21 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி மே தினத்தில் தனது மக்கள் பலத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி

சர்வதேச தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியன்று ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி தமது மக்கள் பலத்தை வெளிப்படுத்திய அதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் தமது ஆதரவாளர்களை அணிதிரட்டி பலத்தை காட்டியது.
கடந்த காலங்களில் வழமையாக ஜே.வி.பி பிரமாண்ட பேரணியுடன் மேதினக் கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், இம்முறை அரசாங்க கட்சியென்ற வகையில் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கி ‘மக்கள் ஆட்சிக்கு மக்கள் பலம்’ என்ற தொனிப்பொருளில் 21 இடங்களில் மேதினக் கூட்டங்களை நடத்தியதால் பிரமாண்டமான பேரணிகள் இன்றி கூட்டங்களை நடத்தியது. எவ்வாறாயினும் அந்தக் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்ட கூட்டம் முற்பகல் வேளையில் நுவரெலியாவில் நடைபெற்றது. இதில் பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவான தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் ஜனாதிபதி கலந்துகொண்ட மற்றுமொரு கூட்டம் மஹரகம நகரில் மாலை நடைபெற்றது. அதேபோன்று யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் மேதினக் கூட்டங்களில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் அரசாங்கத்திற்கு எதிரான கூட்டமாக ‘உருட்டு, பிரட்டு, திருட்டு’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டீ.சிறிசேன மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் நடெங்கிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதேபோன்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் பொரளை கெம்பல் மைதானத்திலும், சர்வஜன பலய கட்சி, பொரளை பார்க் அவனியு பகுதியிலும், முன்னிலை சோஷலிசக் கட்சியின் கூட்டம் ஹைட்பார்க் மைதானத்திலும் நடைபெற்றது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறிய கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் கொழும்பில் பல்வேறு இடங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட மலையக கட்சிகள் கடந்த முறையை போன்று இம்முறையும் பிரதான கூட்டங்களை நடத்தவில்லை. எனினும் தோட்டங்கள் வாரியாக தமது தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்டு சிறியளவிலான கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. . அத்துடன் வடக்கு. கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் சிறியளவிலான கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் சில இம்முறை மேதின நிகழ்வுகளை நடத்தவில்லை. பௌத்தர்களின் புனித தினமாக பௌர்ணமி தினம் என்பதனால் மேதின கூட்டங்களை நடத்துவதை தவிர்த்துக்கொண்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒவ்வொரு பிரதேசங்களிலும் விகாரைகளில் விசேட வழிபாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிலையில் கடந்த காலங்களை போன்று அரசியல் கட்சிகளிடையே ஏட்டிக்கு போட்டியான மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் காணக்கிடைக்கவில்லை. ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுமே பெருமளவான ஆதரவாளர்களுடன் தமது பலத்தை காண்பிக்க முயற்சித்தன.
![]()