தொடரும் பயணங்கள்!…. 2 …. ஏலையா க.முருகதாசன்.

பயணங்கள் செய்வதில் எனக்கிருக்கும் விபரத்தை நீண்ட கட்டுரையாக எழுதி அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்திற்கு அனுப்பி அதனை இணையத்தளம் 21.07.22 வெளியிட அதனை எனது முகநூலிலும் பதிவிட்டிருந்தேன்.
பொதுவாக என்னிடம் இருக்கும் பயணச் சீட்டின் மூலம் பல இடங்களுக்குப் போய்வரமுடியும் என்ற போதிலும் ஆனி 2022இல் அறிமுகப்படுத்தப்பட்ட 9 யூரோ பயணச் சீட்டின் மூலம் ஜேர்மனி எங்கினும் போகலாம் என்ற சலுகை என்னிடமிருந்த மாதாந்த பயணச் சீட்டிற்கும் பொருந்தும் என்பதால் அப்பயணச் சீட்டின் மூலம் பல நகரங்களுக்கு போயவரத் தொடங்கியுள்ளோம்;.
இப்பயணச் சீட்டை பலரும் வாங்கி வைத்திருந்த போதிலும்,’போய்த்தான் என்னத்தைப் பார்க்கப் போறோம், எங்களுடைய நகரத்தைப் போலத்தான் மற்றவையும் இருக்கும்,வழமையான மின்சார ரயில் வழமையான சனங்கள் அதுவும் இப்பொழுது மஸ்க் போட்ட பயணிகள் அவ்வளவுதான் எனச் சலிப்புடன் கூறும் மனிதர்கள்; ஏராளம்.
அதிசயங்கள் திடுதிப்பென நடக்க வேணும் அதைப்பற்றிப் பேசலாம் பார்க்கலாம் அதை விட்டிட்டு அங்கே போவது இங்கே போவது என்பதெல்லாம் வீண் வேலை என்பதும் இன்னும் பலருடைய எண்ணம்.
எண்ணுவதும் சிந்திப்பதும் அவரவர் உரிமை.ரயில் பயணங்கள் சுவையானவை.ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். டுசில்டோப் நகரத்திலிருந்து(டுசில்டோப் நகரம் என்பது ஜேர்மனியில் உள்ள நோட்றைன் வெஸ்பாலன் மாகாணத்தின் ஆடசித்தலைநகரம்)எனது நகரத்தை நோக்கி ரயிலில் வந்து கொண்டிருந்த போது எனது இடதுபக்க பார்வைக்குட்பட்ட எதிரே இருந்த இருக்கையில் சக பயணி ஒருவர் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் புத்தகத்தின் முன் அட்:டையைப் பார்த்த போது, அந்தப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் கூ ஆர் வி என்றிருந்தது.அதாவது தமிழில் „நாங்கள் யார்?’ என்பதாகும்.
இந்த நாங்கள் யார் என்பதற்கான பதிலாக கோடி பதில்கள் உண்டு.ஒரு ரயில் பயணத்தில் என் முன்னால் உட்கார்ந்திருந்தவரின் கையிலிருந்த ஒரு புத்தகம் எனது சிந்தனையைக் கிளறிவிட,இன்றுவரை நாங்கள் யார் என்ற கேள்வி வௌ;வெறு வடிவங்களில் வௌ;வெறு கோணங்களில் தோற்றப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.
அதன் தாக்கத்தால் நாங்கள் யார் என்ற உட்கருப்பொருளை வேறு வேறு சிந்தனைக்குட்படுத்தி தமிழ் ரைம் சஞ்சிகையில் எழுதத் தொடங்கினேன்.
இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் வேளை தமிழ் ரைம் சஞ்சிகையின் ஆசிரியர்: என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் யார் என்ற கட்டுரையை தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.
கிரேக்க தத்தவஞானி சாக்கிரட்டீஸ் ஒரு எக்ஸ் கதிரைக் கண்டு பிடித்தார்.அந்த எக்ஸ் கதிர் ஜேர்மனிய விஞ்ஞானி ரொன்ரஜன் கண்டுபிடித்த உடல் ஊடுருவிக் கதிரைவிட பலகோடி மடங்கு சக்தி வாய்ந்தது.
அதற்குப் பெயர்தான் „ உனை நீ அறி’ என்பதாகும்.உனை நீ அறி என்பது இருசெயல் கொண்டது.எல்லையற்ற மனித மனங்களை அணுவணுவளாக பிரித்துப் பிரித்துப் பார்ப்பதும், உடல் ரீதியாகவும் பார்ப்பதாக இவ்வாசகம் இருக்கின்றது.
ரயில் பயணியின் கையிலிருந்த புத்தகக் கொள்நிலையைக் கூறும் நாங்கள் யார்? ஏன்பதும் சாக்கிரட்டீசின் உனை அறி என்பதும் ஒரே கருப்பொருளையே கொண்டவையாகும்.
ஒரு புத்தகத்தின் தலைப்பே மலைப்பான சிந்தனைகளைக் கொண்டு வருமாயின் புத்தகத்தின் உள்ளடக்கம் சிந்திக்கவே முடியாததாகவிருக்குமே.
ஆக ரயில் பயணம் ஒன்று என்னைக் கட்டுரை எழுத வைத்திருக்கின்றது.பயணத்தின் போது எம்மால் கவனிக்கப்படும் மனிதர்கள், பொருட்கள் என்பனவும் யன்னலுக்கு வெளியே தெரியும்; மரங்கள் பூக்கள் ஆறுகள் குளங்கள் புல்தரைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் குதிரைகள் என்பனவும் பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளும் எமக்குள் ஒரு சிந்தனையைக் கிளறி விடுமே. மனம் சிலாகித்து மகிழ்வதும்,தொடர் தொடராக சிந்தனைகள் தோன்றுவதுமாக இருக்கும்.
நாம் செல்லும் நகரங்களில் பார்க்கும் மனிதர்கள் எமது நகரத்தவர்களல்லாதவர்களாக அவர்கள் எமக்கு புதிய உறவுகளாக தோற்றமளிப்பார்கள்.கடைகள் வீதிகள், உணவகங்களிலும் கோப்பிக்கடைகளில் வெளி முற்றத்தில் உல்லாசமாகச் சிரித்துப் பேசியபடி கோப்பி குடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் போது அவர்களின் மகிழ்வில் உல்லாசத்தில் குதூகலத்தில் பங்கு கொள்வது போல ஒரு உணர்வு ஏற்படும்.
இடுப்பைச் சுற்றி கட்டியணைத்துச் செல்லும் காதலர்கள் கடைத்தொகுதிகளின் வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நீர்ப்பூக்களில் தங்கள் சின்னப் பாதங்களினால் அடித்தும் உதைத்தும் விளையாடும் கள்ளங்கபடமற்ற சிரிப்புடன் அகலத் திறந்த கண்களுடன் சிரித்து மகிழ்ந்து குரல் எழுப்பிடும் சின்ன மழலைகள் சின்னஞ்சிறுசுகளைப் பார்க்கையில் „யாழினிது குழழினிது என்பார் தம் மழைச் சொல் கேளார் „என்பதற்கொப்ப வேறொரு மொழி மழலைகள் எனினும் குரலினிமையும் சிரிப்பலையாலும் கேட்போர் பார்ப்போரின் மனம் உவகையால் பொங்கும்.
ஐஸ்கிறீம் விற்பனைக் கடையைக் கண்டதும் கண்களால் கடையைக் காட்ட குறிப்பறிந்த காதலன் காதலியை அழைத்துச் சென்று உட்கார வைத்து காதலிக்கு விருப்பமான ஐஸ்கிறீமை வாங்கிக் கொடுப்பதும்,காதலியின் இதழில் துளியாகி
நிற்கும் ஐஸ்கிறீம் துணிக்கைள் காதலனைக் கிறங்கச் செய்யும். காதலனின் இதழ் அவளின் இதழை நோக்கித் துடிப்பதும்,ஆட்கள் இருக்கிறார்கள் என அவள் கண் ஜாடை காட்டுவதும்,அக்காதல் காட்சியைக் கண்டும் காணதது போல ஒரு சிறு புன்னகையுடன் அவர்களைக் கடந்து செல்வதும், இவைகூட பயணங்களால் கிடைக்கும் ஆனந்தமே.
இவையெல்லாம் பயணங்களால் ஏற்படும் பேறுகள்.ரயிலில் உட்கார்ந்திருக்கும் பயணிகள் ஒவ்வொரு முகமுடையோராய் அவரவர் மனங்களில் எழும் உணர்வுகளை வெளிக்காட்டியபடியும், வேறு வேறு வயதுடையோராயும்,வீட்டிலிருந்து போவோராயும்,வேலைத்தளத்திலிருந்து வீட்டுக்குப் போவோராயும், பாடசாலையிலிருந்து போவோராயும்,சில இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டு வட்ஸ் அப்பில் குறும்புகளை தனது தோழிகளுக்கு அனுப்பும் இளந்தாரிகள்,இருக்கைகள் நிறைந்து நின்றிருப்போரும் பயணிகள் நெருக்கியடித்து நிறைந்த நிலையிலும்,அந்நிலையிலும்கூட கைத்தொலைபேசியை கரைச்சல்படுத்திக் கொள்வொரும், ரயில் நின்றதும் கைத்தொலைபேசியில் இருந்து கண் எடுக்காமல் கைகள் அதில் ஸ்பரிசம் செய்ய திறந்த கதவின் வழியாக,கால்களும் தானியங்கியாக மேடை தொட்டு நடந்து சொல்வோரைக் காண்கையில் எம்மையறியாமலே ஒரு சிரிப்புத் தோன்றும்.இவையும் பயணங்களின் இனிய அனுபவங்களே.
கம்பீரத்திற்கு குதிரையை ஒப்பிடுவதுண்டு.புல்வளிகளில் மேயந்து கொண்டிருக்கும் குதிரைகளின் அழகோ தனிக்கம்பீரமான அழகு.கால்களை கம்பீராமக வைத்துக் கொண்டு,உணவு கிடைத்துவிட்டதே என்று அங்கலாய்க்காமல் நிதானித்து நின்று புல்மேயும் குதிரைகளின் இயல்பு அவைக்கான தனயியல்பே.கண்கள் அதனை இரசித்து சிலாய்கித்து மகிழும்.
போகுமிடம் நொக்கிய பயணத்தில் ரயில் பயணத்துக்கு அடுத்து பஸ் பயணம்கூட மகிழ்வான பயண அனுபவமே.நெருக்கியடித்து பயணிகள் நிறைந்து இருக்கும் நிலையிலும்கூட ஒவ்வொருவர் முகத்தையும் கண்கள் ஆராயும்.இத்தருணம் போல் எம் நகரமெனில் அனைவரும் எம் நகரத்தவர் என்ற நினைப்பு மனங்களை ஒன்றிணைத்து நிற்கும்.ஆனால் பஸ்களில் உள்ளோர் அவரவர் இடங்களில் இறங்குவதற்கு முன்னரே ஒருவருக்கு ஒருவர் நிற்பதற்கோ இருப்பதற்கோ விட்டுக் கொடுப்பதன் மூலமும் புன்னகைப்பதன் மூலமும் சக பயணி எள்ற உறவுக்குள் வந்துவிடுவர்.
எனது மனைவியுடன் தனியாகவும், வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களுடனும் பயணங்களை மேற்கொள்வேன்.
ஆரம்பத்தில் எமது நகரத்தின் அயல் நகரமான பொட்றொப் நகரத்திற்கும் பின்னர் டோட்முண்ட் நகரத்திலுள்ள போயினிக் கடல் பகுதிக்கும் சென்று வந்தோம்.
ஊரில் எமது ஒழுங்கை, எமது குச்சொழுங்கை எமது வயல்கள் எமது வயல் வரம்புகள்,எமது வெள்ளவாய்க்கால்,எமது வீதிகள் என்ற இவையெல்லாம்
எமக்குள் ஒரு அந்நியோன்னிய உறவை ஏற்படுத்துவது போல,ஜேர்மனியில் நாம் வாழும் நகரங்களில் காண்பவை எல்லாம் எமக்குப் பரிச்சயப்பட்டவையாகத் தோன்றும்.
தினம் தினம் ஒரு பஸ் தரிப்பு நிலையத்தில் நின்று பயணத்தை மேற்கொள்வோமானால் அவை எம்மோடு நெருங்கிய உறவாகவே தோன்றும்.
ஒரு புதிய இடத்திற்குப் போகும் போது அங்குள்ள மனிதர்களும் காணும் பொருட்களும் அந்நியப்பட்டவையாக தோன்றிடினும் ஒரு சில நிமிடங்களில் நாம் காணும் மனிதர்களும் பொருட்களும் நெருங்கியவர்களாகிவிடுவார்கள்.
பொட்ரொப் நகரத்தைச் சுற்றிப் பார்த்த நானும் மனைவியும்,ஜஸ்கிறீம் சக கோப்பி விற்கும் கடையில் மனைவிக்கு ஜஸ்கிறீமும் எனக்கு கோப்பியும் வாங்கி கடைத்தொகுதிகளின் மரநிழலில் இருந்த சீமெந்துத் திட்டிருக்கையில் அமர்ந்து வாங்கியவற்றைச் சுவைத்தோம்.
அங்கே சிறுவர் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.வசந்தகால வெயிலும்,அங்குமிங்கமாக வண்ண வண்ண உடைகளில் திரியும் ஆண்களையும் பெண்களையும் பார்த்து இரசித்தோம்.
வசந்தகாலமென்றால் பெண்களுக்கு பெருமகிழ்ச்சி அழகான உடைகளை முழங்காலுக்கு மேல் உடுத்துவதில் அவர்களுக்கு அலாதி விருப்பம் உண்டு.பொட்ரொப் நகரத்திற்கு பஸ்ஸிலேயே சென்று வந்தோம்.
டோட்:முண்ட் போயினிக் கடலடிக்குப் போவதற்கு எமது நகரத்திலிருந்து ரயிலில் டோட்முண்ட் பிரதான ரயில் நிலையம் வரையும் சென்று அங்கிருந்து நிலத்தடி ராமில் கேர்ட இடம் வரையும் சென்று அங்கிருந்து எமதுஇலக்கான போயினிக் கடலடிக்குச் சென்றோம்.
இது செயற்கையாக உருவாக்கப்பட்ட கடல்.முன் பகுதியில் படிகள் அமைக்கப்பட்டிருந்தன.அவற்றில் பல ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருந்தனர்.அதிலும் இதிலுமான கோப்பி குடிப்பவர்களாகவும் ஐஸ்கிறீம் சாப்பிடுபவர்களாகவும் கடலைப்: பார்த்து இரசிப்பவர்களாகவும், கடலில் நீந்திக் களித்த வாத்துக்களையும்,கடலைவிட்டு வெளிவந்து குரலெழுப்புp அசைந்தசைத்து வாத்துக்கள் செல்வதையும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர்.
நானும் மனைவியும் ஒருவரையொருவர் படம் எடுக்கையில், யாரைக் கொண்டு எம்மை படம் எடுக்கச் சொல்லிக் கேட்கலாம் என சுற்று முற்றும் பார்த்த போது எனது பார்வையின் வேண்டுகோள் புரிந்தோ என்னவோ படியில் உட்கார்ந்திருந்த ஒரு ஜேர்மனியர் சிரித்த முகத்துடன் எழுந்து வந்து „நில்லுங்கள் நான் எடுக்கிறேன் „ என எமது தொலைபேசியை வாங்கி எடுத்துத் தந்து உதவினார்.அவருக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தோம்.
அந்தச் செயற்கைக் கடலைச் சுற்றி நடைபாதையும் சைக்கிள் பாதையும் அமைக்கப்பட்டிருந்தன.ஆங்காங்கே இருக்கைகளும் இருந்தன.இருக்கைகளில்
பலர் இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.இன்னும் பலர் நடந்து கொண்டும் சைக்கிளில் சென்று கொண்டுமிருந்தனர்.
திரும்பி வரும்போது கடலடிக்கண்மையிலிருந்த ஒரு கோப்பிக் கடையில் கோப்பி குடித்தோம்.ஆனால் கோப்பி அவ்வளவு சுவையாக இல்லை.
வீடு நோக்கி திரும்பி வருகையில் ராம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
போயினிக் கடல் இருந்த கேர்ட நகரத்திலிருந்து நேரடியாக எமது நகரத்திற்கு ரயில் இருந்ததால், ரயிலில் எமது நகரத்திற்கு வந்து வீடு வந்து சேர்ந்தோம்.
(பயணிப்போம்)
![]()