இலங்கை

தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணியின் பின்னால் அரசா?

தமிழ், முஸ்லிம் கட்சிகள் சில இணைந்து அமைத்துள்ள புதிய கூட்டணிக்கும் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் சில இணைந்து அமைத்துள்ள புதிய கூட்டணி தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் சிலவும் மற்றும் வேறு கட்சிகள் சிலவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த ரவூப் ஹக்கீம் எம்.பி, இந்த கூட்டணி எதிர்க்கட்சிக்கு ஆதரவானதோ, அரசாங்கத்திற்கு எதிரானதோ அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். இதன்படி இந்த கூட்டணிக்கு பின்னால் அரசாங்கம் இருக்கின்றதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் கூறுகையில்,

இந்தக் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவரிடமே கேட்க வேண்டும். எமது ஆளும் கட்சியின் ஜனாதிபதி, பிரதமர் இடையே பிரிவுகள் ஏற்பட்டிருந்தால் இந்தக் கேள்விகளை எங்களிடம் கேட்டிருந்தால் அது நியாயமானது. ஆனால் எதிர்க்கட்சிகள் பிரிவடைந்து ஒவ்வொரு இடங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் போது அதுபற்றி எங்கிடம் கேட்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. இந்த விடயத்தில் எங்களுக்கு எந்தத் தேவையும் கிடையாது. எங்களுக்கு 159 பேர் இருக்கின்றனர். அதனுடன் நாங்கள் வேலைகளை செய்கின்றோம்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடமே கேட்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button