பெண் அழகுப் பேழை!….. கவிதை…. சங்கர சுப்பிரமணியன்

(மணி என்று முடியும் சொல்கொண்டு குறைந்த பட்சம் ஏழு சொற்களுடன் பெண்ணை வர்ணித்து ஒரு கவிதை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு போட்டி. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாக ஏற்கப்பட்ட என் கவிதை. போட்டியை நடத்தியவர்கள் மெல்பனிலேயே இருக்கிறார்கள்.)
கார்குழல் வனப்பு கண்டு அதில் தவழ்ந்து விளையாட
மேரு முகடு விட்டு தென்றலும் மிதந்திங்கு வந்ததுவே
பொன்மணி எனும் பெயருக்கேற்ப அவளும் பொன் நிறமே
பெண்மணி அவள் பேரழகோ என்னை பித்தனாகவும் வைத்திடுதே
செம்மணி சூழ் கருமணி விழிகள் அழகாய் மிரண்டு துள்ள
சிறுமணி போல் என் உருவம் நிழலாய் அவற்றுள் தெரிந்திட்டாலும்
அம்மணி மதிமுக அழகு ஒன்றைத்தான் கண்டு நின்றேன்
சங்கப் புலவர் வர்ணித்தது போல் சங்கு கழுத்து கண்டேன்
சங்கு கழுத்தழகில் முத்துமணி மாலை சற்று ஒளி இழக்க
அங்க அழகெல்லாம் கழுத்தின் கீழ் கூற நினைக்கின்றேன்
இங்கு தடையுண்டு வர்ணனையும் வரம்பு மீறக்கூடும் என்று
தங்குதடையின்றி சொல்ல பண்பு தடையாயும் இருப்பதாலே
பொங்கி நிற்கும் அவள் அழகைச் சொல்ல நான் கம்பனல்ல
சரமணி ஒன்றே அவள் பேரழகை இயல்பாகச் சொல்லிடும்
விண்மணி அடியினில் தோன்றிய வியனுறு இவ்வுலகினில்
தண்மணி அவளே தகைசார் அக அழகுடனே மிளிர்வதாலே
சிறுமணி ஒலிக்கும் சதங்கையொடு பாதம் நிலமதில் பதிய
உறுமணி விரிய உறைந்திட்டேன் உன்னத வண்ணம் கண்டு
உச்சிமுதல் பாதம்வரை அழகை உள்ளபடி சொல்லாவிடினும்
தச்சன் உளி சிலையினிலே சொல்லமுடியா வனப்பனைத்தும்
இச்சை கொள்ளும் அளவில் அழகை இயல்பில் பெற்றதாலே
கொச்சை மொழியில் அவளழகை கூட்டவும் தேவையில்லை
பச்சை மலையில் ஆடும் மயில்போல் பாவையவள் ஆடலழகு
மெச்சி உயர்த்திச் சொல்ல குரலோ சோலைக்குயில் இனிமை
மெத்தப் படித்திருந்தும் பணிவில் மேன்மைமிகு பண்பழகாம்
தித்திப்பாய் பேசுமழகும் எந்தக் கல்லையும் கனியாக்கி விடும்
இத்தனை அழகையும் இயற்கை அங்கமணியாய் இழைத்திருக்க
சத்தமெழுப்பா நிறைகலசம் சமைந்திருந்தாற் போல் இருந்தாள்!

![]()