ஆறறிவைப் பயனாக்கி அறவழியில் நடப்போம் !… கவிதை…ஜெயராமசர்மா

வாயிருந்தும் பேசாத உயிர்கள் பலவிருக்கிறது
வாயிருக்கும் உயிர்களால் வதைபட்டு மடிகிறது
வாயிருக்கும் உயிர்கள் மனமிருக்கும் வக்கிரங்கள்
மடிந்து போகும்நாளே மண்மகிழ்ந்து நிற்கும்
ஆறறிவு என்று ஆட்டம்போடும் மனிதர்
அகமிருக்கும் அழுக்குகளால் ஆட்டம் போடுகின்றார்
ஆட்டமும் ஒருநாள் அடங்கிவிடு மென்று
அனுதினமும் நினைத்தால் ஆடாமல் நிற்பார்
இளமையிலும் ஆடுகிறார் முதுமையிலும் ஆடுகிறார்
இறுதியில்லை என்று இறுமாப்பும் கொள்ளுகிறார்
முடிவு வந்தவேளை முழிபிதுங்கி நிற்பார்
அழிவு வந்தணைக்கும் அனைத்துமே முடியும்
ஐந்தறிவு அத்தனையும் அஃறிணையே என்று
ஆறறிவு இருந்தால் உயர்திணையே என்று
வகுத்தவரே வழிதவறிச் சென்றுமே நின்றால்
படைத்தவன் பார்த்தபடி பொறுத்துமா இருப்பான்
பாராட்டும் தண்டனையும் படைத்தவனே கொடுப்பான்
பக்குவமாய் இருந்திட்டால் பலதுமே கொடுப்பான்
கெடுப்பாரைக் கீழாராய் படைத்தவனும் பாரான்
ஆறறிவைப் பயனாக்கி அறவழியில் நடப்போம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()