பலதும் பத்தும்

AI பயன்பாட்டால் ஞாபக மறதி ஏற்படுகிறதா?

இன்றைய டிஜிட்டல் உலகில், சாட்ஜிபிடி, கிளாட், ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. கடினமான மின்னஞ்சல்களை எழுதுவது முதல், சிக்கலான கணக்குகளுக்கு விடை காண்பது வரை அனைத்திற்கும் நாம் AI கருவிகளையே நம்பியிருக்கிறோம்.

இந்நிலையில், “AI கருவிகளை அதிகமாகப் பயன்படுத்துவது மனிதர்களுக்கு ஞாபக மறதியை ஏற்படுத்துமா?” என்ற கேள்வி உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்திய சர்வதேச அறிவியல் ஆய்வுகள் இக்கேள்விக்கு ‘ஆம்’ என்றே பதிலளிக்கின்றன.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, AI தொழில்நுட்பங்களின் அதீத பயன்பாடு மனித மூளையில் “அறிவாற்றல் இறக்கம்” (Cognitive என்ற நிலையை ஏற்படுத்துகிறது.

மனித மூளை ஒரு செயலைச் செய்யும்போது அல்லது ஒரு தகவலை நினைவில் கொள்ளும்போது மேற்கொள்ளும் கடின உழைப்பை, தொழில்நுட்பக் கருவிகளிடம் முழுமையாக ஒப்படைப்பதுதான் அறிவாற்றல் இறக்கம்.

இதற்கு முன்னதாக, மொபைல் எண்களை நினைவில் வைத்துக் கொள்ளாமல் போனில் சேமிப்பது, முகவரிகளுக்குப் பதிலாக கூகுள் மேப்ஸை நம்புவது போன்ற பழக்கங்களால் நினைவாற்றல் குறைவதை விஞ்ஞானிகள் “கூகுள் விளைவு” என்று குறிப்பிட்டனர்.

ஆனால், தற்போதைய AI கருவிகள் வெறும் தகவல்களைத் தருவதோடு நிற்காமல், மனிதர்களைப் போல ‘சிந்திக்கவும்’ செய்வதால், மனித மூளைக்கான வேலை முற்றிலும் குறைந்து போகிறது.

AI உதவியுடன் ஒரு சில நிமிடங்களிலேயே கணக்குகள் மற்றும் வாசிப்புத் திறனுக்கான விடைகளைக் கண்டறிந்த நபர்கள், பின்னர் AI உதவி இல்லாமல் அதே போன்ற பணிகளைச் செய்யும்போது மிகவும் பின்தங்கியுள்ளனர்.

AI-க்கு பழகிய மனிதர்கள், ஒரு சிக்கலைத் தீர்க்க மூளையை உபயோகிக்க முயலாமல், மிக விரைவாகவே தங்களின் முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள்.

AI கருவிகளைத் தீவிரமாகப் பயன்படுத்துபவர்களின் மூளையில் உள்ள நரம்பியல் தொடர்புகள் மற்றும் நினைவாற்றல் திறன், அந்த தொழில்நுட்பக் கருவி இல்லாத சமயத்தில் கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. இது தொடர்ந்தால் மூளையின் சிந்திக்கும் திறன் ‘செயலிழப்பு’ நோக்கி நகரும் என எச்சரிக்கப்படுகிறது.

முன்னணி அறிவாற்றல் உளவியலாளர்களின் கூற்றுப்படி, வளர்ந்த மனிதர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்களை AI மூலம் செய்யும்போது பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.

ஆனால், மூளை வளர்ச்சி அடைந்து வரும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (17 – 25 வயதுக்குட்பட்டவர்கள்) பாடங்களைக் கற்கும்போது ஆரம்பத்திலேயே AI-ஐப் பயன்படுத்தினால், அவர்களுக்கு சுயமான சிந்திக்கும் திறனும், ஆழமான நினைவாற்றலும் வளரவே வளராது என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால், AI-ஐ ஒரு “ஊன்றுகோலாக” பயன்படுத்தாமல், ஒரு “உதவிக் கருவியாக” மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கடினமான பணிகளை மூளைக்குக் கொடுத்து பழகிய பிறகே, சரிபார்ப்பதற்கு மட்டும் AI-ஐப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, கல்வி கற்கும் மாணவர்கள் தங்களின் கற்றல் திறனை மேம்படுத்த சுய முயற்சியில் ஈடுபடுவது மட்டுமே இத்தகைய டிஜிட்டல் ஞாபக மறதியில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஒரே வழியாகும்.

உடற்பயிற்சி செய்யாத தசை எப்படி வலுவிழந்து போகுமோ, அதேபோல சிந்திக்கும் பயிற்சியை நிறுத்திக் கொண்டால் மனித மூளையும் தன் திறனை இழந்துவிடும் என்பதே தற்போதைய கசப்பான உண்மை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button