இலங்கை

இடை நிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு;  கொலையா தற்கொலையா?; உடலில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள்

திறைசேரியின் 2.5 மில்லியன்(25 லட்சம்)அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரம் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகளுக்கமைய பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நான்கு அதிகாரிகளில் ஒருவரான நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரான 50 வயதுடைய ரங்க நிஷாந்த என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டியவில் உள்ள அவரது வீட்டின் பின்பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் அவரின் உடலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்கு பின்னால் அவர் சடலமாக கிடப்பது தொடர்பில் அவரின் உறவினால்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவர் நரம்வை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது எவராவது கொலை செய்துள்ளனரா? அல்லது தவறுதலாக அவரின் நரம்பு வெட்டப்பட்டதா? என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு கடனை செலுத்துவதற்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களின் கணக்குகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட நான்கு அதிகாரிகள் பணிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இரண்டு சந்தர்ப்பங்களில் ரங்க நிஷாந்தவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையில் நேற்று வியாழக்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *