முச்சந்தி

பிரிட்டனின் பாலஸ்தீன அங்கீகார முடிவு: ஐரோப்பிய வரலாற்றில் பெரும் திருப்பு முனை!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் காலனியாதிக்க வல்லரசான பிரித்தானியா உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒரு தேசிய இனத்தை, தனியாக பிரிந்து செல்ல அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவு ஐரோப்பிய வரலாற்றில் பெரும் திருப்பு முனையாகவே கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீன அங்கீகாரத்தை வலியுறுத்தி வருகிறது. அவுஸ்திரேலியா தாமதிக்காது பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் எனவும், இனியும் தாமதித்தால் அவுஸ்திரேலியா உலக அரங்கில் ஒரு பிற்போக்குத்தனமான நாடாகவே கருதப்படும் என்றும் உள்நாட்டில் கான்பரா தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானியா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை:
இஸ்ரேல் மனிதாபிமான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக பிரதமர் கெயர் ஸ்டார்மர் (Keir Starmer) எச்சரித்துள்ளார்.
காசாவில் நிலவும் மோசமான நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக செப்டம்பரில் பாலஸ்தீனத்தை அரசாக பிரித்தானிய அரசு அங்கீகரிக்கும் என பிரதமர் கெயர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு, இஸ்ரேல் மீது அழுத்தம் ஏற்படுத்தும் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கும், 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களின் உயிரிழப்புக்கும் பதிலாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
காசாவில் பசியால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,பலர் பசியால் தவிப்பதாகவும் பலர் இறந்து வருவதாகவும் பிரித்தானிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த கொடிய வேதனை மிகுந்த நிகழ்வுகள் முடிவடைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் பாலஸ்தீன அங்கீகார முடிவை எதிர்வரும் செப்டம்பரில் முடிவை எடுக்கும் என்றும், இஸ்ரேல் கீழ்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அங்கீகாரம் முழுமையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
காசாவுக்குள் அதிக உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும்,
மேற்கு கரையைக் கைப்பற்றி, யூத குடியேற்றங்களை பலப்படுத்த கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இருநாட்டுத் தீர்வு நோக்கி நிலையான அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இஸ்ரேல், இந்த அறிவிப்பை ஹமாஸுக்கு விருது வழங்குவது போலும், அமைதி முயற்சிகளை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை செய்தஉ விமர்சித்துள்ளது.
பிரான்ஸ், கடந்த வாரம் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரித்ததுடன், பிரித்தானியா அடுத்த படியாக சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கிறது. சீனா, ரஷ்யா ஆகியவை ஏற்கனவே தேசங்களாக அங்கீகரித்துள்ளன.
பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டார்மர், முன்னர் அமெரிக்க அணுகுமுறையுடன் இணைந்து இருந்தாலும், இப்போது புதிய அரசியல் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாறுபாடு கொண்டுள்ளமை தெரிகிறது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரிட்டன் முடிவானது,
காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்ற நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் என பலரும் பாதிக்கப்பட்டு, கொல்லப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து இலட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி தொடருமா ?
இஸ்ரேல் ஹமாஸ் தொடரும் போரில் இஸ்ரலின் கைகளே ஓங்கி இருக்கின்றன. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை தொடர்ந்து விநியோகித்து உதவி செய்து வருகிறது. பாலஸ்தீனம் தனிப்பிரதேசமாக இருந்த போதிலும், அதனை பல உலக நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.
தொடரும் போரை நிறுத்த உலக நாடுகளில் இருந்து பாலஸ்தீனத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஆனாலும் உலகளாவிய ரீதியில் எழுந்த அனுதாபமே பிரான்சிலும், இதே போல பிரிட்டனிலும் கோரிக்கை எழுந்தது.
அதாவது பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தொடர்புடைய தொழிலாளர் கட்சியினரே அவருக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர். அவர்களது அழுத்தத்துக்கு அடிபணிந்த பிரிட்டன் பிரதமர், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க தான் பரிசீலித்து வருருவதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தால் மட்டுமே தன்னால் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருக்கிறார்.
பிரிட்டன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பீட்டர் கெயில், பாலஸ்தீனம் தனி நாடகத் திகழ வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அங்கு நீண்ட நாட்கள் இருக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்பட வேண்டும்.
இன்றைக்கு பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கிறது என்று அமைச்சர் பீட்டர் கெயில் தெரிவித்துள்ளார்.
காசாவில் பட்டினிக் கொடுமை:
காசாவில் இந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 156 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். பலரும் வாரக் கணக்காக தண்ணீர் அருந்தாமல், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். உணவு, தண்ணீர் தேடிச் செல்லும் பலர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் நீர் நிலைகளில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நுழைந்து அழித்து வருகிறது. காசாவில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் இஸ்ரேலிய இராணுவம் தடுத்து வருகிறது.
காசாவில் பட்டிச் சாவை நோக்கிய எலும்பும் தோலுமான பாலஸ்தீன குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு நெஞ்சை உலுக்குகின்றன. உலகம் முழுவதிலும் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவுக் குரல் ஒலிக்கிறது. மேலும் இதன் விளைவாக சர்வதேச நாடுகள் பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இலண்டன் மேயர் சாதிக் கான்:
இலண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் பிரிட்டன் வெளி விவகாரங்கள் கமிட்டியும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்குமாறு பிரதமர் கெயர் ஸ்டார்மருக்கு நீண்ட காலமாக வலியுறுத்தி உள்ளனர். பாலஸ்தீனத்தை பிரிட்டன் தனி நாடாக அங்கீகரித்தால், அந்நாடு பல முனைகளில் பயன்பெறும் என பிரிட்டன் கேபினட் அமைச்சர் ஷபானா மஹமத் அவர்களும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டன் பாராளுமன்ற வெளியுறவுத்துறை கமிட்டி வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு நாம் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் பாலஸ்தீனத்தில் இன்றைக்கு நிலவும் சூழலே அதனை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு போதுமானதாக இருக்கிறது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button