முச்சந்தி

கண்டி செல்வ விநாயகர் ஆலயம் தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம்

கண்டி செல்வ விநாயகர் ஆலயம் தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.இவை அனைத்தும் உறுதி செய்யப்படாத தகவல்கள் எனத் தெரிவித்துள்ள இராதாகிருஷ்ணன் எம்.பி, இது தொடர்பில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எந்தக் காரணம் கொண்டும் இந்த ஆலயத்தை தலதா மாளிகை நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொள்வதோ அல்லது தற்பொழுது இருக்கின்ற நிர்வாகம் அதனை தலதா மாளிகை நிர்வாகத்திடம் கையளிப்பதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே தேவையற்ற இன முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

ஏனெனில் இந்த அரசாங்கம் ஏனைய கடந்த கால அரசாங்கங்களைப்போல இனரீதியாக செயற்பட்டதாகத் தெரியவில்லை.எனவே நாம் தேவையற்ற கருத்து பரிமாறல்களைத் தவிர்க்க வேண்டும். மிகவும் நிதானமாகக் கையாள வேண்டிய விடயங்களை பொது வெளியில் பேசுகின்ற பொழுது நாகரீகமாக, சரியான, உண்மையான தகவல்களைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

கண்டி செல்வ விநாயகர் ஆலயமானது உலக அனைத்து இன மக்களும் பாரிய நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆலயமாகும். எனவே அது தொடர்பான விடயங்களை பொது வெளியில் பகிர்கின்ற பொழுது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். எனவே ஆலயத்தின் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அதனை சுமுகமாகப் பேசி நீதிமன்றத்தின் ஊடாக தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வார்கள். நீதிமன்றமும் அதனுடைய கடமையைச் சரியாகவே செய்யும். வெளியில் உள்ள நாம் நிதானமாக இருந்தாலே போதுமானது. எனவே தேவையற்ற விடயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *