தமிழ் கவிதை இலக்கியத்தில் மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை ஓர் ஒப்பீட்டுப் பார்வை…. சின்னத்தம்பி குருபரன்

மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில் எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பே, வாய்வழி இலக்கியமாகவே (Oral Tradition) கவிதை தோற்றம் பெற்றது என்பது ஆய்வாளர் கருத்து. மனிதன் பேசத் தொடங்கிய காலகட்டத்தில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், இயற்கையைப் போற்றவும், கடவுளை வணங்கவும் தாளலயத்துடன் கூடிய சொற்களைப் பயன்படுத்தினான். அதுவே கவிதையின் ஆதி வடிவமாகக் கொள்ளப்படுகிறது.
உலகின் மிகப் பழமையான நாகரிகங்கள் தோன்றிய மெசொப்பொத்தேமியா (இன்றைய ஈராக்), எகிப்து, இந்தியா, சீனா ஆகிய நாகரழகங்கள் தோன்றி வளர்ந்த பிரதேசங்களில் கவிதை வடிவங்கள் முதலில் உருவாகி இருக்கலாம். மனித வரலாற்றில் எழுத்து வடிவில் கிடைக்கப்பெற்ற உலகின் மிகப்பழமையான காப்பியம் ‘கில்கமிஷ் காப்பியம்’ (Epic of Gilgamesh) என்பது தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது சுமேரிய நாகரிகத்தைச் சேர்ந்தது. இக்காப்பியம் பொ.ஆ.மு. 3,000 ஆண்டுகளுக்கு முற்கட்ட களிமண் தட்டுக்களில் முப்பரிமாண ஆப்பெழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் தொன்மையான கவிதைகள் பெரும்பாலும் கடவுள் பெயரில் பாடப்பட்ட வழிபாட்டுப் பாடல்களாகவும் (Hymns), துதிப் பாடல்களாகவும், சடங்குப் பாடல்களாகவுமே இருந்தன. எடுத்துக்காட்டாக, சுமேரியாவின் ‘தமிமுஸ் இறங்கல் கவிதை’ (Hymn to the Death of Tammuz), இந்தியாவின் வேத காலத்து இருக்கு வேதப் பாடல்கள்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
உலகில் முதன் முதல் தோன்றிய செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், கவிதை இலக்கியம் மிகவும் தொன்மையான, செழுமையான வரலாற்றைத் தமிழ் கவிதை இலக்கியம் கொண்டுள்ளது. தமிழில் கிடைக்கப்பெற்ற மிகப்பழமையான இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ பொ.ஆ.மு நான்காம் நூற்றாண்டுக்குரியது. இந்நூல் தமிழர்களின் கவிதை வடிவங்களையும், பாக்களையும் பற்றிய இலக்கணங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறது. இதன் மூலம் தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் செழுமையான கவிதை மரபு இருந்திருப்பதை அறிய முடிகிறது என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் கருத்து.. சங்க காலத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்கள் வாயிலாக அகம் (காதல்), புறம் (வீரம், வாழ்க்கை) சார்ந்த அழகிய கவிதைகள் இயற்றப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் யாப்பதிகார விதிகளுக்குட்பட்ட மரபுக் கவிதைகளை ஆக்கி வந்தனர். சங்கமருவிய, பல்லவர், சோழர் காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனைப் போற்றிப் பக்திப் பாடல்களைப் பாடி தமிழுக்குப் புது மெருகூட்டினர்.

1. மரபுக் கசிதை.
மரபுக் கவிதை என்பது தமிழ் மொழியின் தொன்மையான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட யாப்பு இலக்கணத்தைப் பின்பற்றி எழுதப்படும் செய்யுள் வடிவமாகும். யாப்பிலக்கணச் சட்டகத்திற்குள் அமைந்த கவிதையே மரபுக்கவிதையாகும்.
