நல்லூரில் தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்; பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் அஞ்சலி

தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றுப் புதன்கிழமை காலை-09 மணியளவில் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மாவீரர் செங்கையாழினியின் சகோதரன் கந்தையா விமல்ராஜ் ஈகச் சுடரேற்றினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து திலீபனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டுத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியிலும் திலீபனின் உருவப்படம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேற்று முற்பகல்-10.30 மணியளவில் யாழ்.வடமராட்சியின் பாடசாலையொன்றைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் அமைந்துள்ள உருவச் சிலைக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர். அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பலரும் நேற்றைய தினம் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு நேற்று முற்பகல்-09.15 மணி முதல் நேற்று மாலை-05 மணி வரை இரண்டாவது தினமாகத் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
![]()