தமிழீழத்தை எதிர்ப்பதாலேயே அர்ச்சுனாவுக்கு இடமளித்தோம்; கம்மன்பில கூறுகிறார்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அர்ச்சுனா, தான் புலிகளை ஆதரித்த ஒருவராக இருந்தபோதிலும், தமிழீழம் அமையப் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். அத்துடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, தமிழீழத்தை விரும்பிய யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், தற்போது தங்களது மேடையில் ஏறி, ஒருபோதும் ஈழம் கேட்க மாட்டேன் என்றும் மக்களின் ஒற்றுமையே முக்கியம் என்றும் கூறும் போது அவரை ஆதரிக்க வேண்டும். அவ்வாறான எண்ணம் கொண்டவர்களைத் தொடர்ந்து தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம் என்றார்.
![]()