ஐ.எம்.எப்.பின் காலம் முடிகிறது ஆபத்தில் சிக்கப்போகும் நாடு ?; 2028 இல் சர்வதேச கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை வருமா? சஜித் எச்சரிக்கை!”

2027 மார்ச் மாதத்தோடு இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு முடிவுக்கு வருகின்றது. இதனால் நாட்டிற்கு கிடைக்கும் விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதிகளும் முடிவுக்கு வருகின்றன. 2028 ஜனவரி முதல் 2.5 முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வெளிநாட்டு கடன்களை நாடு திரும்பச் செலுத்த வேண்டி நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் எந்த நேரத்திலாவது எம்மால் இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் நிலைக்கு ஆளானால் நாடு ஆபத்தான பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய இக்கட்டான, துயரகரமான சூழ்நிலை உருவாவதற்கு முன்பே அதனை தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான தகுந்த கொள்கை ரீதியான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
நமது நாட்டை ஏகாதிபத்திய சக்திகள் படையெடுத்து, நமது நாட்டை காலனிவாதத்திற்கு உட்படுத்திய காலத்தில் சங்கைக்குரிய மகா சங்கத்தினர் அக்காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்களுடன் கை கோர்த்து, தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேற்கொண்ட சிறந்த அர்ப்பணிப்பு இன்றும் நினைவுகூரத்தக்கதாக அமைந்து காணப்படுகின்றன. அன்று நேரடி ஏகாதிபத்தியம் முன்னெடுக்கப்பட்டன. இங்கு நாட்டுக்கு படையெடுத்து நாட்டின் இறையாண்மைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக ஆபத்துக்களை ஏற்படுத்தினர். ஆனால் இன்று நேரடி ஏகாதிபத்தியத்திற்குப் பதிலாக மறைமுக ஏகாதிபத்தியம் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார, சமூக, வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளை பயன்படுத்தி உலகில் நடைபெறும் பல அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நமது நாட்டிற்கும் இந்த மறைமுக ஏகாதிபத்தியத்தின் தாக்கங்கள் ஏற்படுகின்றனர்.
நாட்டின் அரசியலமைப்பின் உச்ச சட்டத்தின்படி நமது நாடு இறையாண்மையுள்ள ஒரு நாடாக காணப்பட்டாலும், ஆள்புல ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் மற்றும் ஒற்றுமை என்பன காணப்பட்டாலும், தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில், பல்வேறு பேரழிவுகரமான சூழல்கள் நிலவும் தருணத்தில், நாமொரு நாடாக எந்தளவு இறையாண்மையைக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இப்போது உலகின் பல்வேறு துறைகளுடன் நமது நாடு மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களில் 90%க்கும் மேலானவை நமது நாட்டின் இறையாண்மையுடன் தொடர்பான நிபந்தனைகளை மீறியே நடைபெற்று வருகின்றன. மறைமுக ஏகாதிபத்தியம் முன்னெடுக்கப்பட்டு வருவதே இதற்கு காரணமாகுமென்றார்.
![]()