இலங்கை

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் வழக்கு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

“மேற்படி அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அந்தக் கடிதத்திற்கு என்ன நேர்ந்தது என்பது பற்றித் தெரியவில்லை. இது குறித்து தற்போதைய நீதி அமைச்சரிடம் கேட்டால், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றார்.

22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்துச் சட்டத்தரணிகளுக்கோ அல்லது சமூகத்திற்கோ எதுவும் தெரியாது; இது பற்றி எவ்விதக் கலந்தாய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே, அரசாங்கத்திற்குள் இது தொடர்பான நகர்வுகள் இரகசியமாகவே இடம்பெறுகின்றன என்பதை நீதி அமைச்சரின் கூற்று தெளிவுபடுத்துகின்றது.

இந்த 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தேவையில்லை என இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினரும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைப்பதற்காகவே ஜனாதிபதியிடம் சந்திப்பிற்கான நேரத்தைக் கோரியிருந்தனர். ஆனால், சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டு முடிவெடுத்த பின்னர் அவர்களைச் சந்திப்பதில் என்ன பயன் இருக்கப் போகிறது? இது வெறும் கண்துடைப்பு நாடகமேயாகும்.

எனவே, நாம் அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நீதித்துறைக்கு எவ்வித நிவாரணத்தையும் அளிக்காது என்றும், வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தாது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டுவோம். ஏனெனில், மொத்த வழக்குகளில் ஒரு சதவீதமானவை மட்டுமே உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

அரசாங்கத் துறையின் ஏனைய பிரிவினரும் இதேபோன்று ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்குமாறு கோரினால், அது மேலும் புதிய பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்” என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button