முச்சந்தி

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் கனடா!…. தமிழர் தாயகத்தை அங்கீகரிக்குமா?….  நவீனன்

(பிரான்ஸ், இங்கிலாந்துக்கு அடுத்ததாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க போகும் மூன்றாவது G7 நாடாகிறது கனடா. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எப்போதும் ஆதரவாக கனடா இருக்கிறது. ஆனால் தமிழர்களது தாயக கோட்பாட்டை கனடா அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பது ஐயமே)
செப்டம்பரில் பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரித்துக் கொள்ளும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்ததாக கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், அண்மையில் இந்த முடிவை எடுக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.
ஈழத்தில் தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான பொறுப்பு க்கூறலை நோக்கிய உண்மை மற்றும் நீதிக்கான அழுத்தத்திற்கு சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உறுதி செய்யும் வகையில், கனடா அரசு தனிநாட்டு தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைப் போல நீண்ட காலமாக தாயக சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு கனடா ஆதரவு அளிக்குமா என்பதில் பல கேள்விகள் எழுகின்றன.
ஆனாலும் நீண்டகால ஆயுத போராட்டத்திற்கு பின்னர், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை சிறிலங்கா அரசு மறுத்து வருகின்றது.
இந்த சூழலில் பாலஸ்தீன மக்களின் விடுதலை போராட்டம் சர்வதேச ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பல ஐரோப்பிய நாடுகளும் தங்களது நிலைப்பாட்டை மாற்றி வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தனிஅரசை எதிர்த்து வந்தன. ஆனால் இந்த நாடுகளே எதிர்வரும் செப்டம்பரில் தனியரசுக்கான ஆதரவை வழங்கி அங்கீகாரத்தை வலுப்படுத்த உள்ளன.
பாலஸ்தீன – கனடா ஆதரவு:
காசாவில் தொடரும் போரின் காரணமாக பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா ஏற்றுக்கொள்ளும் என கனடா பிரதமர் மார்க் கார்னியும் அறிவித்துள்ளார். இதன்மூலம், அண்மையில் இந்த முடிவை எடுக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.
ஜனநாயக சீர்த்திருத்தங்களை பாலஸ்தீன தேசிய ஆணையம் (PA) முன்னெடுக்க வேண்டும். ஹமாஸ் பங்கேற்பு இல்லாமல் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை கனடா பிரதமர் மார்க் கார்னி விதித்துள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் கனடிய தூதர்களும், பாஸலஸ்தீன அங்கீகாரத்தை ஆதரித்து கார்னிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காசாவில் மனிதர்கள் வதைப்படுவது சகிக்க முடியாத அளவில் உள்ளது. அது மேலும் மேலும் மோசமடைந்தும் வருகிறது. அதே நேரத்தில், பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் பாலஸ்தீன தேசிய அணையம், தனது ஆட்சி முறையை திருத்தி, ஆயுதமில்லா நிலைமைக்கு உடன்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் பிரதமர் கார்னி விதித்துள்ளார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அபாஸுடன் அதன் நிலை பற்றி பிரதமர் கார்னி பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய பாலஸ்தீன அரசு மேற்கு கரையை கட்டுப்படுத்தும் பத்தாஹ் கட்சியின் கீழ் இயங்குகிறது. காசா பகுதியில் ஹமாஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. 2006 இற்குப் பிறகு இந்த பகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கனடா எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளது. அக்டோபர் ஏழில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைக்குப் பிறகு பாலஸ்தீனை அங்கீகரிப்பது தவறான சமிக்ஞையை உலகுக்கு தருவதாக அக்கட்சி கூறி உள்ளது.
காசாவில் பட்டினிக் கொடுமை:
காசாவில் இந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 156 சிறுவர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். பலரும் வாரக் கணக்காக தண்ணீர் அருந்தாமல், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். உணவு, தண்ணீர் தேடிச் செல்லும் பலர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் நீர் நிலைகளில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நுழைந்து அழித்து வருகிறது. காசாவில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் இஸ்ரேலிய இராணுவம் தடுத்து வருகிறது.
