‘யாரும் விமர்சிக்க விரும்பவில்லை… ஏனென்றால்…’; பிசிசிஐ-யை வறுத்தெடுத்த மைக்கில் வாகன்
டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய அணி படுதோல்வியடைந்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்தியா டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் செல்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் படுதோல்வியடைந்தது குறித்து இந்தியா அணியை முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கில் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை கூறியுள்ளதாவது:- 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்தியா என்ன செய்தது? ஒன்றும் செய்யவில்லை. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் காலாவதியான பழைய முறையில் இந்தியா விளையாடி வருகிறது.
வெள்ளை பந்து கிரிக்கெட் (ஓயிட் பால் கிரிக்கெட்) வரலாற்றில் மிகவும் மோசமாக விளையாடும் அணி இந்தியா. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய உலகின் எந்த வீரர்களும் தாங்கள் தங்கள் விளையாட்டு திறனை எவ்வாறு வளர்த்துக்கொண்டோம் என்று கூறுகின்றனர். ஆனால், இதுவரை இந்தியா என்ன கொடுத்துள்ளது? அவர்களை (பிசிசிஐ – இந்திய கிரிக்கெட் வாரியம்) யாரும் விமர்சிக்க விரும்பவில்லை ஏனென்றால் நீங்கள் சமூகவலைதளத்தில் கடுமையாக தாக்கப்படுவீர்கள்.
நிபுணர்கள் (கிரிக்கெட் விமர்சகர்கள், நிபுணர்கள்) இந்தியாவில் ஒரு நாளில் வேலையிழந்துவிடுவோம் என்று கவலைபடுகின்றனர். ஆனால், நேரடியாக சொல்லும் நேரம் வந்துவிட்டது. அவர்கள் (பிசிசிஐ) அவர்களின் சிறந்த வீரர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளலாம். ஆனால், மொத்தமாக சரியான திசையில் விளையாடும் சிறந்த அணியை பெறுவது தான் விஷயம். இந்தியாவின் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியா மிகவும் ஆழமாக பேட்டிங் செய்யவில்லை. சுழற்பந்து யுக்திகளும் இல்லை’ என்றார்.