இலங்கை

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய உரை: மொட்டு கட்சி கூறுவது என்ன?

“ஒற்றையாட்சியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்ற கொள்கையில் எமது கட்சி உறுதியாக உள்ளது. இதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.

அர்ச்சுனா எம்.பியின் அனுராதபுர உரை எமது கட்சியின் கொள்கைக்கு முரணாக அமையவில்லை” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பங்கேற்றமை தொடர்பில் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகையில்,

“அர்ச்சுனா இராமநாதன் உங்கள் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். பிரதான பேச்சாளராகக் கலந்துகொண்ட அவருக்கு, மஹிந்தராஜபக்சவுக்கு அருகிலேயே ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது. போரிலிருந்து இந்நாட்டைக் காப்பாற்றியவர் மஹிந்த ராஜபக்ச; ஆனால், பிரபாகரனைக் கடவுளாக வழிபட்டவர்தான் அர்ச்சுனா எம்.பி. ஆக, ஒரே மேடையில் முரண்பாடான இருவர் உள்ளார்களே?” எனக் வினவினர்.

இதற்குப் பதிலளித்த சாகர காரியவசம்:

“இதுதான் அங்குள்ள விசேட அம்சமாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணா அம்மான், ஜனநாயக வழிக்குத் திரும்பி மஹிந்தவுக்கு அருகில் வந்து அமர்ந்து, பிரிவினைவாதச் சிந்தனையிலிருந்து விடுபட்டார்.

அதேபோன்று பிள்ளையானும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்தான். அவரும் ஜனநாயகப் பாதைக்கு வந்து, பிரிவினைவாதச் சிந்தனையிலிருந்து விடுபட்டார். அர்ச்சுனாவும் அதேபோன்றதொரு சிந்தனையில் இருந்தவர்தான்.

ஆனால் எதிர்காலத்தில் அவரும்…” என்று கூறிய அவர், அந்த இடத்தில் தான் கூறவந்த விடயத்தை முழுமைப்படுத்தவில்லை.

தொடர்ந்து, அர்ச்சுனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது யார் என்ற கேள்விக்குப் பதிலளித்த சாகர காரியவசம், “நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மூலமாகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்று தேசிய சமத்துவம் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்குமாறு அர்ச்சுனா தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அர்ச்சுனாவின் உரை எமது கட்சியின் கொள்கைக்கு முரணாக அமையவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *