ஒதுக்கப்பட்ட குரங்குக்கு உலகளவில் குவியும் அன்பு – நெகிழ வைக்கும் ‘பஞ்ச் குன்’

ஆரம்பத்தில் மற்ற குரங்குகளால் ஒதுக்கப்பட்ட பஞ்ச் குன், தற்போது சக குரங்குகளின் கூட்டத்துடன் மெல்ல மெல்ல இணைந்து வாழப் பழகி வருகின்றது. பொம்மையின் துணையோடு வளர்ந்த இந்த சிறு குரங்குக்கு, உலகம் முழுவதிலுமிருந்து மனிதர்கள் காட்டி வரும் பேராதரவு இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
தாயால் கைவிடப்பட்டு, ஒரு பொம்மையையே தன் தாயாக நினைத்து வளர்ந்து உலக மக்களின் அன்பைப் பெற்ற ‘பஞ்ச் குன்’ என்ற மக்காவ் இனக் குட்டி குரங்கின் முதல் பிறந்தநாளை ஜப்பான் மக்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
ஜப்பானின் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில் கடந்த 2025 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பஞ்ச் குன் பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே அதன் தாய் அதை வளர்க்க மறுத்துக் கைவிட்டதால், கடுமையான ஏக்கத்தில் தவித்டுள்ளது. இதைக் கண்ட பூங்கா ஊழியர்கள், அதற்கு ஆதரவாக ஒரு ஓரஞ்ச் நிற உராங்குட்டான் பொம்மையை வழங்கியுள்ளனர்.
அந்த பொம்மையையே தனது தாயாக நினைத்து எப்போதும் கட்டியணைத்தபடியே வாழத் தொடங்கியது பஞ்ச் குன் குட்டி. இணையத்தில் வெளியான இந்த உருக்கமான காட்சிகள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது.
பஞ்ச் குன்னுக்கு 1 வயது பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பூங்காவிற்கு நேரில் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நேரில் வர முடியாத சர்வதேச இரசிகர்கள் தங்களது வாழ்த்து அட்டைகளையும், விதவிதமான பரிசுகளையும் பூங்காவிற்கு அனுப்பி தங்களது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பூங்கா நிர்வாகம் சார்பில் அதற்குப் பிடித்தமான சிறப்பு உணவுகளும், பழங்களால் ஆன கேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.
![]()