மரபுக்கவிதை சில பிரதானமான இலக்கணக் கூறுகளையும் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. மரபுக் கவிதை அசை, எழுத்து, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறு உறுப்புகளின் யாப்பிலக்கண விதிகளுக்கு உட்பட்டு மாத்திரமே எழுதப்படும். ஒவ்வொரு வகைக் கவிதைக்கும் உரிய தனித்துவமான சந்தம் அல்லது ஓசை இயல்பாகவே அமைந்திருக்கும். கவிதையின் அழகைக் கூட்ட எதுகை (இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல்), மோனை (முதல் எழுத்து ஒன்றி வருதல்), இயைபு (இறுதி எழுத்து அல்லது சொல் ஒன்றி வருதல்) போன்ற நயங்கள் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். குறிப்பிட்ட சீர் எண்ணிக்கைக்குள் கருத்தைச் சொல்ல வேண்டு என்பதால், சொற்கள் மிகச் செறிவாகவும் நுட்பதாகவும் நயம்படவும் கையாளப்பட்டிருக்கும்.
மரபுக்கவிதையின் பிரதான வகைகளாகத் (பா வகைகள்) தமிழ் யாப்பிலக்கணத்தின்படி அமைந்த வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகைகளையும் அதனதன் உட்பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.
வெண்பா யாப்பில் அமைந்த கவிதைகள் செப்பலோசை (இருவர் உரையாடுவது போன்ற ஓசை) உடையதாகக் காணப்படும் என்பது யாப்பிலக்கண விதியாகும். இது எழுதுவதற்கு மிகக் கடினமான, ஆனால் மிகவும் நேர்த்தியான இலக்கணத்தைக் கொண்டது. திருக்குறள், நளவெண்பா, மூதுரை ஆகியவற்றை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடலாம். வெண்பாவானது குறள் வெண்பா, நேரிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவடி வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா ஆகிய உப பரிவுகளைக் கொண்டது.
ஆசிரியப்பா (அகவற்பா) இலக்கணத்தின்படி இது ஒருவர் பேசுவது அல்லது செய்தி சொல்வது போன்ற அகவலோசை உடையது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டிருப்பதைக் காணலாம். யாப்பிலக்கணத்தின்படி இது இயல்பான நடை கொண்டது. புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றை மிகச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்யாப்பானது ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி ஆசிரியப்பா ஆகிய உப பிரிவுகளை உள்ளடக்கியது.
கலிப்பா கன்று துள்ளுவது போன்ற துள்ளலோசை கொண்டது. பாடும்போது கேட்பதற்கு இனியதாக அமைந்திருக்கும். துள்ளல் நடையும், காதல் உணர்ச்சிப் பெருக்கைக் கூறுவதற்கும் ஏற்ற பாவடிவமாகக் கொள்ளப்படுகிறது. இதற்குக் கலித்தொகை சிறந்த உதாரணமாகும். இது ஒத்தாழிசைக் கலிப்பா, கலிவெண்பாட்டு, கொச்சகக் கலிப்பா, உறழ்கலிப்பா, கலித்தாழிசை, பொதுவியல் கலிப்பா ஆகிய உட்பிரிவுகளையும் கொண்டது.
வஞ்சிப்பா (விருத்தப்பா) மெல்ல நடப்பது போன்ற சீரான தாலாட்டு வடிவிலான தூங்கலோசை கொண்டது. வஞ்சிப்பா பெரும்பாலும் இயற்கை வர்ணனைகள், போர்க்கள நிகழ்வுகளைக் கூறப் பயன்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலையன் சில பகுதிகளைக் குறிப்பிடலாம். தமிழில் கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற பெரும்பான்மையான காப்பியங்கள் விருத்தப் பாக்களாலேயே இயற்றப்பட்டுள்ளன. விருத்தப்பாவில் குறள் விருத்தப்பா, நேரசை விருத்தப்பா / முச்சீர் விருத்தப்பா, நாலடி விருத்தப்பா / நாற்சீர் விருத்தப்பா, ஐஞ்சீர், அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடி விருத்தப்பா ஆகிய உப பிரிவுகளையும் உள்ளடக்கியது.
