இலங்கை

எமக்கு இழைக்கப்படும் அநீதிகளால் இலங்கையின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு இலங்கையில் இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம். தமிழ் சமூகத்தை அழித்துவிட்டோம், மெல்லமெல்ல சாட்சிய அழிப்பை செய்துவருகின்றோம் என நினைத்துக்கொண்டிருந்த தரப்பினரின் முகத்தில் கரியைப் பூசியிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்கள் மேலும் கூறுகையில்,

இறுதிப் போர் வேளையிலும், அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் எமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டநிலையிலும், இராணுவத்தாலும், அவர்களோடு சேர்ந்தியங்கிய துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்திச்செல்லப்பட்டநிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காணாமலாக்கப்பட்ட நாள் தொட்டு தமது உறவுகளைத் தேடி வீதியில் இறங்கிய ஒவ்வொரு தமிழ் தாய்மாரும், ஒவ்வொரு தமிழ் தந்தைமாரும், உறவினர்களும் இணைந்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினை ஆரம்பித்தோம். 2017ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில்தான் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30ஆம் நாளாகிய சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான தினத்தில், வடக்கு கிழக்கின் தமிழ் தாய்மார்களாகிய நாம், மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம். அப்போராட்டங்களில் எமது கோரிக்கைளை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்திவந்தோம். இவ்வருடம் போராட்டத்தோடு இணைந்த வகையில் எமது கோரிக்கைளை இன்னும் வலுவாக முன்வைக்கும் பொருட்டு சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தினோம்.

அந்த மாநாட்டில் உலகத்திடம் நாம் எதனை எதிர்பார்க்கிறோம் என்பதனைப் பிரகடனமாக வெளியிட்டதோடு, எமது தொடர் போராட்டம் குறித்த தமிழ் சமூகத்தினதும்,சர்வதேச சமூகத்தினதும் கரிசனையை கூட்டாக வெளிப்படுத்தினோம். இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சர்வதேச பிரதிநிதிகள், இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ் தாய்மார்கள் படுகின்ற இன்னல்களையும், நீதி மறுப்பையும், சர்வதேச நீதியைக் கோருவதற்கான நியாயத்தையும் விளங்கிக்கொண்டனர். அதனை வெளிப்படுத்தியுமுள்ளனர்.

அதேவேளை தமது பிள்ளைகளைத் தேடிய நீண்ட பயணத்தில் தாய் தந்தையர்கள் பலர் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே இறந்துபோய்விட்டனர். அவர்களின் நீதிக்கான தேடலை ஆவணப்படுத்தியதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நினைவாக அவர்களைத் தேடும் உறவினர்களிடம் எஞ்சியிருக்கும் நினைவுப் பொருள் நீதியைத் தேடும் போராட்டத்தில் பலமிக்க ஆயுதம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம்.

இம்மாநாட்டின் மூலமாக எமக்கு இலங்கையில் இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம். தமிழ் சமூகத்தை அழித்துவிட்டோம், தம் பிள்ளைகளைத் தேடியலையும் தாய்மார்களுக்குப் பதில் சொல்லாமல் மெல்லமெல்ல சாட்சிய அழிப்பை செய்துவருகின்றோம் என நினைத்துக்கொண்டிருந்த தரப்பினரின் முகத்தில் கரியைப் பூசியிருக்கின்றோம். திக்குமுக்காடச் செய்திருக்கின்றோம். இவர்களால் வீதியில் இறங்கிப் போராட மட்டும்தான் முடியும் என நம்பிக்கொண்டிருந்தவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கியிருக்கின்றோம்.

ஆகவே இந்த சர்வதேச மாநாடு போராடும் தாய்மார்களாகிய எமக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்திருக்கின்றது. தொடர் போராட்டம் காரணமாக சோர்வும், அயற்சியும், அடுத்து என்ன செய்வதென்பது தொடர்பான தேக்கமும் ஏற்பட்டிருந்தநிலையில் இம்மாநாடு புத்துணர்ச்சியைத் தந்திருக்கின்றது. மாநாட்டுக்காகத் திரண்ட மக்கள் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கின்றார்கள். தமிழ் மக்கள் எப்போதும் எமக்கு ஆறுதலாக நிற்பார்கள் என்கிற உத்வேகத்தைத் தந்திருக்கிறார்கள். ஆகவேதான் இதற்கெல்லாம் சேர்த்து இவ்விடத்தில் நன்றியுரைக்க கூடியுள்ளோம்.

இதுவரை காலமும் வீதிகளில் நாம் போராடியபோது எம்முடன் பயணித்த அனைத்து தமிழ் உறவுகளும், நாம் அழைத்த சொற்கேட்டு சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்குள் குழுமியதும், மாநாட்டின் இறுதிவரைக்கும் எம்மோடு ஒத்துழைத்து நின்றமைக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகள்.

இம்மாநாடானது முழுக்கமுழுக்க தமிழ் சமூகத்தின் நிதிப் பங்களிப்பினாலேயே சாத்தியப்பட்டது. தமிழ் மக்களிடம் நாம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக அவர்கள் உவந்தளித்த நிதியிலிருந்து ஒரு சதத்தையும் வீணடிக்காது, இம்மாநாட்டினை சிக்கனமாகவும், சீராகவும் நடத்திமுடித்துள்ளோம். அதற்காக நிதிப் பங்களித்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *