முச்சந்தி

அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்

சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாக மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி விவசாயம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்றுமதி முக்கியமானது. அதில் விவசாயம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இலங்கை விவசாயத்தில் தேயிலை நாட்டுக்கு மூன்றாவது வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் துறையாக இருக்கின்றது. சிலோன் டீ என்பது உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் இதனை ஏற்றுமதி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் தேயிலையை இங்கு கொண்டு வந்து இங்குள் பெயர்பெற்ற தேயிலையுடன் கலந்து அதனை ஏற்றுமதி செய்வதால் இலங்கை தேயிலையின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கோருகின்றேன்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.

அத்துடன் ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள கல்வி காரியாலத்திற்கு 67 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காரியாலயத்தை ஹட்டனில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு கினிகத்தேனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறான விடயமாகும். அங்கு 130 பெருந்தோட்ட பாடசாலைகள் இருக்கின்றன. இதனால் அது ஹட்டனிலேயே அமைய வேண்டும் என்று கோருகின்றோம்.

அது மட்டுமன்றி ஹட்டனில் குப்பை பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் ரெஸ்ட் ஹவுஸ் அமைந்துள்ள பகுதியில் குப்பை போடாமல் அந்த இடத்தில் கல்வி காரியாலயத்தை நிர்மானிக்கலாம். குப்பை போடுவதற்கு வேறு இடத்தை தருவதற்கு எங்களால் உதவி செய்ய முடியும். இந்நிலையில் அந்த காரியாலயத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்கின்றோம்.

அத்துடன் கொட்டகலை பெட்ரோலிய கூட்டுத்தாபன பாதை 30 வருடங்களாக மூடி வைக்கப்பட்டுள்ளது. அதனை திறக்குமாறு கோருகின்றோம். கொழும்பில் அலரி மாளிகை வீதியே திறக்கப்பட்டுள்ளது. இப்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனால் குறித்த வீதியை திறக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை விடுவிக்கும் விடயத்தில் அரசாங்கம் முழு மூச்சுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த விடயத்தில் அரசாங்கத்தை பாராட்டுக்கின்றோம். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு சாதகமான விடயமே என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *