இலங்கை

நாட்டின் அபிவிருத்திக்காகக் கடனாகப் பெற்றதில் 600 கோடி டொலர் எங்கே போனது?; பெரும் புதிராகவே உள்ளது என்கிறார் அமைச்சர் 

நாட்டின் அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் 8 பில்லியன்(800 கோடி)அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ள போதும், தற்போது உள்ள அதன் கையிருப்பு 2 பில்லியன் (200 கோடி)அமெரிக்க டொலர்கள் மாத்திரமே உள்ளது. மிகுதி 6 பில்லியன்(600 கோடி) அமெரிக்க டொலர்களுக்கும் என்ன நடந்தது என்பது புதிராகவே உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பொலிஸ் குற்றச் செயல்கள் வரும்படிகள் விசாரணைப் பிரிவு” (பி.சி.ஐ.டி) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் நேற்று திங்கட்கிழமை காலை பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பழைய கட்டிடம் ஒன்றில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,மேலும் பேசுகையில்,

நாட்டில் பல்வேறு தரப்பினரால் முறைகேடான விதத்தில் சொத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையை முறியடிப்பதற்காக பொலிஸ் குற்றச் செயல்கள் வரும்படிகள் விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஏனைய முறைகேடான விதத்தில் ஈட்டிய சொத்துகளை இனி எந்த தரப்பினரும் அனுபவிக்க முடியாது.

கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 8 பில்லியன்(800 கோடி)அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ள போதும், தற்போது உள்ள அதன் கையிருப்பு 2 பில்லியன் (200 கோடி)அமெரிக்க டொலர்கள் மாத்திரமே என கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 6 பில்லியன்(600 கோடி) அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது என்பது புதிராக உள்ளது. நாட்டினுள் பல்வேறு தரப்பினரால் முறைகேடான விதத்தில் சொத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையை முறியடிப்பதற்காக இந்த விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்ற குற்றச் செயல்கள் வரும்படிகள் சட்டத்தின் பிரகாரம் இந்த பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு இப்பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள உலகக்குழு தொடர்பான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நிகழ்நிலைப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் நீதி அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எவ்வாறெனினும் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் அப்பணிகள் பூர்த்தி செய்யப்படும். பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை இல்லாமல் செய்து அதற்கு நிகரான புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அவசியமான குழு நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இயற்றப்படும் சட்டங்கள் சமூகம் உணரும் வகையில் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும். பொது மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நேரத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம். பாதாள உகக்குழுச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொள்பவர்களாவர். அகையால் பாதாள உலகச் செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் இந்த புதிய பொலிஸ் பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஏனைய முறைகேடான செயற்பாடுகளினூடாக ஈட்டிய சொத்துகளை இனி எந்த தரப்பினரும் அனுபவிக்க முடியாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button