கட்டுரைகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… சின்னத்தம்பி குருபரன்

எந்த ஒரு இயக்கமும் ஒரு மூலத்தில் இருந்துதான் ஆரம்பமாகின்றது. அந்த மூலமே இயக்க சக்தியாகவும் இருக்கும். எல்லா மூலங்களுக்கும் ஒரு ஆதி மூலம் இருக்கும். அதைத்தான் நாம் இயக்க சக்தி என்கிறோம். அதனைப் பலர் இறைசக்தி என்கின்றனர். இறைவன் ‘தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்’ எனவும், ‘அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது’ எனவும் இந்து மதம் கூறுகின்றது. காரணமில்லாமல் காரியமில்லை. காரியமில்லாமல் காரணமில்லை. எந்த இயக்கத்துக்கும் ஓர் அடிப்படை உண்டு என்பதனால் அந்த இயக்கத்துக்குக் காரணமான இயற்கையை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த வழமை, பண்பாடு, நடைமுறை இப்போதும் ஏன், எதற்கு என்றில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதைத்தான் நம்பிக்கை என்கின்றனர். ஒரு சிலரும் பகுத்தறவுவாதிகளும் இதனை மூடநம்பழக்கை எனவும் கூறுகின்றனர். அது அவரவர் பார்வை, புரிதல், தான் பெற்றுள்ள சிந்தனைத் தெளிவு என்பவற்றைப் பொறுத்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொன்றும் நடந்து, கடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு செயலுக்கு நமது எண்ணம், செயல், சிந்தனை, ஒழுங்கு, முயற்சி ஆகியன காரணமாக இருக்கின்றன. ஒரு செயல் உரிய இலக்கை அடைந்து வெற்றி பெறுவதற்கு விடா மயற்சி முக்கியமாகும். விடா முயற்சி இல்லாதவன் தோல்வியைக் கண்டு சரிந்து விடுவான். விடமுயற்சியும், இலட்சியமும் சாதனை புரிவதற்கு அவசியமாகிறது. அதைச் செய்வேன், அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன் என்று கூறுவதில் அர்த்தமில்லை. செயலில் இறங்கிச் செய்து காட்டுபவனே உண்மையான சாதனையாளன் ஆகின்றான். தோல்வியில் துவண்டு விழுபவன் சாதனையாளனாக இருக்க முடியாது. விழுந்து எழும்பி, வழுந்து எழும்பித் சுதாகரித்துக் கொண்டு தனக்குரியடி பாதையைத் தெரிவு செய்து வெற்றி நடை போடுபவனே, தடைகளைத் தகர்த்தெறிந்து இலட்சியத்தை அடைவான். அவன் காரணங்களுக்கு வியாக்கியானம் செய்வதை விடுத்து சரித்திரம் படைப்பவனாக இருப்பான்.

காரண, காரியங்கள் எப்படி, எவ்வாறு நடந்தாலும் செயலொன்று நிறைவேறி இருக்கும். அந்தச் செயல் நமது எண்ணம், விருப்பம், முயற்சி, சிந்தனை, ஒழுங்கு என்பவற்றின் அடிப்படையில் நடந்திருக்கும். எந்த ஒரு செயலும் விதிக்கப்பட்ட ஒழுங்கின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. ஒரு சம்பவம் நிகழ்வதற்கு செயல் ஒன்று மூலகாரணமாக இருத்தல் வேண்டும். செயலொன்றின் சாதக, பாதக நிலைக்கும் அவற்றின் வெற்றி தோல்விக்கும் ஏதோ ஓர் அடிப்படை இருத்தல் வேணடும். அந்த அடிப்படையைக் கண்டு பிடித்தால் உனது வெற்றி நிச்சயமாகும். ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’. இது பகவக்கீதை கூறிய அருள் வாக்கு. இதிலிருந்து யாரும் தப்பவோ, விலகிச் செல்லவோ முடியாது. எல்லாம் இயற்கையோடு ஒத்து நடந்து கொண்டே இருக்கும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், செய்தாலும் செய்யாது விட்டாலும் நடப்பது நடந்தே தீரும். இது யாருக்கும் எவருக்கும் விதி விலக்கல்ல. இவ்வாறுதான் உலகில் யாவும் நடந்து கொணடடிருக்கின்றன.

