முச்சந்தி

ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமர்: பொருளாதார – அரசியல் நெருக்கடியை தீர்ப்பாரா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உலகில் சூரியன் முதல் உதிக்கும் சாம்ராஜ்ஜியத்தில் வரலாறு படைக்கிறார் ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகாய்ச்சி. இவரது வெற்றி ஜப்பானிய அரசியலில் ஒரு புதிய புரட்சியாக கருதப்படுகிறது.  ஆனாலும் அமெரிக்காவின் டிரம்ப் அரசுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. அந்த சவாலை டகாய்ச்சி எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை ஜப்பான் நிறுத்த வேண்டும் என்றும், ராணுவத்திற்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்ற டிரம்ப் வேண்டுகோளை நிறைவேற்றுவது அவருக்கு பெரும் சவாலாகவே அமையும்)
வரலாறு படைக்கும் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே டகாய்ச்சி, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சரின் அபிமானி ஆவார். அறுபத்தி நான்கு வயதான பழமைவாதத் தலைவரான சனே டகாய்ச்சி, ஜப்பானின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படுகிறார்.
முதல் பெண் ஆளுமை:
ஜப்பானில் முன்னைய ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் பெரும்பான்மையை இழந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் ஷிகெரு கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, உட்கட்சியில் வாக்கெடுப்பு நடந்தது. இதன் விளைவாக லிபரல் ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சனே டகாய்ச்சி (Sanae Takaichi) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சனே டகாய்ச்சி லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் ஆவார்.
ஜப்பானில் லிப்ரல் ஜனநாயக கட்சி என்பது மிகவும் பழமைவாத கட்சி ஆகும். இப்படிப்பட்ட கட்சிக்குள் இருந்து பெண் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சனே, இது ஒரு புதிய சகாப்தம் என்று கூறியிருந்தார்.
லிபரல் கட்சியின் தொடர் தோல்வி:
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக தோல்விகளை லிபரல் ஜனநாயக கட்சி சந்தித்திருந்தது. இக்கட்சியின் தாராளமயக் கொள்கை தற்போது ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சனே டகாய்ச்சி பிரதமராக இது அவரது மூன்றாவது முயற்சியாகும். அவரது கட்சியான LDP ஐந்து ஆண்டுகளில் நான்கு பிரதமர்களைக் கண்டுள்ளது. இவர் LDP இன் கடும்போக்கு பிரிவைச் சேர்ந்தவராவார். மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் ஆதரவாளராக இருந்து உள்ளார்.
தற்போது பதவிக்கு வரும் அவருக்கு, டிரம்ப் விதித்த வரியும் ஜப்பானை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. இதையெல்லாம் சனே எப்படி எதிரகொள்ளப்போகிறார் என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
ஜப்பானிய அரசியலில் புரட்சி:
ஜப்பானிய அரசியலில் ஒரு புதிய புரட்சியாக கருதப்படுகிறது. அவர் கட்சித் தலைவராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் பிரதமராக தேர்வு ஆவதற்கான வாக்கெடுப்பு, அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், மொத்தம் உள்ள 465 ஓட்டுகளில், 237 ஓட்டுகளை பெற்று, சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, மேலவையில் நடைபெறும் வாக்கெடுப்பிலும் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜப்பானின் புதிய பிரதமராக அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக ஒரு பெண் பதவியை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்று, டகாய்ச்சி புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஜப்பான் வரலாற்றிலேயே, முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். வலிமையான பெண்ணாக அறியப்படும் சனே டகாய்ச்சி, ஜப்பானின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு வளமான ஜப்பானை மறுவடிவமைத்து கொடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.
சூரியன் முதலில் உதிக்கும் நாடு:
ஜப்பானை ‘சூரியன் முதலில் உதிக்கும் நாடு’ என்றும் அழைக்கப்படுகிறது. கடின வேலை மீதான ஆர்வம், வாழ்வியல் தத்துவம் (இக்கிகை), மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்றவற்றுக்குப் ஜப்பானிய மக்கள் பெயர் பெற்றவர்கள்.
ஜப்பானியர்கள் புதுமைகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் பெற்றவர்கள். சிலர் தனிமையை தேர்ந்தெடுத்து வாழும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர்.
ஜப்பானியர்கள் தம் பணியின் மீது மிகுந்த ஆர்வம் காட்டுபவர்கள். மேலும், ‘இக்கிகை’ (ikigai) என்ற வாழ்வியல் தத்துவத்தை பின்பற்றி நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
அவர்கள் வயிறு நிரம்ப சாப்பிடுவதைத் தவிர்ப்பது போன்ற சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளனர்.
நெருக்கடியிலிருந்து தப்புமா ஜப்பான்?
புதிய பிரதமர் பெண்களின் உடல்நலப் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டிரம்ப் அரசுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. அந்த சவாலை டகாய்ச்சி எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை ஜப்பான் நிறுத்த வேண்டும் என்றும், ராணுவத்திற்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார். அது குறித்தும் ஒரு திடமான முடிவை டகாய்ச்சி எடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறான உலகளாவிய சவால்களை புதிய பெண் பிரதமர் வெற்றிகரமாக சமாளித்து விடுவார் என்றே ஜப்பானிய மக்கள் திடமாக நம்புகிறார்கள்.
மேலும் மந்தமான பொருளாதாரத்தை எதிர்த்துப் போராடுவது, பாழடைந்த அமெரிக்க-ஜப்பான் உறவை வழிநடத்துவது மற்றும் ஊழல்கள் மற்றும் உள் மோதல்களால் உலுக்கிய ஆளும் கட்சியை ஒன்றிணைப்பது ஆகியவை அவரது பல சவால்களில் அடங்கும்.
உலகில் பெண் பிரதமர்கள்:
உலகளாவிய ரீதியில் அரசியலில் அதிக அளவில் பெண்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல் மூலமாக ஒரு நாட்டை ஆளும் வல்லமையை அடைந்துள்ளனர். உலக அளவில் அதிக காலம் பதவியில் உள்ள பெண் தலைவராக கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனா என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வங்காளதேசத்தின் பிரதமருமான ஷேக் ஹசீனா 1996 முதல் 2001 வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 2008-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். 2008 முதல் 2024 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டம் காரணமாக அவர் பதவியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதன் மூலம் ஷேக் ஹசீனா 16 ஆண்டுகளாக அதிக காலம் பதவி வகித்து வந்த உலகின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 15 ஆண்டுகளும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் 14 ஆண்டுகளும், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரட் தாட்சர் 11 ஆண்டுகளாக அதிக காலம் பதவி வகித்த பெண் தலைவர்கள் என்ற பெருமையை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல நாடுகளில் பெண்கள் தலைமைப் பதவிகளை வகித்து வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது ஜப்பானில் பெண் ஒருவர் தலைமை பதவியை வகிக்கிறார். ஆயினும் ஜப்பான் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தேர்வாகியிருக்கிறார். இவர் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *