சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த பொலிஸாரால் முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் தாருங்கள்; எமது இளைஞர்கள் கட்டுப்படுத்துவார்கள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன், பொலிஸாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள் எனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரால் வெளிப்படுத்தப்பட்டது. இதன்போதே ரவிகரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
சட்டவிரோத மணல் அகழ்வென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது.விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல் கெருடமடுவரைக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு மிக அதிகளவில் இடம்பெறுகின்றது.அத்தகைய சில சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை பொலிஸார் கைதுசெய்தாலும், அதையும் தாண்டி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக மன்னாகண்டல், கெரடமடு பேராற்றில் ஒவ்வொருநாளும் சட்டவிரோத மணல் அகழ்வு மிக அதிகளவில் இடம்பெறுகின்றது .இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எம்மால் முறைப்பாடு செய்தால் உடனடியாக பொலிஸாரை அப்பகுதிக்கு அனுப்புவதாகத் தெரிவிப்பார்.ஆனால் அங்கு செல்கின்ற பொலிஸார் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களிடமிருந்து கையூட்டுக்களைப் பெற்றுச்செல்வதாக எமக்கு பொதுமக்களால் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
அத்தோடு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்று வைத்திருக்கும் சிலர், மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுச் செயற்பாட்டை மேற்கொண்டுவருவதான முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்துள்ளன என்றார்.
இதன்போது ரவிகரன் எம்.பி. தெரிவிக்கையில்,
விடுதலைப்புலிகளின் காலத்தில் 6அடி அகலமாக இருந்த ஆறு, சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் காரணமாகத் தற்போது 45ஆதி அகலமாக மாறியுள்ளதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். அதேவேளை இங்குள்ள மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு மணலைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை உள்ளது. அத்தோடு சட்டவிரோத மணற்கொள்ளை செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டிய பொலிஸார், கையூட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோத மணற்கொள்ளைச் செயற்பாடுகளுக்குத் துணையாகச் செயற்படுவதாகவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.
தற்போதுதான் கசிப்பு, கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் ஊடுருவல்கள், மணற்கொள்ளைகள், கிரவல் கொள்ளைகள், திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் என்பன தற்போது அதிகளவில் இடம்பெற்றுவருகின்றன. இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய பொலிஸார் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர்?
அதேவேளை ஆயுதக்குழுக்களாக இரவுநேரங்களில் மக்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்வதான செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.விடுதலைப்புலிகளின் காலத்தில் இரவு 12 மணிக்குக்கூட பெண்கள் வெளியே உலவக்கூடிய நிலை இருந்தது. தற்போது நிலைமை அவ்வாறில்லை.எனவே இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
புதுக்துடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி இதன்போது பதிலளிக்கையில்,
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 19 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. 50000க்கும் அதிகமான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இந்நிலையில் 75வரையான பொலிஸ் உத்தியோகத்தர்களே புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலையத்தில் கடமையிலுள்ளனர்.அந்தவகையில் இந்தவருடத்தில் ஜனவரிதொடக்கம் தற்போதுவரையில் கசிப்பு உற்பத்தி தொடர்பில் 702 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதற்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் கிட்டத்தட்ட 37இலட்சத்து 27,500ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கோடா உற்பத்தி 45வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. 25கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், அதற்கு நீநிமன்றினால் 68000ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் 33வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன .இதுதவிர சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி தொடர்பில் 14வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத மணல் அகழ்வுதொடர்பில் 69 , சட்டவிரோத மண் அகழ்வு 9 , ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் 91 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அத்தோடு சில பொலிஸ் உத்தியோகத்தர்களே இலஞ்சம்பெறுகின்றனர்.அவ்வாறானவர்கள் தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினால் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரவிகரன் எம்.பி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இத்தகைய சட்டவிரோத சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில், பொலிஸார் தமது ஆயுதங்களை எங்களிடம் கையளிக்கட்டும். எமது இளைஞர், யுவதிகள் இத்தகையசட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள். சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை எமது இளைஞர்களிடம். உள்ளது என்றார்.
![]()