மேற்கண்ட நான்கு முதன்மைப் பாக்களுக்குத் துணையாக, அவற்றின் அடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் இனம் (பாவினங்கள்) தாழிசை (மூன்று அடிகளால் பாடப்பட்டு, மூன்றாம் அடி முடிவில் தனிச்சொல் பெற்று வருவது), துறை (ஓரடி முச்சீரோ அல்லது நாற்சீரோ கொண்டு, குறைவான அடிகளால் தனித்து நிற்பது), விருத்தம் (நான்கு அடிகளைப் பெற்று, ஓசை குறையாமல் செம்மையாக இயற்றப்படும் பா வகை) என மூன்று உட்பிரிவுகளையும் உள்ளடக்கி இருக்கும். அத்தோடு தரிசனம், உள்ளுறை, இறைச்சி, முரண், முரண்நகை, மரண்நிலை, தெளிவு, செறிவு ஆகியனவும் மரபுக் கவிதை முதல் தற்காலக் கவிதைகளிலும் அவற்றுள் சிலவோ பலவோ பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ் இலக்கியத்தில் மரபுக்கவிதையின் யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகளை தகர்த்து, எளிய வடிவில் உணர்வுகளை வெளிப்படுத்த உருவானவையே வசன கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை ஆகிய வடிவங்களாகும். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றினாலும், இவற்றின் வடிவம், நோக்கம், வெளிப்பாட்டு முறையில் தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றின் வேறுபாடுகள், சான்றுகள், நூலாதாரங்கள் பற்றிய விளக்கம் பெறுவது அவசியமாகும். இவை ஏன், எப்படி, எப்போது, யாரால் தோற்றம் பெற்றன. இவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகள் குறித்த விரிவாக நோக்குகிறது இக்கட்டுரை.
2. வசன கவிதை (Prose Poetry)
‘மரபுச் செய்யுள்களின் எதுகை, மோனை, தளை போன்ற யாப்புச் சங்கிலிகளை முதன்முதலில் உடைத்தெறிந்த வடிவம் வசன கவிதையாகும். செய்யுள் வடிவத்திற்கும் உரைநடைக்கும் இடைப்பட்ட ஒரு வடிவமாக இது அமைந்திருக்கும். உரைநடை போன்று எழுதப்பட்டாலும், அதில் ஒரு கவித்துவ வீச்சும், ஓசை நயமும் (Rhythm) காணப்படும். இதற்கு வரிவடிவக் கட்டுப்பாடுகள் கிடையாது. பாமர மக்களுக்கும் கவிதை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் புனையப்பட்டிருக்கும்’. தமிழ் இலக்கிய வரலாறு, மு. வரதராசன், சாகித்திய அகாதெமி வெளியீடு.
வசன கவிதை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1910-1920 களில்) மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் தமிழில் தோற்றுவிக்கப்பட்டது. அதுவரை தமிழில் இருந்த மரபுக்கவிதைகள் பெரும்பாலும் பாமர மக்களைச் சென்றடையவில்லை. அதனைப் புரிந்து கொள்வதும் கடினமாக இருந்தன. ஆங்கிலத்தில் வால்ட் விட்மன் (Walt Whitman) போன்றோரின் ‘Prose Poetry’ கவிதை வடிவத்தைக் கண்ணுற்ற பாரதியார், கவிதை என்பது பாமரனுக்கும் புரியும் வகையில் எளிய வடிவில் அமைய வேண்டும் என விரும்பினார். உரைநடையின் தன்மையையும் கவிதையின் உணர்ச்சியையும் இணைத்துக் ‘காட்சி’ என்ற தலைப்பில் முதன்முதலில் வசன கவிதைகளை எழுதினார்.
மகாகவி பாரதியாரால் முதன் முதலில் தமிழிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புது வடிவம் இதுவாகும். ஆங்கிலத்தில் ‘Prose Poetry’ என்று அழைக்கப்படுவதன் தமிழாக்கமே வசன கவிதை என்பதாகும். இதன் பண்புகளாக,
1. செய்யுள் வடிவமும் இல்லாமல், உரைநடை வடிவமும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தில் இது அமைந்திருக்கும்.
2. இதற்கு யாப்பிலக்கணம் கிடையாது, ஆனால் ஒருவித சந்த நயம் (Rhythm) காணப்படும்.
3. பொருள், எளிமை, செறிவு, தெளிவு காணப்படும்.
4. அதன் வரி வடிவம் கவிஞனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இருக்கும்.
பாமர மக்களுக்கும் கவிதை சென்றடைய வேண்டும், உணர்வுகளை வெளிப்படுத்த இலக்கணம் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் கவிதைகள் புனையப்பட்டிருக்கும்.
மகாகவி பாரதியாரின் ‘காட்சி’ என்ற தலைப்பில் அமைந்த வசன கவிதை:
“இவ்வுலகம் இனியது இதிலுள்ள மனிதர் மிகவும் இனியர் ஆண் நன்று பெண் இனிது உயிர் நன்று சாதல் இனிது.”
