கட்டுரைகள்

யார் எழுத்தாளன்?…. ( கிறுக்கல் இரண்டு) …. சங்கர சுப்பிரமணியன்.

எனக்கு தெரிந்தவரை காதல்கடிதம் எழுதுபவர்கள் கூட கவிஞர்களே. காதலிக்கும் இருவரைத் தவிர காதலுக்கு தூது செல்பவர்கள் படிக்கக்கூடும். பழைய இலக்கியங்களில் காதலுக்கு தோழி தூதுபோகும்போது அது மற்ற தோழியருக்கும் பரவுவதுபோல இக்காதல் கடிதங்களும் ஒருகுறிப்பிட்ட வட்டத்துக்கள் தெரியவரும். அப்படியான கடிதங்களை பலர் படிக்கமுடியாவிட்டாலும் காதலர்களின் வட்டத்துக்குள் அது கவிதையாகிவிடும்.பறவைகள் பலவிதம் என்பதுபோல் எழுத்தாளர்களும் பலவிதம். சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு சமுதாயம் உய்யவேண்டும் என்ற உயரிய நோக்கோடுஎழுதுபவர்கள் ஒருவகை. சமூகம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் சமூகத்தை சிந்திக்கவிடாமல் அவர்களது மூளையை மழுங்கடிக்கும் எண்ணத்தில் தமது கருத்தை எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஒருவிதம்.எழுத்தாளர்களில் பலரை நாம் எழுத்தாளர்தானா என்று எண்ணும்படியான எண்ணம் நமக்கு வரும். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இப்படிப்பட்டவர்கள் சொக்கம்பட்டிக்கு வழிகேட்டால் ரெட்டியார் பட்டிக்கு வழிசொல்லிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் தெரிந்து செய்கிறார்களா தெரியாமல் செய்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஏனென்றால் அவர்கள் எழுத்தாளர் வேலையைவிட்டு செய்தித் தொகுப்பாளர் வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.வரலாற்றை கதையாக தக்க ஆவணங்களோடு எழுதுவோரும் உண்டு. வரலாற்றைத் திரித்து கதையென்ற போர்வையில் ஒரு இனத்தின் வரலாற்றை மறைத்து எழுதுவோரும் உண்டு. மதத்தை பொருத்தவரையில் தீவிரமாக ஈடுபாடுள்ளவர்கள் ஒருவகை என்றால் மிதமான போக்குடையவர்களும் உண்டு. இதில் தீவிரமாக ஈடுபாடுடையவர்கள் மதத்தின்பால் எழுகின்ற ஈர்ப்பால் மதத்தைப் பற்றி அதிகமாக எழுதுவார்கள்.சிலர் அவசியமானதை விட்டு அவசியமானவற்றை எல்லாம் எழுதிக் கொண்டிருப்பார்கள். ரோம் பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப்போல. நாடுபோற்றும் ஒரு திட்டத்தை அமைச்சர் தெரிவித்திருப்பதை விட்டு நடிகைக்கு குழந்தை பிறந்ததை முதல் பக்கத்தில் வெளியிடும் செய்தித்தாள்களைப்போல் நடப்பார்கள். கொல்கொத்தாவில் பாலம் இடிந்து விழுவது முக்கியமா? கோமளவள்ளிக்கு வளைகாப்பு முக்கியமா என்றால் வளைகாப்புதான் இவர்களுக்கு முக்கியம்.சிலருக்கு எதையும் சரிவர எழுதவே தெரியாது. இவர்களுக்கு ஆபத்துக்கு உதவும் ஆசாமிகள் இருப்பார்கள். நடிகைக்கு ஒப்பனையாளர்போல் இந்த ஆசாமிகளால்சரிவர எழுதப்படாதவற்றை மாற்றி சேர்க்க வேண்டியதைச் சேர்த்து விலக்க வேண்டியதை அகற்றி திருத்தம் எல்லாம் செய்து கொடுத்ததை வைத்து எழுத்தாளர்களாக வலம் வருவார்கள். எந்த ஒரு எழுத்தாளனுமே எடுத்தவுடனேயேசிறப்பாக எழுதிவிட முடியாது. தொடர்ந்து எழுதிவரும்போது பெறும் அனுபவமே ஒருவனை சிறப்பாக எழுத வைக்கிறது. இதையுணர்ந்து அவரே தமது எழுத்தைசிறிது சிறிதாக செதுக்கவேண்டும்.