மேற்குலகின் இஸ்ரேலிய முரண்நிலை…. பாலஸ்தீன சர்வதேச அங்கீகாரம்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனியாதிக்க வல்லரசாக இருந்த பிரித்தானியா உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு தேசிய இனத்தை, தனியாக பிரிந்து செல்ல அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு ஐரோப்பிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாகவே கருதப்படுகிறது.
பாலஸ்தீனம் ஐநாவில் முழுமையாக அங்கீகரிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. பல தசாப்த போராட்டங்களின் பின்னர் உலகமெங்கும் பாலஸ்தீன ஆதரவுக் குரல், ஒரு தேச அங்கீகாரமாக மாறி வருகிறது. மேற்குலக வரலாற்றில் பிரான்ஸின் முதல் அங்கீகார நகர்வு பாலஸ்தீன மக்களின் தேசக் கோரிக்கையை மற்றய சர்வதேச நாடுகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தம் மேற்குலக நாடுகளின் மேலாக இருந்தாலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீன அங்கீகாரம் வலுப்பெற்று வருகிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இதன் விளைவாக பாலஸ்தீனம் தனி நாடாவதைத் தடுக்கும் அதிகாரம் இஸ்ரேலுக்கு வழங்கப்படுவதுதான் இறுதியில் மிச்சம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலின் காசா மீதான கொடும் போர் மனிதாபிமான கேள்விகளைத் தீவிரமாக உலகெங்கும் எழச் செய்துள்ளது. அண்மையில் பிரான்ஸ் முதல் ஜி 7 நாடாக, ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம் எனத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து பிரித்தானியா, அவுஸ்திரேலியா, தற்போது கனடாவும் இதே முடிவை எடுத்துள்ளது. சீனா, ரஷ்யா ஆகியவை ஏற்கனவே தனித் தேசமாக அங்கீகரித்துள்ளன.
ஐநாவில் பாலஸ்தீன அங்கீகாரம்:
ஐநாவில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளன. என்றாலும் இஸ்ரேலுக்கு வரையறையற்ற ஆதரவு வழங்கும் அமெரிக்காவும், அதன் உறவு நாடுகளான ஜப்பான், கொரியா போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்துக்குத் தனி நாடு அங்கீகாரம் வழங்குவதை எதிர்த்து வருகின்றன.
ஐநாவில் ஒரு நாடு அங்கீகரிக்கப்படப் பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் அவசியம். பாலஸ்தீனம் 2011ம் ஆண்டே தனி நாடாக அங்கீகாரம் பெற விண்ணப்பித்திருந்தாலும் தொடர்ந்து அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது.
ஐநாவில் தற்போது பாலஸ்தீனம் பார்வையாளராக உள்ளது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உட்படப் பல சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. 2024 பாலஸ்தீனம் விவாதங்களில் பங்கேற்கவும் தலைப்புகளை முன்மொழியவும் உரிமை வழங்கப்பட்டது. ஆனாலும், விவாதங்களில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
2024ல் இதுகுறித்த விவாதத்தில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் அங்கீகாரத்தைத் தடுத்தது அமெரிக்கா. அவுஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இன்னும் சில நாடுகளும் ‘இரண்டு அரசு’ (Two State Solution) தீர்வை முன்வைத்தாலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீண்ட காலமாக தயங்கி வந்தனர்.
இஸ்ரேலின் பார்வையில் பாலஸ்தீனத்துக்குத் தனி நாடு அந்தஸ்து கொடுப்பது, இஸ்ரேல் தனது பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே கருதுகிறது. தற்போது கனடா, பிரான்ஸ், பிரித்தானியா நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை, “2023 அக்டோபர் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு” எனவும் இஸ்ரேலிய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
பிரான்சின் முதல் அங்கீகாரம்:
அமைதி சாத்தியமாக, உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை. அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். காசாவுக்குப் பெரிய அளவிலான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 2025ல் நடைபெறும் ஐநா பொதுக் கூட்டத்தின் 80வது அமர்வில் அதிகாரப்பூர்வமாக பிரான்ஸ் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
பிரிட்டனிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென அரசுகளுக்கு அழுத்தம் பாரியளவில் கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே பிரான்ஸின் முடிவை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாகக் கண்டித்துள்ளன.
பிரிட்டனின் பாலஸ்தீன அங்கீகார முடிவு:
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனியாதிக்க வல்லரசாக இருந்த பிரித்தானியா உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு தேசிய இனத்தை, தனியாக பிரிந்து செல்ல அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு ஐரோப்பிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாகவே கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீன அங்கீகாரத்தை வலியுறுத்தி வருகிறது.
அவுஸ்திரேலியா தாமதிக்காது பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும், இனியும் தாமதித்தால் அவுஸ்திரேலியா உலக அரங்கில் ஒரு பிற்போக்குத்தனமான நாடாகவே கருதப்படும் என்றும் உள்நாட்டில் கான்பரா தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் மனிதாபிமான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக பிரதமர் கெயர் ஸ்டார்மர் (Keir Starmer) எச்சரித்துள்ளார்.
காசாவில் நிலவும் மோசமான நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக செப்டம்பரில் பாலஸ்தீனத்தை அரசாக பிரித்தானிய அரசு அங்கீகரிக்கும் என பிரதமர் கெயர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு, இஸ்ரேல் மீது அழுத்தம் ஏற்படுத்தும் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கும், 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களின் உயிரிழப்புக்கும் பதிலாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
காசாவில் பசியால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,பலர்
பசியால் தவிப்பதாகவும் பலர் இறந்து வருவதாகவும் பிரித்தானிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த கொடிய வேதனை மிகுந்த நிகழ்வுகள் முடிவடைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காசாவுக்குள் அதிக உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும்,மேற்கு கரையைக் கைப்பற்றி, யூத குடியேற்றங்களை பலப்படுத்த கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இருநாட்டுத் தீர்வு நோக்கி நிலையான அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இஸ்ரேல், இந்த அறிவிப்பை ஹமாஸுக்கு விருது வழங்குவது போலும், அமைதி முயற்சிகளை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை செய்தஉ விமர்சித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டார்மர், முன்னர் அமெரிக்க அணுகுமுறையுடன் இணைந்து இருந்தாலும், இப்போது புதிய அரசியல் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாறுபாடு கொண்டுள்ளமை தெரிகிறது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரிட்டன் முடிவானது,காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்ற நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் என பலரும் பாதிக்கப்பட்டு, கொல்லப்பட்டு வருகின்றனர்.
பாலஸ்தீன தனி நாடாக கனடா ஆதரவு:
பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா ஏற்றுக்கொள்ளும் என கனடா பிரதமர் மார்க் கார்னியும் அறிவித்துள்ளார். இதன்மூலம், அண்மையில் இந்த முடிவை எடுக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது.
ஜனநாயக சீர்த்திருத்தங்களை பாலஸ்தீன தேசிய ஆணையம் முன்னெடுக்க வேண்டும். ஹமாஸ் பங்கேற்பு இல்லாமல் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை கனடா பிரதமர் மார்க் கார்னி விதித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட முன்னாள் கனடிய தூதர்களும், பாஸலஸ்தீன அங்கீகாரத்தை ஆதரித்து கார்னிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காசாவில் மனிதர்கள் வதைப்படுவது சகிக்க முடியாத அளவில் உள்ளது. அது மேலும் மேலும் மோசமடைந்தும் வருகிறது. அதே நேரத்தில், பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் பாலஸ்தீன தேசிய அணையம், தனது ஆட்சி முறையை திருத்தி, ஆயுதமில்லா நிலைமைக்கு உடன்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் பிரதமர் கார்னி விதித்துள்ளார்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அபாஸுடன் அதன் நிலை பற்றி பிரதமர் கார்னி பேசியதாகவும்
தெரிவித்துள்ளார். தற்போதைய பாலஸ்தீன அரசு மேற்கு கரையை கட்டுப்படுத்தும் பத்தாஹ் கட்சியின் கீழ் இயங்குகிறது. காசா பகுதியில் ஹமாஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. 2006 இற்குப் பிறகு இந்த பகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கனடா எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளது. அக்டோபர் 7 இல் நடந்த பயங்கரவாத நடவடிக்கைக்குப் பிறகு பாலஸ்தீனை அங்கீகரிப்பது தவறான சமிக்ஞையை உலகுக்கு தருவதாக அக்கட்சி கூறி உள்ளது.
காசாவில் பட்டினிக் கொடுமை:
காசாவில் இந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 156 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். பலரும் வாரக் கணக்காக தண்ணீர் அருந்தாமல், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். உணவு, தண்ணீர் தேடிச் செல்லும் பலர் இஸ்ரேல் ராணுவத்தால்
கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் நீர் நிலைகளில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நுழைந்து அழித்து வருகிறது. காசாவில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் இஸ்ரேலிய இராணுவம் தடுத்து வருகிறது.
காசாவில் பட்டிச் சாவை நோக்கிய எலும்பும் தோலுமான பாலஸ்தீன குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு நெஞ்சை உலுக்குகின்றன. உலகம் முழுவதிலும் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவுக் குரல் ஒலிக்கிறது. மேலும் இதன் விளைவாக சர்வதேச நாடுகள் பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
![]()