 

 

ஒரு கோயிலில் வருடாந்த உற்சவத் தேரோட்டத்தின் போது தேர்ச் சில்லுக்குள் அகப்பட்டு இருவர் இறந்தனர். இறந்தவர்களின் உடல்கள் இரண்டையும் அங்கிரந்து வெளியேற்றிய பின்னர் பரிகார பூசை செய்துவிட்டுத் தேரை இழுத்துச் சென்றனர். தேர் உரிய இடத்துக்கு வந்து நின்றது. விதி வலியது. விதி விளையாடி விட்டது, என்றெல்லாம் பலரும் பேசினர். இன்னும் சிலர் “இவ்விடத்தில் வந்துதான் இது நடக்க வேண்டுமா? ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவது போல் தெரிகிறது” என்றெல்லாம் கூறினார்கள். இன்னும் ஒரு சிலர் “இறைவனின் சந்நிதானத்தில் நல்ல சாவு வந்திருக்கிறது. கொடுத்து வைத்தவர்கள்” என்றும் கூறினர். ஒருவர் பிறக்கும் போதே அவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. எங்கு, எப்போது, எவ்வாறு அவரின் உயிர் எடுக்கப்பட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதன்படியே அவரின் உயிர் அவரிடம் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். இது சிதம்பர இரகசியம்போல் புரிந்தும் புரியாமலும், சில முடிச்சுகளுக்கு விடை தெரியாமலும் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். இதுதான் உண்மையும்கூட. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

திருவியைாடல் புராணத்தில் பழி அஞ்சிய படலத்தில் ஒரு சம்பவம் கதையாக விபரிக்கப்படுகிறது. ‘ஒரு புரோகிதன் மனைவியை அழைத்துக் கொண்டு மனைவியின் பிரசவத்துக்காகப் பக்கத்துக் கிராமத்தக்குச் செல்கின்றான். போகும் வழியில் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. அருகில் இருநத பெரிய மரத்தின் கீழ் இருவரும் ஒதுங்குகின்றனர். காற்றும் மழையும் பலமாகிறது. மனைவிக்குப் பிரசவ வலியும் அதிகரிக்கிறது. மனைவி துடிக்கிறாள். மனைவியை மரத்தடியில் இருக்க வைத்துவிட்டு மருத்துவிச்சியை அழைத்துவரப் புரோகிதன் செல்கிறான். காற்றும் மழையும் பலமாகிறது.

மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்த அம்பொன்று காற்றின் வேகத்தால் விடுபட்டு வந்து மனைவின் வயற்றில் குத்துகிறது. அம்பு குத்தியதனால் மனைவியும் வயிற்றில் இருந்த குழந்தையும் இறக்கின்றனர். புரோகிதனும் மருத்துவிச்சியும் வந்து பார்த்தபோது மனைவி அம்புபட்டுப் பிணமாகக் கிடக்கிறாள். அதிர்ச்சியடைந்த புரோகிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். மரத்தின் பின்புறமாக வேடன் ஓருவன் மழைக்கு ஒதுங்கி வில்லும், அம்பறாத்துணியில் அம்போடும் நிற்கிறான். வேடன் கையும் மெய்யுமாகப் பிடிபடடான். மனைவி இறந்து கிடக்கிறாள். வில், அம்போடு வேடன் நிற்கிறான். இரு சாட்சிகளும் இருக்கின்றனர். வேடன் மறுக்கிறான். புரோகிதனும் மருத்துவிச்சியும் நம்பவில்லை. வேடனைப் பாண்டிய மன்னனிடம் அழைத்துச் செல்கின்றனர்’.

‘வேடன் அரச சபையில் மன்னனுக்கு முன்னால் நீறுத்தப்படுகிறான். விசாரணை நடக்கிறது. இரு சாட்சிகளும் வேடன் கொலை செய்தான் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். வேடன் தான் கொலை செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறான். மன்னனுக்குத் தரும சங்கடமாகிறது. நாளை தீர்ப்புக் கூறப்படும் எனத் தீர்ப்பினை ஒத்தி வைக்கிறான். நீதி தவறாமல் தீர்ப்புக் கூறும் மன்னனுக்கு இவ்வாறு ஒரு சோதனை வந்ததையிட்டு வேதனை அடைந்து சொர்க்கநாதப் பெருமானிடம் முறையிடுகிறான். மன்னன் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஓர் அசரீரி கேட்கிறது. “மன்னா இந்தத் தெருவில் நாளை நடக்கும் திருமணத்திற்கு மாறு வேடத்தில் புரோகிதனையும் அழைத்துக் கொண்டு வா” என்றதும் திடுக்கிட்டு சொர்க்கநாதரை வழிபடுகிறான். காலையில் இருவரும் மாறு வேடத்தில் குறித்த தெருவில் நடக்கும் திருமணத்திற்குச் செல்கின்றனர். ஊர்வலமாக மேள, தாளம், நாதஸ்வரம் முழங்க மணமகன் அழைத்து வரப்படுகிறான். திருமணப் புரோகிதருக்குத் தானம் கொடுப்பதற்காக பசுவொன்று யாக குண்டத்துக்கு அருகில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது’.

