பல்வேறு நாடுகளிலும் ராஜபக்ஷக்கள் பதுக்கிய பணம் மீட்கப்படும்

முந்தைய அரசாங்கங்களின் தலைவர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்டவர்கள், பதுக்கிய தொகை மற்றும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாடுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசாங்கம் வெளியிடும் என்று தெரிவித்தார்.
இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வெளிநாடுகள் அரசாங்கத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறினார்.
“வெளிநாடுகள் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றன. முந்தைய அரசாங்கங்களுக்கு எந்தவொரு நாடும் விசாரணைகளை நடத்த ஆதரவளிக்கவில்லை. ஆனால் இந்த முறை அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள். இந்த ஆதரவின் காரணமாகவே நாங்கள் பல பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது,” என்று அவர் கூறினார்.
உகாண்டா போன்ற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“முந்தைய ஆட்சிக்காலங்களில் தலைவர்களால் இழைக்கப்பட்ட மோசடி மற்றும் ஊழல்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் பல நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
![]()