“லைட்டினைக் கண்டவுடன் பூச்சி விழுவது போல
அழகைக் கண்டவுடன் அறிவு விழுகின்றது.”
“காற்று வீசுகின்றது இலைகள் அசைகின்றன பிராணன் நிலைக்கின்றது காற்றுக்கு நமஸ்காரம்.”
(பாரதியார் கவிதைகள் – வசன கவிதைப் பகுதி – ‘காட்சி’, ‘சக்தி’ போன்ற தலைப்புகளில் இருந்து).
3. புதுக்கவிதை (New Poetry / Free Verse)
வசன கவிதையின் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சி தான் புதுக்கவிதையாகும். இது அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் கவிதைகள் மற்றும் பிரெஞ்சு குறியீட்டுக் கவிதைகளின் தாக்கத்தால் தமிழில் உருவானது. பாரதிக்குப் பின்னர் 1930 களில் ‘மணிக்கொடி’ இதழின் மூலம் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், குவளைக்கண்ணன் போன்றோர் இதன் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்கள். புதுக்கவிதையின் பண்புகளாக,
1. யாப்பு விதிமுறைகளுக்கு உட்படாது. ஆனால், வசன கவிதையை விட வரிகள் சீராக பிரிக்கப்பட்டிருக்கும்.
2. படிமங்கள் (Images), குறியீடுகள் (Symbols) மூலம் சுருக்கமாகவும் அழகியலுடனும் கவிதை சொல்லப்பட்டிருக்கும.
3. வரிகளின் நீள அகலங்கள் கவிஞனின் விருப்பப்படி அமைந்திருக்கும்.
4. எதுகை, மோனை போன்றவற்றைத் தேடிப் போட வேண்டியதில்லை, இயல்பாக வந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வார்கள்.
5. சொல்லவந்த கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
6. கவிதையின் உருவத்தை விட உள்ளடக்கத்தையே (Content) பிரதானமாகக் கொள்வர்.
சாதாரண மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், காதல், சமூகச் சீர்திருத்தம், சாதாரண மக்ககளின் உணர்வுகள், அன்றாடச் சிக்கல்களைக் ஆகியவை இதன் மையப்பொருளாக அமைந்திருக்கும்.
“கூண்டு திறந்து கிடந்தாலும் பறக்க மறந்துவிட்டதே கிளி… (ந. பிச்சமூர்த்தி – ‘கிளிக்கூண்டு’). புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், வல்லிக்கண்ணன், தமிழில் புதுக்கவிதை: ஒரு பார்வை, – க.நா. சுப்ரமண்யம். ந. பிச்சமூர்த்தி கவிதைகள் ஆகிய நூல்களில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
“தேவதைகள் உலவும் காட்டில்
சிறகுகள் விற்கும் கடைகள் இல்லை,
உனக்கு எப்படி வந்தது இந்தச் சிறகு?” (மு.மேத்தா)
“பிய்ந்த செருப்பைத் தையுங்கள் ஆனால் -மனித இதயங்களைத் தைக்க இன்னும் ஊசி கண்டு பிடிக்கப்படவில்லை!” (மு.மேத்தா)
‘மணிக்கொடி’ இதழ் மூலமாக நா. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், குவளைக்கண்ணன், போன்றோரால் முறைப்படி தமிழில் விதைக்கப்பட்ட புதுக்கவிதை 1960-களில் ‘எழுத்து’ இதழ் மூலம் சி.சு. செல்லப்பா, தருமு சிவராமு (பிரமிள்) போன்றோரால் வளர்க்கப்பட்டது. பின்னர் மேலும் புதுக்கவிதையின் போக்கிலும் வீச்சிலும் பரீடசார்த முயற்சிகளைச் செய்து பார்த்தவர்களில் நா. காமராசன், அப்துல் ரகுமான், தேவதேவன், கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன், வல்லிக்கண்ணன் போன்றொரைக் குறிப்பிடலாம்.
ஈழத்தில் கருப்பொருள், உள்ளடக்கம், சொல்லும் முறை என்பவற்றில் புதுப்புது பரீட்சார்த்தங்களைக் கையாண்டு ஈழத்துக்கெ உரிய வகையில் சமகாலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி மஹாகவி ருத்திரமூர்த்தி, முருகையன், நீலாவணன் போன்றோராலும் அதற்குப் பின்னர் சேரன், புதுவை இரத்தினதுரை, பசுபதி, சுபத்திரன், எம்.ஏ.நுஹ்மான், சண்முகம், சிவலிங்கம், மௌனகுரு, ஈழவாணன், காரை சுந்தரம்பிள்ளை, மு.சடாட்சரன், பஸீல் காரியப்பர், பா.சத்தியசீலன், இக்பால், அன்பு முகையிதீன், சில்லையூர் செல்வராஜன். மு.பொன்னம்பலம் போன்ற பலரும் முன்னெடுத்துச் சென்றனர்.

மண்டூர் அசோகாவின் ‘கனவுகள் சுமக்கும் காலம்’ (2023) கவிதைத் தொகுப்பில் இருந்து, ‘நிறமிழந்த கனவுகள்’ என்ற தலைப்பிலான கவிதை, பருவமடைந்து திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் கவலை, ஏக்கம், தவிப்பு, எதிரபார்க்கை என்பவற்றை வெளிப்படுத்தப்படுகிறது. இக்கவிதை அமைந்திருக்கிறது.
“வர வர இரவுகளின் நீளம் கூடிக் கொண்டிருக்கிறது. அந்த இரவுகளின் பாடல்கள் இனிமையாய் இல்லை அவளுக்கு மட்டும்.
தென்றலின் சிறகுகள் அவள் படுக்கை அருகே வந்து சாமரம் வீச மறுத்தன. தோட்டத்துப் பூக்களெல்லாம் நிறமிழந்து வெளிறிப் போயின.
வானத்து நிலவுகூட அவள் படுக்கையின் கீழ்வந்து ஒழிந்து கொண்டது ஒவ்வொரு இரவிலும்,
அவள் அழகியென்று சொன்னது அவளுடைய சுவரில் தொங்கும் கண்ணாடி மட்டுமே, முன் நெற்றியில் புதிதாய் முளைவிடும் வெள்ளிக் கம்பிகள் அவளுக்கு அழகைத் தருவதாய் யாரோ சொன்னார்கள். ஆயினும் எந்த ராஜகுமாரனும் அவளைத் தூக்கிச் செல்ல வரவேயில்லை. தன்வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்து ஒரு ராஜகுமாரனின் புரவி ஓசைக்காய் அவள் காத்துக் கிடக்கின்றாள்”.
கவிதை எழுதுவதில் பாரதியின் வசன கவிதை கொடுத்த சுதந்திரத்தைத் தொடர்ந்து, கவிதையின் வரிகளை இன்னும் சீரமைத்து, யாப்பிலக்கணம் இல்லாவிட்டாலும் ஒரு கவித்துவ ஒழுங்குடன் எழுத ஆரம்பித்தனர். இக்கவிதை வடிவமானது மேலைநாட்டு ‘Free Verse’ வடிவத்தின் தாக்கத்தால் பிரதிபலிப்பாக உருவானது. சமூகப் பிரச்சினைகள், காதல், சாதாரண மக்களின் ஏக்கம் ஆகியவற்றை எளிமையாகச் சொல்ல இது பயன்பட்டது.
புதுக்கவிதை கருத்துக்கு முக்கியத்துவம கொடுக்க, மரபுக்கவிதை இலக்கண வடிவத்திற்கும் ஓசை நயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தது.
4. நவீன கவிதை (Modern Poetry)
புதுக்கவிதையின் உள்ளடக்கத்திலும் சிந்தனையிலும் ஏற்பட்ட தத்துவார்த்த மாற்றமே நவீன கவிதை எனப்படுகிறது. இது பெரும்பாலும் 1970-80களுக்குப் பிறகு, மேலைநாட்டு இலக்கியக் கோட்பாடுகளான பின்நவீனத்துவம், குறியீட்டியல், படிமவியல் போன்றவற்றின் தாக்கத்தால் உருவானது. இது வடிவத்தில் புதுக்கவிதையைப் போன்றிருக்கும். ஆனால், மொழியைக் கையாளும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருக்கும் இது நேரடியாகப் பொருளைத் தராது. வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் குறியீடுகள் (Symbols), படிமங்கள் (Images) மூலம் வாசகன் தான் விரும்பியவாறு பொருளைப் புரிந்துகொள்ள இடமளிக்கும்.
