ஐ.தே.க.வுடன் நாங்கள் இணைந்துவிட்டோம்; சீர்குலைக்க இடமளியோம் – சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே இணைந்துவிட்டோம். இந்த இணைவை சீர்குலைக்க சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
திறைசேரி என்பது நாட்டு பொருளாதாரத்தின் இதயமாகும். மின்சாரம் என்பது நாட்டின் வெளிச்சமாகும். கல்வி என்பது நாட்டின் எதிர்காலமாகும். துறைமுகம் என்பது வர்த்தகத்தின் மையமாகும். ஆனால் இந்த ஜே.வி.பி அரசாங்கம் இவை அனைத்தையும் பலவீனமாக்கி பாதுகாப்பற்றதாக்கியுள்ளது. கொள்கலன் பிரச்சினை, தரமற்ற நிலக்கரி ஆகியன தொடர்பில் எவரும் பொறுப்பெற்கவில்லை. 2.5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளது. இதற்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.
திருடர்களை பிடிப்பதாகவே இந்த அரசாங்கம் கூறியது. ஆனால் அரசாங்கத்தினால் திருடர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்நிலையில் நாட்டை சீர்குலைக்கும் வலையங்கள் உருவாகுவதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் பெலவத்தையினால் புதிய திருடர்களின் வலையமும். பொய்யர்களின் வலையமும் உருவாகின்றன.
எவ்வாறாயினும் மக்களிடம் புதிய எதிர்பார்ப்புகள் உள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் நாட்டுக்காக வேலை செய்யும், அபிவிருத்திகளுக்காக அரசாட்சிக்கான ஆரம்பத்தை நாங்கள் முன்னெடுப்போம். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். 76 வருட பழைய அரசியலாக அன்றி தீர்வுகளை வழங்கும் அரசியலை செய்வோம். அரசாங்கத்திற்காக கடைக்குச் செல்லும் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியும், எதிர்க்கட்சியும் பலவீனமானது என்று கூறுகின்றனர். ஆனால் நாங்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து முன்னர் இருந்த சபாநாயகரை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். மின்சக்தி அமைச்சர் மற்றும் செயலாளரை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். காய்க்கும் மரத்துக்கே கல் வீசுவர். நாங்களே மக்களை கட்டியெழுப்பும் கட்சியாகும். நாங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவது உறுதியாகும்.
எமது மேதினத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம். எமக்கு ஒன்றாக பணியாற்ற குழுவொன்று அவசியமென்று யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்விடத்தில் நான் ஒன்றை கூறிக்கொள்கின்றேன். அதற்கு குழு அவசியமில்லை. இருதரப்பினரும் இணைந்துவிட்டோம். குழுவில் இந்த இணைவை தடுக்க சிலர் இணையலாம். எமது இணைவை சீர்குலைப்பதற்காக வரலாம். அதற்கு இடமளிக்கப் போவதில்லை. நாங்கள் நிச்சயமக ஒன்றாகவே முன்னால் செல்வோம் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.
இதேவேளை முடிந்தால் மாகாண சபைகள் தேர்தலை நடத்திக் காட்டுங்கள். இதனை சவாலாக முன்வைக்கின்றோம். இந்த மேதினக் கூட்டம் வெற்றியளித்துள்ளது. முடிந்தால் மாகாண சபைகள் தேர்தலை நடத்துங்கள். அடுத்த மேதினக் கூட்டத்தை எமது முதலமைச்சர்களுடனேயே நடத்துவோம் என்பதனை கூறிக்கொள்கின்றோம்.
![]()