இலங்கை

நாமலை ஜனாதிபதியாக்கும் வரை ஓயப்போவதில்லை!

நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த தேசியவாத அமைப்பான ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமங்கள் தோறும் வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவை தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்களிடம் வந்து, அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்கிறார்கள். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயற்படும் தரப்பினர், அவரிடமிருந்து விலகுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அவர்களுக்கு நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறோம்; உங்களுக்கு இருப்பது போன்ற முதுகெலும்பில்லாத நிலை எங்களுக்கு இல்லை. நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை.

இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள்.

 

இன்று மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை சிறைவைத்து, இந்த நாட்டுக்குச் சேவை செய்த அந்த அன்பான இராணுவ வீரரைத் தண்டித்து, சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்கள். நாம் இன்று அனுபவிக்கும் இந்தச் சுதந்திரத்துக்கு, அன்றைய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய சுரேஷ் சலே போன்றோரின் அர்ப்பணிப்புதான் காரணம்.

 

அவரைத் துன்புறுத்துவது மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ அல்லது நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரைச் சிதைப்பதற்காகவே ஆகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டு, இன்று சுரேஷ் சலேவைக் கைது செய்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் அந்தத் தாக்குதலை நடத்திய இப்ராஹிம் என்பவர் அன்றே அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார்.

 

ஆனால், உண்மையான சூத்திரதாரிகள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள். தனது உயிரையும் பொருட்படுத்தாது நாட்டுக்காகப் பணியாற்றிய சுரேஷ் சலேவைப் பார்க்க இன்று அவரது மனைவியும் பிள்ளைகளும் சென்றபோது, நான் இந்த நாட்டை நேசித்தேன், இன்றும் நேசிக்கிறேன், எனது இறுதிக்காலத்தில் எனது கண்களைத் தானம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று அவர் கூறியதாக அறிந்து நான் கண்கலங்கினேன். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button