இதை உணராமல் மற்றவர் தயவை நாடக்கூடாது. அப்படி நாடும் பட்சத்தில் எத்தனை படைப்புக்களை படைத்தாலும் தன்னம்பிக்கை வராமல் அடுத்தவர் கையை நாட வேண்டியதாகவே இருக்கும். இதை மற்றவர்களும் உணரவேண்டும். அப்படியே உதவ வேண்டுமானால் அவர்களுக்கு வாய் வார்த்தையாக சிலவற்றை சொல்லித்தரலாமேயன்றி தாமே மாற்றித்தரக்கூடாது. இதனால் நாம் உதவி செய்கின்றோம் என்ற நிலைமாறி அவர்களுக்கு நாமே முட்டுக் கட்டையாய் இருப்போம் என்பதை  உதவி செய்பவர்கள்உணரவேண்டும்.ஒரு மேடைப் பேச்சாளன் சுயமாக பேசவேண்டும். யாராவது எழுதிக்கொடுத்து பேசினால் அது எடுபடாது. சில அரசு பொருப்பில் இருப்பவர்களுக்கு அவர்கள் பேசவேண்டியதை தயாரித்து கொடுப்பார்கள். அப்படியல்ல எழுத்தாளன் என்பவன். எல்லாமே அவனுள் இருந்து வரவேண்டும் அதுதான் அவன் எழுத்துக்கு தரும் மதிப்பு. ஒருகாலத்தில் திருமணத்தைநடத்துவது மிகவும் சிரமமான வேலையாக இருந்ததால் அது ஒரு சவால் போலவே இருந்தது.அதனால்தான் வீட்டைக்கட்டிப்பார் திருமணத்தை நடத்திப்பார் என்றார்கள். ஆனால் இன்று வீடு கட்ட மனையையோ வீடுகட்டித்தரும் ஆட்களேயோ சல்லடை போட்டுத்தேட வேண்டியதில்லை. பணமிருந்தால் ஹவுஸ் அன்ட் லான்ட் பேக்கேஜ் என்ற அலிபாபாவும் அற்புத விளக்கையும் போன்ற வீடுகட்டித்தரும் நிறுவனங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறது.இதைப்போல பெண்ணையும் மாப்பிள்ளையையும் தேடுவதற்கு மாட்ரிமானியல் சைட்டில் இருந்து திருமணவேலை சம்பந்தப்பட்ட அத்தனையையும் செய்ய ஈவன்ட் மானேஜமன்ட் வரை பணமிருந்தால் எளிதாக நடத்த பணத்தைக் கொடுத்து பவணி வருபவர்களும் இல்லாமல் இல்லை. இதுபோல் பணத்தால் எழுத்தாளன் ஆகிவிடமுடியாது.பணமிருந்தல் மருத்துவராகலாம் பொறியாளராக ஆகலாம் வழக்கறிஞராகவும் ஆகலாம். பணமிருந்தால் எழுத்தாளன் ஆகிவிடமுடியுமா? ஆனால் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் அரசியல்வாதிகள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகிவிடுகிறார்களே? அது எப்படி? அதே வேளை துணை நடிக நடிகைகளோ வார்டு கவுன்சிலரான அரசியல்வாதியோ எழுத்தாளன் ஆகமுடிவதில்லையே? என்று சிந்தித்தால் பல முடிச்சுகள் அவிழும்.அதற்காக வறியவர்களால் எழதமுடியாது என்று சொல்லமுடியாது. அடிவயிற்றில் பசி பற்றி எரியும்போது கற்பனை எவ்வாறு உதிக்கும்? கருத்துக்கள் எவ்வாறு பிறக்கும்? அதிலும் விதிவிலக்காக பாரதியார் போன்றோர் இருப்பதுண்டு. பெரும்பாலும் எழுத்தாளர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பதில்லை. எழுத்துலகில் பெரிதாக சம்பாதித்து விடவும் முடியாது. சில எழுத்தாளர்களால் தாம் எழுதியதை வெளியிடவே கையில் காசு இருக்காது. இதில் வெளிநாட்டு இருக்கும் எழுத்தாளர்கள் விதிவிலக்கு. நூல்கள் விற்கிறதோ இல்லையோ நூல் வெளியீடென்பது கல்யாணம் காதுகுத்து என்பதுபோல் ஒரு சடங்காகவே மாறிவருகிறது.-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *