இலங்கை

யாழில் காணி அபகரிப்பில் ஈடுபடும் அடாவடிக் கும்பல்; பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அந்தக் கும்பல், ‘காணி தங்களுடையது எனவும் , உங்களுடைய காணி என்றால் , அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து’ என மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர். உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பில் தான் பொலிஸில் முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , குறித்த கும்பல் காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளது.

அதேவேளை அந்தக் கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில் வேறொரு வெற்றுக் காணிக்கு தூண்களை இடும் வேலைகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர் சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டிய போது , அவர் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

இந்தக் கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் இந்தக் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button