மனிதனின் உளவியல் சிக்கல்கள், தனிமை, வாழ்வின் துன்ப துயரங்கள், எக்கம், தவிப்பு, சூன்யம் போன்ற ஆழமான தத்துவங்களைப் பேசுவதாக அமைந்திருக்கும்.
நேரடியாகப் பேசாமல், ஒரு காட்சியைக் கண்முன் நிறுத்தி அதன் மூலம் ஒரு தத்துவத்தையோ அல்லது வாழ்வியலின் முரணையோ பற்றி வாசகனைச் சிந்திக்கக்க வைக்கும் வகையில் இதன் வரிகள் அமைந்திருக்கும். இக்கவிதை மரபு 1970, 1980 களுக்குப் பின்னர் நகுலன், சுந்தர ராமசாமி (பசுவய்யா), ஞானக்கூத்தன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் போன்ற பலரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
புதுக்கவிதை மிகவும் எளிமையாகவும், பிரச்சார நெடியுடனும் (Sloganeering) மாறிவிட்டதாகக் கருதிய கவிஞர்கள், கவிதையின் தரத்தையும் தத்துவார்த்த ஆழத்தையும் கூட்ட விரும்பினர். உலகமயமாதல், தனிமனித உளவியல் சிக்கல்கள், பின்நவீனத்துவக் கொள்கைகள் (Post modernism) ஆகியவற்றின் தாக்கத்தால், நேரடிப் பொருளைத் தராமல் படிமம், குறியீடுகள் மூலம் பேசும் நவீன கவிதைகள் உருவாகின.
‘வசன கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை ஆகிய மூன்று வடிவங்களுமே மரபுக்கவிதையின் அசை, சீர், தளை, அடி, தொடை, எதுகை, மோனை போன்ற கடுமையான இலக்கண விதிகளிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றவை. இதன் கருப்பொருளாக அரசன், கடவுள், இயற்கை என்றில்லாமல் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வியல், சமூகம், அரசியல், உளவியல் என எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையை உருவாக்கின. இம்மூன்றும் மரபுகளும் ஏதோ ஒரு வகையில் மேலைநாட்டு (Western Literature) இலக்கிய வடிவங்களின் தாக்கத்தால் தமிழில் உருமாற்றம் பெற்றவையாகும். பண்டிதர்களுக்கு மட்டுமே புரிந்த கவிதை மொழியைச் சாதாரண வாசகனும் அணுகும் வண்ணம் எளிமைப்படுத்தப்பட்டன’. நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம்.
‘நவன கவிதை 1970-80 களில் குறிப்பாக ‘எழுத்து’, ‘கசடதபற’, ‘வானம்பாடி’ இயக்கங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உருவான வடிவம். உலகமயமாக்கல், நுகர்வுப் பண்பாடு, மனிதனின் அகவியல் தனிமை ஆகியவற்றை இது முதன்மையாகப் பேசியது. இதன் கருத்துக்கள் நேரடியான அர்த்தங்களைத் தராமல், வாசகரின் சிந்தனைக்கு அதிக இடம் கொடுக்கும் (Open-ended வகையில் கவிதைகள் அமைந்திருக்கும். இதில் தத்துவார்த்தப் பின்புலம், அகம் சார்ந்த தேடல்கள், மொழியைச் சிதைத்தல் (Deconstruction), அதிர்ச்சி விழுமியம் (Shock value),சாதிய, தலித்திய, பெண்ணிய அரசியல் தீவிரமாக வெளிப்படும். வாசகனை வெறும் இரசனையாளனாகக் கொள்ளாமல், கவிதையின் அர்த்தத்தை அவனே புரிந்து கொள்ளச் செய்தலை நோக்கதாகக் கொண்டிருக்கும்’. புதுக்கவிதை முதல் நவீன கவிதை வரை, தி.சு. நடராசன்.
