வருந்தியுள்ளார். இப்படியான வாழ்க்கையிலும் அவர் உழைப்பில் வாங்கிய தாணியங்களில் ஒரு பகுதியை பறவைகளுக்கு உணவாக்கியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாக அநியாயமாக வட்டி வாங்கி கடன்பட்டவர்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்தவனின் கோப்பையும் பார்த்தேன். அவன் அநியாயமாய ஈட்டிய பணத்தில் ஒரு பகுதியை ஆண்டவனுக்கும் கொடுத்திருக்கிறான். நன்றி மறவாமல் இறைவன் படைத்த மனிதர்களே இருக்கும்போது படைத்த பகவான் நன்றி மறப்பாரா? அல்லது அவன் மார்கழி மாதத்தில் இறந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
இப்படியாக தான் கண்ட கனவை சிங்காரவேலுவிடம் சொல்லி முடித்தான். மனதில் ஏதோ பாரமாக இருந்ததை இறக்கிவைத்த மாதிரி உணர்ந்தான். ஆனால் அது கனவாக இருந்தாலும் ஒரு உண்மையை உணர்த்துவதாக இருந்தது.

![]()