‘மன்னனுக்கு அருகில் நின்ற எமதூதர்கள் இருவர் தமக்குள் பேசிக் கொள்கின்றனர். அதில் ஒருவர் “மணமகனின் உயிரை எப்படி எடுக்கப் போகின்றோம்” எனக் கேட்க, மற்றையவர் “நேற்று நாம் காற்றையும் மழையையும் வரவழைத்து. எப்பவோ எய்து மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்த அம்பைக் கொண்டு புரோகிதனின் மனைவியின் உயரைப் பறித்தது போல் இன்றைக்கு அங்கே கட்டி இருக்கும் பசுவுக்கு உருவேற்றிப் பசுவைக் கொண்டு மணமகனைின் உயிரைப் பறிக்கப் போகிறோம்” என்றதும் மன்னன் “உனது மனைவியை நேற்று யார் கொன்றார்கள் என்பது உனக்கு இப்போது விளங்குகிறதல்லவா. மணமகனைக் காப்பாற்றி, சுற்றவாளியான வேடனை விடுதலை செய்ய வேண்டும். வா போகலாம்” எனக் கூறுகிறான். அதைக் கேட்ட புரோகிதன் “இல்லை இல்லை நான் நம்ப மாட்டேன். இந்தப் பசு மணமகனைக் கொம்பினால் குத்திக் கொல்வதைப் பார்த்தபின்தான் நம்புவேன்” எனக் கூறியதும் அரசனுக்குக் கோபமும் வருகிறது. மணமகன் ஊர்வலம் அருகில் வந்துவிட்டது. எமதூதர்கள் பசுவைப் பார்க்கின்றனர்.

பசுவுக்கு உருவேறிக் கட்டி இருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு மணமகனின் வயிற்றில் கொம்பினால் குத்துகிறது. மணமகன் இறக்கிறான். மணவறை பிணப்பறையாக மாறுகிறது. பசு சாதுவாகி நிறகிறது. அரசனும் புரோகிதனும் அங்கிருந்து சென்று வேடனை விடுவிக்கின்றனர்’. மன்னன் தவறான தீர்ப்பினை வழங்கினான் என்ற பழி மன்னனுக்கு வந்துவிடக்கூடாது என அஞ்சியமையினால் திருவிளையாடல் புராணத்தில் இக்கதை பழி அஞ்சிய படலமாக வைக்கப்பட்டுள்ளது. இக்கதை ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற உண்மையை வெளிப்படுத்தி நிறகிறது.

‘காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்’ காரண, காரியங்களும் அதற்கெனச் சூட்டப்படும் பெயரும் மாறிக் கொண்டு போகலாம். ஒருவர் இறப்பதற்கு அல்லது செயலொன்று நடப்பதற்குக் காரணம் ஒனறுதான் இருக்க முடியும். நமது அறியாமையின் காரணமாகப் பலவாறு கற்பிதம் செய்கிறோம். மகாபாரதத்தில் திருதராட்டினன் கிருஷ்ணரிடம் “கண்ணா பாரதப் போரில் எனது பிள்ளைகள் நூறு பேரும் ஏன் இறந்தார்கள். அதற்கான காரணத்தைக் கூறு” எனக் கேட்கிறார். அதற்குக் கிருஷ்ணர் கதை ஒன்று கூறுகிறேன் கேள் “ஒரு மன்னனுக்கு விதம் விதமாகச் சமைத்துப் போடுவதற்கு கைதேர்ந்த சமையல்காரன் ஒருவனை வைத்திருந்தார். அவன் மன்னருக்குத் தினமும் வாயக்கு ருசியாகச் சமைத்துக் கொடுத்தான். மன்னனிடம் இருந்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக ஏரியில் வளர்க்கப்பட்டு வந்த அன்னம் ஒன்றைப் பிடித்து சமைத்துக் கொடுத்தான். மன்னரும் “இன்று சமையல் நல்ல ருசியாக இருக்கிறது. பிரமாதம்” என்று சமையல்காரனை வாழ்த்தினார். சமையல்காரனும் தினம் ஒரு அன்னத்தைப் பிடித்துச் சமைத்துக் கொடுத்தான். மனனரும் மகிழ்ச்சியோடு உண்டு களித்து மகிழ்ந்தார். நூறாவது நாள் தாய் அன்னம் மன்னருக்குச் சாபமிடுகிறது. “மன்னா எனது வாரிசுகளான நூறு அன்னங்களைக் கொன்று உண்டுவிட்டாய். நீ நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் நீ தடுக்கவில்லை. அடுத்த பிறப்பில் உனக்கு நூறு பிள்ளைகள் பிறப்பார்கள்.