“யாரோ ஒருவனுடைய காலணி வாசலில் கிடக்கிறது உள்ளே மனிதன் எவனுமில்லை…..” (தேவதேவன் கவிதை)
“மேசை மேல் கிடக்கிறது அவன் விட்டுச்சென்ற கண்ணாடி… அதன் வழியே பார்க்கிறேன் அறை முழுக்கப் புகைமூட்டம்…” (மு.மேத்தா)
காலச்சுவடு, நற்றிணை போன்ற இதழ்களின் கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேவதேவன், கலாப்ரியா, பிரம்மராஜன், சுகுமாரன் ஆகியோரின் கவிதைத் தொகுப்பு நூல்களில் இத்தகைய போக்கினைத் தெளிவாக அவதானிக்கலாம்.
“வீட்டின் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது என் அப்பாவின் மீசை அது ஒரு சரித்திரத்தின் மீதம் எஞ்சிய கர்வத்தின் துரு நான் கடந்து போகும் போதெல்லாம்
சேரன் கவிதைகள் என்ற தொகுப்பில் (1983) மீசை தலைப்பிலான கவிதை,
“என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது “உன்னால் முடியாது” என்று எச்சரித்துச் செல்கிறது அந்த மீசை.
சேரன் மற்றுமோர் கவிதை இரண்டாவது சூரிய உதயம் என்ற கவிதைப் தொகுப்பு (1989), நிலா வெளிச்சம் தலைப்பில் இருந்து,
“இரவில் வழிகாட்டுகிறது ஒரு துண்டு நிலா வெளிச்சம் அகதிகளாய் நாங்கள் எல்லைகளைக் கடக்கும் போது உடன் வரும் ஒரே உறவு இந்த நிலா வெளிச்சம் மட்டுமே இது தாயின் பாதம் போல வழியைக் காட்டும் வெளிச்சத் தீற்று”
வ.ஜ.ச. ஜெயபாலன் கவிதைகள் என்ற தொகுப்பி ஈழத்து மண் என்ற கவிதை வரிகள் புலம் பெயர்ந்து வாழும் ஒருவரின் ஏக்கத்தைப் புலப்படுத்துகிறது.
“என் நிலத்தின் மணலில் இன்னும் பதிக்கப்படவில்லை எனது இறுதிச் சுவடு தூரத்து தேசங்களில் அலைந்து திரிகிறது என் உயிர் ஆனால் வேர்கள் மட்டும் அந்தச் சுட்டெரிக்கும் மண்ணுக்குள்தான் தள்ளாடுகின்றன”.
ஜெயபாலன் கவிதைகள், அகதி வாழ்க்கை என்ற தலைப்பிலான கவதை வரிகள் யுத்த காலத்தில் அகதி வாழ்வின் அவலங்களைச் சித்திரிக்கிறது.
“பெட்டிகளுக்குள் அடங்கிவிட்டது எங்களின் முழு வாழ்வு இப்போதெல்லாம் நாங்கள் முகவரிகள் அற்ற காற்று எங்கு வீசப்படுகிறதோ அங்கு கலக்க வேண்டியதுதான் எங்கள் தலைவிதி.
நவீன கவிதையின் பண்புகளாக.
1. உரைநடைக்கு நெருக்கமான வடிவில் அமைந்திருப்பது.
2. சொல்ல வரும் கருத்தை (Content) மிக எளிமையாகச் சொல்வது.
3. வாழ்வின் தத்துவத்தையும், மனித மனத்தின் சிக்கல்களையும் ஆழமாகப் பதிவு செய்வது.
4. வடிவ அமைப்புப் பந்திகள் (Paragraphs) போல் அமைந்ருக்கும்.
5. வரிகளின் நீள அகலம் உரைநடை போலவே நீளும்.
6. கவிதை வரிகளாக (Lines) பிரிக்கப்பட்டிருக்கும்.
7. படிப்பதற்குக் காட்சி ஒழுங்கு இருக்கும்.
8. புதுக்கவிதை வடிவத்தை ஒத்தது என்றாலும் வரிகளுக்குள் சொல்லப்படாத பல விஷயங்கள் (Subtext) மறைந்திருக்கும்.
9. புரிந்து கொள்ளல் எளிது என்பதனால் வாசித்த உடனே உணர்ச்சியைத் தூண்டிவிடும்.
10. நேரடியானது, சாதாரண வாசகனும் உடனே புரிந்து கொள்ள முடிவது.
11. மறைமுகமானது. குறியீடுகள், படிமங்கள் நிறைந்துள்ளதால் வாசகன் சிந்தித்தே பொருளை விளங்கிக் கொள்ள முடியும்.