காசாவில் பட்டிச் சாவை நோக்கிய எலும்பும் தோலுமான பாலஸ்தீன குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு நெஞ்சை உலுக்குகின்றன. உலகம் முழுவதிலும் பாலஸ்தீன மக்களின் கொடுமைகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கனடாவின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஹமாஸுக்கு சாதகமான முடிவு என விமர்சித்துள்ள அவர், இது ஹமாஸுக்கு வழங்கப்படும் பரிசாகும் என்று எக்ஸ் சமூக தளத்தில் தெரிவித்துள்ளார்.
193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை உள்ள அரசாக தற்போது அங்கீகரித்துள்ளன.
தமிழர் வலியை உணரும் கனடா பிரதமர்:
தமிழர் தாயகத்தில் தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாக கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் கனடா ஆதரிக்கிறது.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை நோக்கிய உண்மை மற்றும் நீதிக்கான அழுத்தத்திற்கு சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இனத்துவேச வெறுப்பை எதிர்க்கிறோம். அந்த வகையில், வணிக மற்றும் சமூகத் தலைவர்களாக இருந்து, எங்கள் சமூகத்தின் துடிப்பை மேம்படுத்துவது வரை கனடா வாழ் ஈழத்தமிழர்கள் பலரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கனடா நாட்டிற்கு தமிழர்கள செய்யும் மகத்தான பங்களிப்புகளை பாராட்டி, நன்றியுடன் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தமிழர் பங்களிப்பு:
போரால் பாதிக்கப்பட்ட பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப் போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ( Justin Trudeau ) கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். கனடாவில் வாழும் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தலையீடுகள் தொடர்பில் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
கனடாவில் தமிழர் குடியேற்றம்:
இந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் கனடாவில் தற்போது ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர். கனடாவின் ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலேயே அதிகளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏனைய மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்களவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1970-ஆம் ஆண்டு தொடங்கி 1980-ஆம் ஆண்டுக்குப் இடைப்பட்ட காலத்திலேயே கனடாவில் ஈழத் தமிழர்கள் குடியேற ஆரம்பித்தனர். ஈழத் தமிழர்களே கனடாவில் முதல் முதலில் குடியேற்றத்தின் மூலம் தமிழ் தேசிய உணர்வு கனடாவிலும் பரவ ஆரம்பித்தது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர், கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை நோக்கி பெருமளவான இலங்கைத் தமிழர்கள் செல்வதற்கு காரணமாகவும் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா அரசியலில் தமிழர் வகிபாகம்:
கடந்த சில ஆண்டுகளில் கனடாவில் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக தமிழர்கள் மாறிவிட்டனர் என்றே தோன்றுகிறது. டொரோன்டோ, ஒன்டோரியோ, அல்பெர்டா போன்ற பல மாகாணங்களில் தமிழர்கள் கூட்டாக ஒரே பகுதியில் வசித்து வருவதுடன், அந்தப்பகுதிகளில் அரசியல் மட்டுமின்றி, அரசு இயந்திரத்திலும் தமிழர்கள் கோலோச்சி வருகின்றனர்.
தற்போது கனடா மத்திய அரசாங்கத்தில் இரண்டு தமிழர்கள், முக்கிய இரண்டு அமைச்சு பதவிகளை வகித்து வருகின்றமையானது, கனடாவில் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
மேலும் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரே இவ்வாறு கனடா மத்திய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் முன்பு கனடாவின் முதல் மக்களவை உறுப்பினராக, ராதிகா சிட்சபேசன் தேர்வாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோன்று, மாகாண மற்றும் நகர அரசியலிலும் இலங்கை மற்றும் இந்திய நாடுகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள், தமது பங்களிப்புக்களை பாரியளவில் வழங்கி வருகின்றனர். அத்துடன், கனடாவில் வாழும் தமிழர்கள், அனைத்து துறைகளிலும் தமது பங்களிப்புக்களை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக அரசியல், சுய தொழில், வர்த்தக நடவடிக்கைகள், மருத்துவத் துறை, பொறியியலாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமது ஆதிக்கத்தையும், பங்களிப்பையும் தமிழர்கள் செலுத்தி வருகின்றனர்.
கனடாவில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு நிகராக, இந்திய மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்களும் வாழ்ந்து வலுவான நிலையில் இருக்கிறார்கள்.
தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க போகும் மூன்றாவது G7 நாடாகிறது கனடா. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எப்போதும் ஆதரவாக கனடா இருக்கிறது. ஆனால் தமிழர்களது தாயக கோட்பாட்டை கனடா அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பது ஐயமே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *