பல்கேரிய புதிய ஆட்சி மாற்றம்: மாஸ்கோ நோக்கி நகர்கிறதா ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உக்ரைனுக்கு இராணுவ ஆதரவு வழங்குவதையும் ருமென் ராதேவ் எதிர்த்துள்ளார். அதற்குப் பதிலாக, பரஸ்பர மரியாதை மற்றும் சமமான அணுகுமுறையின் அடிப்படையில் ரஷ்யாவுடன் புதுப்பிக்கப்பட்ட, நடைமுறை உறவுகளை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பல்கேரியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கையெழுத்தான பத்து ஆண்டு கால பாதுகாப்பு ஒப்பந்தத்தை ருமென் ராதேவ் எதிர்த்தார். ஐரோப்பாவிற்கான ரஷ்ய இறக்குமதிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்)
ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில் இருக்கும் பல்கேரியாவில் சென்ற வாரம் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரியின் தேர்தல் போல் பரப்பரப்பான ஒன்றாக இல்லாவிடினும், ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கேரியா எதிர்கொண்ட எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இது.
பல்கேரியாவில் (Bulgaria) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, ருமென் ராதேவ் (Rumen Radev) தலைமையிலான முற்போக்கு பல்கேரியா (Progressive Bulgaria) கட்சி பெரும் வெற்றி பெற்று, புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக கருத்துக் கணிப்பாளர்கள் ராதேவின் வெற்றியை கணித்திருந்தாலும், அது இவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 98.3 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி ரதேவின் கட்சி 44.7 சதவீத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தக் கைப்பற்றியது.

பல ஆண்டுகளாக நீடித்த நிலையற்ற கூட்டணிகள் மற்றும் தொடர் தேர்தல்களுக்குப் பிறகு, இந்த மிதவாத-இடதுசாரிக் கட்சி தனது போட்டியாளர்களை விட வெகுதூரம் முன்னிலை பெற்றுள்ளது. இது ஒரு நிலையான அரசாங்கம் அமையும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் ரதேவின் வெளியுறவுக் கொள்கை என்னவாக இருக்கும் என்பது குறித்தும், அவரது தேர்தல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் பல்கேரியாவின் நிலைப்பாட்டிற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
பல்கேரியா ஆட்சி மாற்றம்:
240 இடங்களைக் கொண்ட பல்கேரிய நாடாளுமன்றத்தில், ருமென் ராதேவ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி, 1997-க்குப் பிறகு முதல்முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களால், முந்தைய ஜெலயாஸ்கோவ் (Zhelyazkov) தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த விரைவுத் தேர்தல் (Snap election) நடத்தப்பட்டது.
தற்போது வெற்றி பெற்ற ராதேவ் தனது கட்சியைத் தொடங்கி நான்கு மாதங்களிலேயே ஆட்சியைக் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கே முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கேரியாவில் நடைபெறும் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இது நீண்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த மாற்றத்தின் மூலம் பல்கேரியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் ஊழல் நிறைந்த நாடாகக் கருதப்பட்ட நிலையில், புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்போக்கு பல்கேரியா கட்சி, 240 இடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில் 135 இடங்களில் வென்றதன் காரணமாக ருமென் ராதெவ் (Rumen Radev) பல்கேரிய மக்கள் தங்களது பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பல்கேரிய தேர்தலில் ருமென் ராதெவ் பெற்றுள்ள இமாலய வெற்றி, தற்போது ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு உண்மையான சீர்திருத்தவாதியா அல்லது பழைய அமைப்பின் மற்றொரு முகமா என்பதை எதிர்வரும் காலங்களில் காணலாம். பல்கேரிய நாட்டின் உண்மையான மாற்றமா அல்லது வெறும் பிம்பமா என்பதை அவரின் ஆரம்பகால ஆட்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.
மீண்டும் ருமென் ராதெவ்:
62 வயதான ருமென் பல்கேரியாவின் ஜனாதிபதியாக கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் பணியாற்றிய பிறகு, இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமராகும் தனது முயற்சியைத் தொடங்குவதற்காகப் பதவி விலகினார். 66 லட்சம் மக்கள் வசிக்கும் நாட்டைப் பீடித்துள்ள ஊழல் மற்றும் அரசியல் குழப்பங்கள் மீதான பரவலான அதிருப்திக்கு மத்தியில், முன்னாள் விமானப்படைத் தளபதி தன்னை ஒரு வெளியாளராக நிலைநிறுத்திக் கொண்டு, நாட்டை அதன் குழு ஆட்சி முறையிலிருந்து விடுவிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
2025இல் முன்னாள் பிரதமர் ரோசன் ஜெல்யாஸ்கோவின் பழமைவாத ஆதரவு பெற்ற அரசாங்கத்தைக் கவிழ்த்த ஊழலுக்கு எதிரான போராட்டங்களை ருமென் ராதேவ் ஆதரித்தார். வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதைத் தடுக்க, வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார்.
மேற்கத்திய நாடுகளின் தாக்கம்:
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைந்த பிறகு, பல்கேரியாவின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ருமென் ராதேவ் தனது மேடைகளில் ரஷ்ய ஆதரவு சின்னங்களைப் பயன்படுத்தினாலும், நடைமுறையில் நேட்டோ (NATO) படைகள் இன்னும் பல்கேரிய மண்ணிலேயே பாரியளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் அங்கே அமெரிக்காவின் பிடி தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. வர்ணா மற்றும் சோஃபியா விமான நிலையங்கள் இப்போதும் அமெரிக்க ராணுவப் பயன்பாட்டிலேயே உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் புதிய பல்கேரிய தலைவர் ருமென் ஹங்கேரியின் முன்னாள் அதிபர் விக்டர் ஓர்பன் போல துணிச்சலான முடிவுகளை எடுப்பாரா அல்லது மேற்கத்திய நாடுகள் ஆட்டும் தாளத்திற்கு ஆடும் அடுத்த பொம்மையாக இருப்பாரா என்பது தெரியவில்லை.

ஆனாலும் பல்கேரியா இன்று ஒரு முக்கியமான அரசியல் மாற்றத்தின் முனையில் நிற்கிறது. உலக நாடுகள் இந்த நகர்வை உற்று கவனித்து வருகின்றன. குறிப்பாக
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் தலைவர்கள் பல்கேரியாவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
உக்ரைனுக்கு ஆதரவு இல்லை:
2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய படையெடுப்பை அவர் பகிரங்கமாகக் கண்டித்த போதிலும், உக்ரைனுக்கு இராணுவ ஆதரவு வழங்குவதையும் அவர் எதிர்த்துள்ளார். அதற்குப் பதிலாக, பரஸ்பர மரியாதை மற்றும் சமமான அணுகுமுறையின் அடிப்படையில் ரஷ்யாவுடன் புதுப்பிக்கப்பட்ட, நடைமுறை உறவுகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மார்ச் மாதம் பல்கேரியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கையெழுத்தான பத்து ஆண்டு கால பாதுகாப்பு ஒப்பந்தத்தை ருமென் ராதேவ் எதிர்த்தார். ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் மற்றும் 2027-க்குள் ரஷ்யாவிலிருந்து அனைத்து எரிசக்தி இறக்குமதிகளையும் நிறுத்துவதற்கான கடந்த ஆண்டு இறுதி முடிவு இருந்த போதிலும், ஐரோப்பாவிற்கான ரஷ்ய இறக்குமதிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவை அனைத்தும் ஐரோப்பிய அரங்கில் அரசியல் விமர்சகர்கள் அவரை ரஷ்ய ஆதரவாளர் என்று முத்திரை குத்துவதற்கு வழிவகுத்தன. இருப்பினும், ருமென் ராதேவ் தான் ஒரு நடைமுறை அணுகுமுறையை மட்டுமே மேற்கொள்வதாகக் கூறியுள்ளார்.
ரஷ்யாக்கு ஆதரவான நிலைப்பாடு:

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில், ஸ்லாவிக் மற்றும் கிழக்கு ஆர்த்தடாக்ஸ் (Slavic and East Orthodox) ஆகிய இரண்டையும் கொண்ட ஒரே நாடு நாங்கள் தான் பல்கேரியா. தற்போது ரஷ்யாவுடனான உறவுகளை மீட்டெடுப்பதற்கான இந்த முழு செயல்முறையிலும் நாங்கள் ஒரு மிக முக்கியமான இணைப்பாக இருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, சிலர் ருமென் ராதேவை ஒரு யூரோ சந்தேகவாதி என்று முத்திரை குத்துகின்றனர். ஏனெனில் அவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைச் சார்ந்திருப்பது மற்றும் பல்கேரியா யூரோவை ஏற்றுக்கொண்டது உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையின் சில அம்சங்களை விமர்சித்துள்ளார்.
அதேவேளை தேர்தலைத் தொடர்ந்து, ரஷ்யா ருமென் ராதேவ்க்கு வாழ்த்து தெரிவித்து, அவரது வெற்றியை வரவேற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற திரு. ருமென் ராதேவ் மற்றும் சில ஐரோப்பியத் தலைவர்கள் நடைமுறை உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருப்பதாகக் கூறிய அறிக்கைகளால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம், என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார்.
![]()