12. ஒலி நயம் மற்றும் வேத காலத்து மந்திரங்கள் போன்ற ஒருவித ‘சந்த நயம்’ (Rhythm) காணப்படும்.
13. சொல்லின் பொருளுக்கு ஏற்ப இயல்பான ஓட்டம் அமைந்திருக்கும்.
14. செயற்கை ஓசை இருக்காது. ஓசை நயத்திற்கு முக்கியத்துவம் இருக்காது, மாறாக சிந்தனைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
பிச்சமூர்த்தி வழிவந்த கவிதைப் போக்கும், 1970, 1980 களில் மஹாகவி உருத்திரமூர்த்தி வழிவந்த கவிதைப் போக்கும் ஈழத்தில் ஓரளவு சங்கமிப்பதையும் நாம் காணலாம். சண்முகம், சிவலிங்கம், மு.பொன்னம்பலம், நாவற்குழியூர் நடராஜன், சாரதா, எம்.ஏ.நுஹ்மான், சேரன், மௌனகுரு, புதுவை இரத்தினதுரை, வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி, சு.வில்வரெத்தினம், மேமன் கவி, அன்பு முகையிதீன், கருணை யோகன், சிவசேகரம், வசீகரன், சபா ஜெயராஜா, புரட்சிக் கமால், சுபத்திரன், பசுபதி, கருணாகரன், சில்லையூர் செல்வராஜன், மண்டூர் அசோகா, ஆகியோரும் 1980 களின் பின்னர் மலைத்தம்பி, சல்மான் கான், அ.சங்கரி, குறிஞ்சித் தென்னவன், முரளிதரன், சீ.வி.வேலிப்பிள்ளை, ராஜகவி ராஹில் பொன்றோரும் சமகாலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு கவிதை பாடினர். இக்காலப் பகுதியில் ஒரு சில பெண் கவிஞர்களையே இனங்காண முடிகிறது.
இருபத்தோராம் நூற்றாண்டில் மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதைப் போக்கில் ஒரு தொய்வுநிலை காணப்பட்டாலும் இன்றுவரை விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரால் சமகாலப் போக்கிற்கு அமைவாக அதன் செம்மை குன்றாது வளர்த்து வருவதையும் காணலாம். இனறு நவீன கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு போக, பலரும் வசன கவிதை, புதுக்கவிதை எழுத ஆரம்பித்துவிட்டனர். பலர் பேருக்குக் கவிஞர்களாகி உருவம், உள்ளடக்கம், கனதி இல்லாத கவிதைகளை எழுதிக் குவிக்கின்றனர். கவிதை என்றால் என்ன என்று தெரியாதவர்களே அவர்களுக்குப் பட்டமும் சூட்டி விடுகின்றனர்.
கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடுகளுக்கு அமைக்கப்படும் நூல் ஆய்வாளர்களில் பலர் ‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல் சமூகமளித்து நூல் நயவுரை நயக்க முடியாமல் கவிஞரை வாழ்த்து வாழ்த்து என்று வாழ்த்திப் புகழ்ந்துவிட்டுச் செல்கின்றனர். கவிஞருக்கு இது வாயிலிட்ட சர்க்கரை போலாகி விடுகிறது. இன்னும் சிலருக்கு வசன கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை மூன்றுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமை தெரியாமலும், ஒரு கவிதைத் தொகுப்பில் அடங்க வேண்டிய விடயப் பரப்புக்கள் தொடர்பான தெளிவில்லாமலும், கருப்பொருள், வடிவம், உருவம், உள்ளடக்கம், உத்தி, படிமம், குறியீடு, கவிதையின் ஓசை பற்றிய விளக்கமில்லாமலும் மேடையில் முழங்கு முழங்கென முழங்கிப் புகழ்ந்து பாடிவிட்டுச் செல்கின்றனர். இன்று கவிதைகளின் தரம் குறைந்தமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
சுருக்கமாக, யாப்பின் பிடியில் இருந்து கவிதையை வசன கவிதை விடுவித்தது. அதை மக்களுக்கான எளிய வடிவமாகப் புதுக்கவிதை மாற்றியது. அந்த வடிவத்திற்குள் ஆழமான தத்துவங்களையும், குறியீட்டு அரசியலையும் நவீன கவிதை புகுத்தியது.
![]()