அவர்கள் உனக்கு வாரிசு இல்லாமல் கொல்லப்படுவார்கள். புத்திர சோகத்தால் நான் வருந்துவது போல் நீயும் வருந்துவாய். இது நடக்கும்” எனக் கூறிச் சென்றுவிட்டது. இப்பிறவியில் நீதான் அன்னத்தினால் சாபமிடப்பட்ட மன்னன். அன்னத்தின் சாபப்படியே உனது புத்திரர்கள் அனைவரும் இறந்தார்கள். நீ இப்போது புத்திர சோகத்தால் வருந்திக் கொண்டிருக்கிறாய். இதுதான் உனது வினைப்பயன்” என கிருஷ்ணர் கூறினார். இந்தக் காரண, காரியம் புரியாமல் பாரதப் போரின்மீது பழியைப் போடுகின்றோம். இவ்வாறுதான் ஒவ்வொன்றும் நடந்து நிறைவேறுகின்றன. இதுவும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதே.
சூறாவளி, சுனாமி, வெள்ளம் வந்த போதும், உள்நாட்டு யுத்தம் ஏற்பட்ட போதும் இலச்சக் கணக்கான உயிர்களும் கோடிக்கணக்கான உடமைகள், உட்கட்டுமான வசதிகள் என எல்லாம் பாதிக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் வணக்கத் தலங்களும் பாதிக்கப்பட்டன. அனர்த்தங்கள் ஏற்பட்ட போதெல்லாம் அழிவுகள் யாவும் நடந்தேறின. அனர்த்தங்கள் நடந்த போது கடவுளர்கள் அவர்களுக்கு அமைக்கப்பட்ட கோயில்களையோ உடமைகளையோ பாதுகாக்கவில்லை.

நேபாளத்தில் நில நடுக்கம் றேபட்ட போது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, மிகப் பழமைவாய்ந்த இரு கோயில்கள் அழிந்தன. அதேபோல் உத்தரகாண் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட போதும் ஒடிசா மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட போதும் பல இந்துக் கோயில்கள் அழிந்தன. சிரியாவில் நில நடுக்கம் ஏற்பட்ட போது பல பள்ளிவாசல்கள் உட்படப் பல வணக்கத் தலங்கள் அழிந்தன. இந்தச் சந்தர்பங்களில் கடவுளர்கள் அதனைத் தடுக்க முற்படவில்லை. காரணம் அவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள், யாவும் கடந்தவர்கள் என்பதால் இன்னொருவருடைய துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத்தில் நம்மைப் போல் அவர்கள் பிறரின் பணியில் தலையிடவில்லை, தடுக்கவுமில்லை. நல்லதோ கெட்டதோ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

பிறப்பு, வாழ்வு, சாவு, இன்பம், துன்பம், துயரம், வெற்றி, தோல்வி, சோதனை, வேதனை எல்லாமே நாம் பலவீனமாக இருக்கும் போது எம்மை வந்து சேரும். அது செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டுச் செல்லும். இங்கு எதுவும் நிரந்தரமல்ல. எல்லாமும் ஒரு முறைமைக்குட்பட்டே நடந்து கொண்டிருக்கின்றன. ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’ உறுதியோடு வாழ நினைப்பவன், வாழ முயற்சிப்பவன், சாதனைகள் பல புரிய எத்தனிப்பவர்கள் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழுவார்கள். ஏனையோர் வாழ்க்கையில் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பர். நடக்க வேண்டிய காரியம் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். வாழ்க்கை ஒரு சக்கரம் போன்றது.

அந்த வட்டத்துக்குள் ஒரு சதுரம் போலவே பெரும்பாலானோர் எல்லைப்படுத்திக் கொண்டு வாழ்கின்றனர். பிறப்பும் இறப்பும் நிரந்தரமானது என்பது போல் வாழ்வும் தாழ்வும் நிரந்தரமற்றது என்பதைப் புரிந்து கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதுவே உத்தமமானதுமாகும். நல்லதோ தீயதோ எல்லாமே நடக்க வேண்டிய காலத்தில் நடக்கும், நடந்திருக்கும். ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழப் பழகிக் கொள்வோம்.

பகவக்கீதையில் வரும் கீதாசாரத்தைப் புரிந்து கொண்டால் எதுவும் நிரந்தரமில்லை என்பது விளங்கிவிடும். அதுவே, வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம். இது புரியாது யாவும் நிரந்தரமென்று மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘யாவும் கடந்து போகும்” என்பதே நிரந்தரமாகும். கடந்து போன வாழ்க்கையை நினைத்து வருந்துவதை விடுத்து மீதமிருக்கும் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முயற்சிப்பதே சிறந்தது. அதுவே மேலானது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button